பேனாமுனைகள் ஊடகங்களை ஊடுருவியபோது..! (குரு அரவிந்தன்)

பேனாமுனைகள் ஊடகங்களை ஊடுருவியபோது..! (குரு அரவிந்தன்)

10 ஆண்டுகளுக்கு முன் நடந்த இனப்படுகொலையை ஒட்டுமொத்தமாக தமிழ்மக்கள் எதிர் கொண்டாலும், அதன் ஆரம்பம் இலங்கை சுதந்திரமடைந்த போதே தொடங்கிவிட்டது எனலாம்.

ஓற்றுமையாக ஒன்றுபட்டிருந்த பல இனங்கள் ஒரு சிலரின் அரசியல் சூதாட்டத்தால் பிரிக்கப்பட்டன. மலையகத் தமிழருக்கு பிரஜா உரிமை மறுக்கப்பட்டதால் ஒன்று பட்ட தமிழரின் பலம் உடைக்கப்பட்டது. அதன் பின் மலையகத் தமிழர் இலங்கைத் தமிழர் என்று சுயநலவாதிகள் மேலும் தமிழர்களை இரண்டாகப் பிரித்தார்கள். மொத்த சனத்தொகையில் தமிழரின் வீதாசாரம் இதனால் 11 வீதமாகக் குறைக்கப்பட்டுச் சொற்ப அளவில் உள்ள சிறுபான்மையினர் தான் தமிழர்கள் என்ற மாயை வெளிநாடுகளில் உருவாக்கப்பட்டது. 1947 ஆம் ஆண்டு ஆவணப்படுத்தப் பட்ட தமிழரின் வீதாசாரத்தை எடுத்துப் பார்த்தால் புரிந்து கொள்வார்கள். இதுவே மிகக் குறைந்த அளவில் உள்ள தமிழர்கள் எப்படி உரிமை கேட்கலாம் என்ற வாக்குவாதத்தை ஏற்படுத்தியது. பிரச்சனை பற்றி வெளியுலகிற்குக் கொண்டு வரப்பட்ட போது ‘பிரித்தானியர் காலத்தில் மலையகத்துக்குச் சென்ற தமிழர்கள் எப்படி உரிமை கேட்கலாம்’ என்று தமிழக அரசியல்வாதி ஒருவர் சொன்னதாகப் பத்திரிகைகளில் வெளிவந்த செய்தி என்னை ஆச்சரியப்பட வைத்தது இப்பொழுதும் நினைவில் நிற்கிறது.

இயற்கை அனர்த்தத்தால் புவியியல் ரீதியாக பல்லாயிரம் வருடங்களின் முன் இலங்கைத் தீவு தென்னிந்தியாவில் இருந்து பிரிக்கப்பட்டுத் தனிமைப் படுத்தப்பட்ட போது, அத்தீவில் குடியிருந்தவர்கள் தமிழர்கள் என்பது அந்த அரசியல் வாதிக்குத் தெரிந்திருக்கவில்லை. ஏன் தமிழ் மூவேந்தர்களான சேர, சோழ, பாண்டியர்கள் ஆண்ட பகுதிகளைக் கூடச் சில அரசியல் வாதிகள் அறிந்திருக்கவில்லை. புவியியல் ரீதியாகச் சேர மன்னன் ஆண்ட நிலப்பரப்பிற்கும் இலங்கைத் தீவின் வட பகுதிக்கும் நிறையவே தொடர்புகள் இருப்பதை எந்த ஒரு ஆய்வாளரும் புரிந்து கொள்வார்கள். கலாச்சார ரீதியாகவும், மொழி ரீதியாகவும் நிறையத் தொடர்கள் இருக்கின்றன. சேரமன்னர் ஆண்ட பகுதியில் பேசப்பட்ட தமிழ் மொழியைப் போலவே இயற்கை அனர்த்தத்தால் பிரிக்கப்பட்ட இலங்கைத் தீவின் வடபகுதியிலும் பேசப்பட்டது. பின்னாளில் அது வட்டார மொழியாக மாறியதால்தான் இன்றும் கேரளாவில் பேசப்படுகின்ற மொழியை இலங்கையின் வடபகுதியில் வாழும் தமிழர்களால் புரிந்து கொள்ள முடிகின்றது.
அகிம்சை முறையில் சத்தியாக்கிரகம் நடத்தியவர்கள், உண்ணாவிரதம் இருந்தவர்கள் எல்லாம் தாக்கப்பட்டுப் புறந்தள்ளப்பட்டதால்தான், ஒரு காலத்தில் ஆயுதப் போராட்டம் துவக்கப்பட்டது. எந்த அரசு பதவிக்கு வந்தாலும், அந்த அரசு எதையும் ஏற்றுக் கொள்ளத் தயாராக இருக்கவில்லை. இனக்கலவரம் அவ்வப்போது தூண்டப்பட்டதால் தமிழ் மக்கள் பயத்துடனே தங்கள் சொந்த மண்ணில்  வாழவேண்டிய சூழல் உருவாக்கப்பட்டது. அரசால் 1956 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட சிங்களம் மட்டும் சட்டம் அமைதியாக இருந்த நாட்டைப் புரட்டிப் போட்டது. அன்றில் இருந்து நாடு குழப்பமான சூழலியே இருக்கின்றது. இதனால் பல தமிழ் குடும்பங்கள் தாய் மண்ணைவிட்டு, சொந்த பந்தங்களைத் துறந்து புலம் பெயர வேண்டி வந்தது. குழம்பிக் கிடக்கும் நாட்டில்தான் அரசியல் நடத்த முடியும் என்பதால் மேலும் மேலும் குட்டையைக் குழப்புகிறார்கள். மொழி இல்லாவிட்டால் மதம் என்ற இரட்டைத் துருப்பு இப்போது கிடைத்திருப்பதால், இனிவரும் காலங்களில் என்ன நடக்கும் என்பது ஆண்டவனுக்குத்தான் வெளிச்சம்.

தமிழ் மக்களின் அவலநிலையை, அவர்கள் தேவை என்ன, அவர்கள் ஏன் போராடுகின்றார்கள் என்பதை எல்லாம் வெளியே கொண்டு சென்று பொதுமக்களிடம் சேர்ப்பதில் தமிழகத்து பிரபல இதழ்கள் சில முன் வந்தன. முதலில் தயக்கம் காட்டிய விகடன், குமுதம், கல்கி, கலைமகள், யுகமாயினி போன்றவை தமிழ் மக்களின் வேதனைகளைப் புனைவுகள் மூலம் வெளிக் கொண்டு வந்து லட்சக்கணக்கான வாசகர்களிடம் சேர்ப்பித்தன. செய்தித் தணிக்கை இருந்ததால் நேரடியாகச் சொல்ல முடியாததைப் புனைவுகள் மூலம் வெளிக் கொண்டு வர முடிந்தது. இதனால் தமிழக மக்களால் மட்டுமல்ல, புலம் பெயர்ந்த தமிழ் மக்களாலும் சொந்த மண்ணில் தமிழ்மக்கள் படும் அவலத்தை ஓரளவு புரிந்து கொள்ள முடிந்தது. விகடன் தீபாவளி மலரில் வெளிவந்த ‘நங்கூரி,’ குமுதத்தில் வெளிவந்த ‘மறந்தாலும் நெஞ்சம் மறக்காதம்மா,’ கல்கியில் வெளிவந்த ‘போதிமரம்,’ கலைமகளில் வெளிவந்த ‘தாயுமானவர்,’ யுகமாயினியில் வெளிவந்த ‘அம்மாவின் பிள்ளைகள்’ போன்ற புனைவுகள் மூலம் தமிழர்கள் படும் அவலங்கள் வெளிக் கொண்டு வரப்பட்டன. முதன் முதலாக போர்ச் சூழலில் ஈழத்தமிழர் படும் அவலங்கள் இத்தகைய புனைவுகள் மூலம் வாசகர்களுக்குக் கோடிகாட்டப்பட்டன.

இதில் ‘நங்கூரி’ என்ற புனைவில் 1983 ஆம் ஆண்டு நடந்த இனக்கலவரத்தின் உண்மைச் சம்பவம் பொதிந்திருந்தது. குமுதத்தில் வெளிவந்த ‘மறந்தாலும் நெஞ்சம் மறக்காதம்மா’ என்ற புனைவு மாவீரரான போராளி குகபாலிகாவின் (ரோஜா) தியாகத்தை எடுத்துச் சொன்னது.  கல்கியில் வெளிவந்த போதிமரம் இராணுவத்தின் அடாவடித்தனத்தை எடுத்துக் காட்டியது. கலைமகள் குறுநாவல் போட்டியில் பரிசு பெற்று வெளிவந்த குறுநாவலான ‘தாயுமானவர்’ அகிம்சைவாதியான தந்தையையும், யுத்த சூழலால் போராளியாக மாறிய மகளான  ஒரு பாடசாலை மாணவியின் கதையையும், ஈழத்தில் அழிந்து போன நிலையில் இருக்கும் பஞ்சஈஸ்வரங்கள் பற்றியும் எடுத்துச் சொன்னது. யுகமாயினி குறுநாவல் போட்டியில் பரிசு பெற்ற ‘அம்மாவின் பிள்ளைகள்’ இடம் பெயர்ந்த மக்களின் அவல வாழ்க்கையையும், யுத்தத்தால் இயற்கைச் சூழல் மாசுபட்டு அழிக்கப்பட்ட கதையையும் எடுத்துக் காட்டியது. இது போன்ற உண்மைச் சம்பவங்களைப் புனைவுகள் மூலம் வாசகர்களிடம் கொண்டு சென்று சேர்ப்பித்ததில் தமிழக இதழிகள் தொடக்கத்தில் பெரும் பங்காற்றின. பொதுமக்களினதும் அரசியல் வாதிகளினதும் பார்வை ஈழத்தமிழர் மீது திரும்புவதற்கு இத்தகைய புனைவுகள் எடுத்துச் சொன்ன உண்மைச் சம்பவங்கள் முக்கிய காரணங்களாக இருந்தன.

இனப்படுகொலைகள் புதிய வடிவம் எடுத்து மதப்படுகொலைகளாகவும் உருமாறி இருக்கின்றன. திருடனாய் பார்த்து திருந்தினால் அல்லாமல் திருட்டை நிறுத்த முடியாது எனபது போல, அரசியல் வாதிகள் தாங்களாகவே திருந்தினால் அல்லாமல் இது போன்ற இன, மதப் படுகொலைகள் தாய்மண்ணில் தொடரத்தான் செய்யும். அரசன் அன்று கொல்வான், தெய்வம் நின்று கொல்லும்!