கோட்டாபயவிடம் வாக்குமூலம் பெற்றுக் கொள்ள விடுக்கப்பட்டிருந்த கோரிக்கை நிராகரிப்பு

கோட்டாபய ராஜபக்ஷவிடம் வாக்குமூலம் ஒன்றை பெற்றுக் கொள்வதற்காக குற்றப்புலனாய்வு திணைக்களம் விடுத்திருந்த கோரிக்கையை கோட்டை நீதவான் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

அமெரிக்கா பிரஜாவுரிமை பெற்றிருந்த சந்தர்ப்பத்தில் குடியுரிமை சட்டம் மற்றும் தேர்தல் சட்டம் என்பவற்றை மீறி அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டமை தொடர்பில் இடம்பெற்றுவரும் விசாரணைகள் தொடர்பில் கோட்டாபய ராஜபக்ஷவிடம் வாக்குமூலம் ஒன்றை பெற்றுக் கொள்ள வேண்டும் என குற்றப்புலனாய்வு திணைக்களம் கோரிக்கை விடுத்திருந்தது.

குறித்த கோரிக்கையையே கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று நிராகரித்துள்ளது.

இந்த விடயம் தொடர்பில் தன்னிடம் வினவ வேண்டிய அவசியம் இல்லை எனவும் இந்த விடயம் தொடர்பில் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்திடமும் வெளிநாட்டலுவல்கள் அமைச்சிடமும் தேவை ஏற்படின் விசாரணைகளை மேற்கொள்ளுமாறும் கோட்டை பிரதான நீதவான் ரங்க திஸநாயக்க தெரிவித்துள்ளார்.

அது வரையில் குறித்த வழக்கை தள்ளுபடி செய்வதாகவும் கோட்டை பிரதான நீதவான் ரங்க திஸநாயக்க உத்தரவிட்டுள்ளார்.

சந்திரகுப்தா தேநுவர, காமினி வியன்கொட ஆகியவர்களினால் ஆகஸ்ட் மாதம் 5 ஆம் திகதி குறித்த சம்பவம் தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

அமெரிக்கா பிரஜாவுரிமை பெற்றிருந்த சந்தர்ப்பத்தில் 2005 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் நடவடிக்கைகளை மேற்கொண்டமை சட்ட விரோமானது என குறித்த முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.