கோட்டாவின் ‘அபிவிருத்தி’ மாயாஜாலம்!

கோட்டாவின் ‘அபிவிருத்தி’ மாயாஜாலம்!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, “…சாதாரண மக்களுக்கு அதிகாரப் பகிர்வு, சமஷ்டி பற்றிய யோசனைகள் எதுவுமில்லை. அவர்கள் அபிவிருத்தி தொடர்பிலேயே சிந்திக்கிறார்கள்..” என்று தெரிவித்திருக்கின்றார். நாட்டின் அரசியல் பிரச்சினைகளுக்கான தீர்வு தொடர்பிலான, கேள்வியொன்றுக்குப் பதிலளிக்கும் போதே, அவர் இவ்வாறு கூறியிருக்கின்றார்.

கோட்டா பாதுகாப்புச் செயலாளராக இருந்த காலந்தொட்டு, தேசிய பாதுகாப்பு, (வெளித்தெரியும்) அபிவிருத்தி என்பவை குறித்தே செயற்பட்டு வந்திருக்கின்றார். அவர், சமூக மேம்பாட்டுக்கான அடிப்படை விடயங்கள் குறித்துச் சிந்தித்ததில்லை. எழுபது ஆண்டுகளுக்கும் மேலாக, நாட்டில் நீடித்துவரும் அரசியல் பிரச்சினைகள் குறித்து, அவர் எந்த இடத்திலும் அக்கறையை வெளிப்படுத்தியதில்லை; தீர்வுபற்றிப் பேசியதுமில்லை.

இறுதி யுத்தங்களின் பின்னரான, தென் இலங்கை அரசியல் நெறி, நம்பியது போல, “யுத்தம் முடிந்துவிட்டது; தமிழ் மக்களுக்கு இனி எந்தப் பிரச்சினையும் இல்லை; அவர்கள், அரசியல் தீர்வு பற்றிப் பேச வேண்டியதில்லை” என்றே கோட்டாவும் நம்பினார். இதை, அவர் ஊடகங்களிடம் வெளிப்படுத்தவும் செய்தார். இன்றைக்குப் பத்து ஆண்டுகள் கடந்த நிலையில், அவர் ஜனாதிபதியாகி விட்டார். ஆனால், அவர் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை. அரசியல் பிரச்சினையும், அதற்கான தீர்வு பற்றிய உரையாடல்களும் தேர்தல் அரசியலுக்கான கருவி என்று அவர் கூறுகிறார். தமிழ்க் கட்சிகளையும் கடந்த கால அரசாங்கங்களையும்கூட அவர், அதன் போக்கில் குற்றஞ்சாட்டவும் செய்கிறார்.

நாட்டின் தேசியப் பாதுகாப்பு மற்றும் அபிவிருத்தி தொடர்பில் எந்த விட்டுக்கொடுப்பையும் செய்ய வேண்டியதில்லை. ஆனால், நாட்டின் வளர்ச்சி என்பது, நாட்டு மக்களுக்கு இடையிலான சமாதானம், சமத்துவம், பரஸ்பர நம்பிக்கையின் வழி உருவாக வேண்டும். அதுதான், அனைத்துக் கட்டங்களிலும் ஒவ்வொரு குடிமகனையும் நாடு குறித்தும் நாட்டின் எதிர்காலம் குறித்தும் சிந்திக்க வைக்கும். அந்தச் சிந்தனையே, தேசிய பாதுகாப்பு, அபிவிருத்தி தொடர்பிலான அடிப்படைகளைச் சரியாக வைத்துக் கொள்ள உதவும். மாறாக, பரஸ்பர நம்பிக்கையில்லாத சமூகங்களைக் கொண்ட நாட்டை, எவ்வளவு பெரிய இராணுவத்தைக் கொண்டோ, பாதுகாப்புக் கெடுபிடிகளைக் கொண்டோ, அபிவிருத்தி மாயாஜாலங்களைக் கொண்டோ நிலைநிறுத்திவிட முடியாது.

இனவாத, மதவாத அரசியல் கோலோச்சும் நாட்டில், இன முரண்பாடுகள் முற்றி வெடித்துப் பெருங்காயங்களாகப் படர்வதைத் தடுக்க முடியாது. இலங்கை, அவ்வாறானதொரு நிலையை, 70 ஆண்டுகளுக்கு முன்னரேயே சந்தித்துவிட்டது. அந்தப் பெருங்காயங்களை குணப்படுத்துவதற்கான கட்டங்கள், பல சந்தர்ப்பங்களில் இருந்தன. ஆனால், பேரினவாத அரசியல், அதைச் செய்வதிலிருந்து தவறியது. அப்படியான நிலையில், பெருங்காயங்கள் சீழ் வடியும் கட்டங்களையெல்லாம் தாண்டி, குணப்படுத்த முடியாத நிலையை நோக்கிச் சென்றுகொண்டிருக்கின்றன. உடலின் சில பாகங்களையே, முற்றாக வெட்டியெறியும் சூழல் உருவாகி இருக்கின்றது. அப்படியானதொரு நிலையில், நின்றுகொண்டு, உடல் ஆரோக்கியம், உடலை அழகுபடுத்துவது தொடர்பில் எப்படிப் பேச முடியும். அப்படியான ஓர் உரையாடலையே கோட்டாவும் அவரது சகாக்களும் முன்னெடுக்க முனைகிறார்கள்.

ஆனால், ஒரு நாட்டின் உண்மையான எதிர்காலம் குறித்துச் சிந்திக்கும் எவரும், அதன் தாற்பரியங்களில் நின்று சிந்திக்க வேண்டும். பெருங்காயங்களுக்கு மருந்திட்டுக் குணப்படுத்தாமல், உடல் ஆரோக்கியம் குறித்துச் சிந்திக்க முடியாது. உடலைச் சரியாக வைத்துக் கொள்ளும் எவரும், தன்னுடைய நோய்களைக் குணப்படுத்தி, உளச் சுகாதாரத்தைப் பேணுவதை அடிப்படையாகக் கொள்ள வேண்டும். மாறாக, எவ்வளவு நோய்கள் இருந்தாலும் பரவாயில்லை, ஆடைகளைக் கொண்டு மறைத்துவிடலாம் என்பது, சில காலத்துக்கு வேண்டுமானால் பலனளிக்கலாம்; ஆனால், உண்மை என்னவென்றால், அவர் விரைவிலேயே படுக்கையில் விழப்போகிறார் என்பதே. இலங்கை அப்படியானதொரு கட்டத்திலேயே இன்று நிற்கின்றது.

விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்தை வெற்றிகொள்வதன் மூலம், நாட்டை ஒருங்கிணைத்துவிடலாம் என்பது தென் இலங்கையின் நம்பிக்கையாக, ஒரு கட்டம் வரையில் இருந்தது. நாட்டின் ஒருங்கிணைவு என்பது, போராட்டக் குழுக்களை அழிப்பதோடு நிகழ்ந்து விடக்கூடிய அற்புதம் அல்ல! எந்தவொரு தேவையும் இல்லாத சூழலில், போராட்டங்கள் தோன்றுவதில்லை. போராளிகளோ, போராட்டக் குழுக்களோ நிலைபெறுவதில்லை. போராட்டங்களுக்கான தேவையை விதைத்தவர்கள், அதன் பலனை அறுவடை செய்ய வேண்டிய வரும்.

இலங்கை அவ்வாறான நெருக்கடிகளில் இருந்தே, இன்றைக்குச் சர்வதேச நெருக்கடிகளைச் சந்தித்து நிற்கின்றது. கொலனித்துவ ஆதிக்கத்திலிருந்து சுதந்திரம் பெற்றபோது, இலங்கைக்கு பின்னாலிருந்த பல நாடுகளும், இலங்கையால் எட்டிப்பிடிக்க முடியாத அளவுக்கான வளர்ச்சியை எட்டிவிட்டன. ஆனால், இலங்கை பின்னோக்கி மாத்திரமே பயணித்துக் கொண்டிருக்கின்றது.

22 மில்லியன் மக்களைக் கொண்ட, ஒரு சிறிய நாடான இலங்கை, என்றைக்குமே சந்தித்திருக்கக்கூடாத கடன் சுமையோடு இன்று இருக்கின்றது. வாழ்க்கைத்தரம் வெகுவாக வீழ்ந்துவிட்டது. ஆனால், இன்னமும் கல்வியறிவு, உழைப்பு என்கிற அடிப்படைகளில் மக்கள் அர்ப்பணிப்போடு இருக்கிறார்கள். எனினும், பிரச்சினைகளின் அடிப்படைகளைப் புரிந்துகொண்டு, அதைத் தீர்த்து வைப்பதற்கான சாத்தியங்கள் உருவாகாததால், நாடு பின்னோக்கிப் பயணிக்கும் சூழல் வந்திருக்கின்றது.

அபிவிருத்தி என்கிற தாரக மந்திரத்தைக் கோட்டா எப்படிக் கடக்கப்போகிறார் என்கிற கேள்வி, இங்கு பலரிடமும் உண்டு. மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக்கால இலங்கை போன்று, சீனாவிடம் பெறப்போகும் கடன்களின் வழி, அபிவிருத்தி இலக்கை, இளைய ராஜபக்ஷவான கோட்டாவும் அடையப்போகிறாரா?

அப்படியானால், சீனாவுக்கு எழுதிக் கொடுப்பதற்கு இலங்கையில் ஒரு சொட்டு நிலம்கூட எஞ்சாமல் போகும். அப்போது, இனவாத, மதவாத அடிப்படையைக் கொண்டு, ஏனைய சிறுபான்மைச் சமூகங்களை அடக்குவதனூடாக, ஆட்சி அதிகாரங்களை அடையலாம் என்கிற தென் இலங்கையின் சிந்தனையும் நட்டாற்றில் நிற்கும். யார் ஆளுங்கட்சியாக இருந்தாலும், சீனாவோடு இசைந்து செல்வதிலேயே கவனமாக இருக்கிறார்கள். ஏனெனில், சீனா கடன்களாக வழங்கியிருக்கின்ற அளவு அப்படி. கிட்டத்தட்ட இலங்கையின் எஜமானனாக சீனா மாறிவிட்டது.

சீரான பாதைகளும், சுத்தமான நகரங்களும், பெரிய பெரிய வர்த்தக வளாகங்களும், நட்சத்திர விடுதிகளும் மட்டும், அபிவிருத்தியின் அடையாளங்களாக வரையறுக்கப்படுகின்றதா என்கிற கேள்வி எழுகின்றது. ஏனெனில், கொழும்பு நகரத்தின் கட்டுமானங்களைக் கொண்டே அபிவிருத்தியின் அளவீட்டைத் தென் இலங்கையின் ஊடகங்கள் காட்சிப்படுத்துகின்றன. அதையே, கோட்டா பாதுகாப்புச் செயலாளராக இருந்த போதும், செய்ய முயன்றார். அதன்போக்கிலேயே, அவர் அப்போது, தனக்குக் கீழ், நகர அபிவிருத்தி என்கிற அமைச்சின் விடயங்களையும் கையாண்டிருந்தார். அந்த நிலைப்பாட்டின் போக்கிலேயே, அபிவிருத்தி என்கிற அடிப்படையைக் கோட்டா மீண்டும் கையிலேடுத்திருக்கிறார் என்றால், இனி வரப்போகும் காலங்கள், நாட்டு மக்களின் வாழ்க்கைத் தரத்தைப் பெருவாரியாக விழுங்கும். அது, மீளெழ முடியாத சக்கரங்களுக்குள் சிக்க வைக்கும்.

இன்னொரு பக்கம், இராணுவ சிந்தனை- கட்டமைப்பின் வழி, நாட்டின் விடயங்களைக் கையாளலாம் என்று ஜனாதிபதி கோட்டா நினைக்கிறார். தேசிய பாதுகாப்பு என்கிற உரையாடலை அவர், இராணுவச் சிந்தனையின் வழியிலேயே நோக்குகிறார்.

தேசியப் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் கருவிகளில் ஒன்றே இராணுவம். மாறாக, இராணுவச் சிந்தனை, கட்டமைப்பால் மாத்திரம் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்திவிட முடியாது. அந்த உரையாடலை தென் இலங்கையோ, தேசிய பாதுகாப்பினை தேர்தல்கால பிரச்சார உத்தியாக கையாண்டவர்களோ உண்மையில் உணர்ந்து கொள்ளவில்லை. சிலவேளை பொதுத் தேர்தலுக்குப் பின்னரான காலம், அதனை அவர்களுக்கு உணர்த்தலாம். அது, இராணுவ சிந்தனையின் நிலை என்பது, சிவில் நிர்வாகத்தில் எவ்வாறான தலையீட்சைச் செய்து அத்துமீறல்களில் ஈடுபடுகின்றது என்பதை, வெளிப்படுத்தலாம். அப்போது, சிவில் நிர்வாக வெளியில் இருந்து இராணுவ ஆதிக்கத்தை வெளியேறக்கோரும் தமிழ் மக்களின் நியாயப்படுகளை தென் இலங்கை உணர்ந்து கொள்ளும்.

பலமானதும் சீரானதுமான அடிப்படைக் கட்டுமானங்கள் இன்றி, கட்டடங்களால் நிலைபெற முடியாது. ஆனால், வர்ணப்பூச்சுகளே கட்டடங்களை நிலைபெறச் செய்கின்றன என்கிற சிந்தனையை, கோட்டா மக்களிடம் விதைக்க நினைக்கிறார். அதன்போக்கிலேயே, அவர் தேசிய பாதுகாப்பு, அபிவிருத்தி என்கிற விடயங்களைப் பேசுகிறார். ஆனால், உண்மை அதுவல்லவே!

புருஜோத்தமன் தங்கமயில்