கேரள விமான விபத்து; பலியானவர்களின் குடும்பத்தினருக்கு அமெரிக்கா சார்பில் இரங்கல்

கொரோனா பாதிப்பின் காரணமாக விமான போக்குவரத்து ரத்து செய்யப்பட்டு இருப்பதால், ஏராளமான இந்தியர்கள் நாடு திரும்ப முடியாமல் வெளிநாடுகளில் சிக்கி தவிக்கிறார்கள்.  அவர்கள், ‘வந்தே பாரத்’ திட்டத்தின் கீழ் சிறப்பு விமானங்கள் மூலம் இந்தியாவுக்கு அழைத்து வரப்படுகிறார்கள்.

துபாயில் சிக்கி தவித்த 10 குழந்தைகள் உள்பட 185 இந்தியர்கள் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் மூலம் நேற்று கேரள மாநிலம் கோழிக்கோடு அழைத்து வரப்பட்டனர். அவர்களில் 3 பேர் நீலகிரி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் ஆவார்கள். விமானத்தில் பயணிகள் தவிர 2 விமானிகள், 4 பணிப்பெண்கள் என மொத்தம் 191 பேர் இருந்தனர்.
துபாயில் இருந்து நேற்று பிற்பகல் 3 மணிக்கு புறப்பட்டு வந்த அந்த விமானம் இரவு 7.40 மணிக்கு கோழிக்கோடு கரிப்பூர் சர்வதேச விமான நிலையத்தை நெருங்கியதும், விமானத்தை தரை இறக்குவதற்கான முயற்சியை விமானிகள் மேற்கொண்டனர். அப்போது பலத்த மழை பெய்து கொண்டு இருந்தது.
விமானம் ஓடுபாதையில் தரை இறங்கிய போது, எதிர்பாராத விதமாக விபத்தில் சிக்கியது. ஓடுபாதையில் சறுக்கிக்கொண்டு வேகமாக ஓடிய விமானம், விமானியின் கட்டுப்பாட்டை இழந்து ஓடுபாதையை தாண்டி சென்று அருகில் உள்ள 35 அடி பள்ளத்தில் விழுந்தது. இதனால் அதில் இருந்த பயணிகள் அலறினார்கள்.
பள்ளத்தில் விழுந்த விமானம் பயங்கர சத்தத்துடன் இரண்டாக உடைந்தது. விமானி அறையில் இருந்து முன்பக்க கதவு உள்ள பகுதி வரை உடைந்து பள்ளத்தில் கவிழ்ந்தது.
இந்த விபத்தில் விமானி உள்பட 19 பேர் பலி ஆனார்கள். நூற்றுக்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயத்துடன் மீட்கப்பட்டனர்.  அவர்கள் அருகிலுள்ள நகர மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டு உள்ளனர்.
இதுபற்றி அமெரிக்க வெளியுறவு கொள்கை மற்றும் சர்வதேச உறவுகளுக்கான மாநில துறை சார்பில் இரங்கல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.  கேரள விமான விபத்தில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கும் மற்றும் அவர்களது நண்பர்களுக்கும் இரங்கலை தெரிவித்து கொள்கிறோம்.  காயமடைந்தவர்கள் மீண்டும் நலம்பெற வேண்டும் என வேண்டி கொள்கிறோம் என தெரிவித்து உள்ளது.
இதேபோன்று அமெரிக்காவுக்கான இந்திய தூதர் கென் ஜஸ்டர் கூறும்பொழுது, கேரளாவில் ஏர் இந்தியா விமானம் விபத்தில் சிக்கிய தகவல் அறிந்து நாங்கள் ஆழ்ந்த வருத்தம் அடைந்துள்ளோம்.  அமெரிக்க தூதரகம் சார்பில் அதற்கு வருத்தம் தெரிவித்து கொள்கிறோம்.  இந்த விபத்தில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களின் அன்புக்குரியவர்களை நாங்கள் நினைவில் கொள்கிறோம்.  அவர்களுக்காக இறைவனிடம் நாங்கள் வேண்டி கொள்கிறோம் என தெரிவித்து உள்ளார்.