ஜயஸ்ரீ மகா போதியை வழிப்பட்ட கோட்டாபய உள்ளிட்ட குழுவினர்

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமைப் பொறுப்பை ஏற்ற முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அந்த கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோர் இன்று (13) காலை அநுராதபுரம் ஜயஸ்ரீ மகா போதியை வழிப்பட்டு ஆசிர்வாதம் பெற்றுக்கொண்டனர்.

நாட்டை மீண்டும் கட்டியெழுப்பும் நோக்கோடு கோட்டாபய ராஜபக்ஷ அடுத்த ஜனாதிபதி தேர்தலில் வெற்றிப்பெற வேண்டும் என எதிர்பார்ப்பதாக தம்ம போதனை வழங்கிய ரலபனாவே தம்மஜோதி தேரர் தெரிவித்தார்.

வடமத்திய மாகாண பிரதான மாகாநாயக்க தேரரான பல்லேகம சிறினிவாச தேரரிடம் ஆசிபெற்ற பின்னர், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோர் உடமலுவட பகுதிக்கு சென்று ஆசிப் பெற்றனர்.

அதனை அடுத்து உடமலுவட பகுதியில் கூடியிருந்த தேரர்கள் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோருக்கு ஆசி வழங்கினர்.

சமய வழிபாடுகளின் பின்னர் ஜயஸ்ரீ மகா போதியை வழிப்பட்டு ஆசிர்வாதம் பெற்றுக்கொண்டதுடன், அங்கு கூடியிருந்த மக்களுடனும் சிநேகபூர்வமாக கலந்துரையாடினர்.

இதன்போது ஒன்றிணைந்த எதிர்க் கட்சியின் பாராளுமன்ற, மாகாண சபைகள் உறுப்பினர் என பலரும் கலந்துக் கொண்டனர்.

இதற்கு முன்னர் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோர் நேற்று ருவான்வெலி சாய விகாரைக்கு சென்று ஆசிப் பெற்றனர்.

அதேபோல் அநுராதபுர மாவட்ட அரரசியல்வாதிகள் சிலரையும் சந்தித்து கலந்துரையாடியமையும் குறிப்பிடதக்கது.