கடலில் விழுந்து நொறுங்கிய இந்தோனேசிய விமானத்தின் 2-வது கருப்பு பெட்டியும் கண்டுபிடிப்பு

கடந்த அக்டோபர் 29-ல் இந்தோனேசிய தலைநகர் ஜகார்தாவில் இருந்து பங்க்கால் பினாங் தீவுக்கு புறப்பட்ட லயன் ஏர் நிறுவனத்துக்கு சொந்தமான விமானம் கடலில் விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விமான விபத்தில் விமானத்தில் பயணித்த 189 பேரும் பலியாகினர்.

இந்த விமானத்தின் சேத பாகங்களை மீட்கும் பணி நடைபெற்று வந்தது. விமானத்தின் இரண்டு கருப்பு பெட்டிகளில் ஒரு கருப்பு பெட்டி தேடும் பணி துவங்கிய சில நாட்களில் மீட்கப்பட்ட நிலையில், நீண்ட தேடுதல் வேட்டைக்குப்  பிறகு 2-வது கருப்பு பெட்டியும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து, இந்தோனேசியா கப்பற்படையின் மேற்குப் படைப்பிரிவின் செய்தித் தொடர்பாளர் லெப்.கலோ.அகாங் நக்ரோஹோ தெரிவிக்கையில், ”தேடுதல் பணியில் பல்வேறு வகையான நவீன உயர் தொழில்நுட்ப சாதனங்கள் பயன்படுத்தப்பட்டன. இதில் கடலின் 8 மீட்டர் ஆழ சேற்றில் குரல் பதிவுக் கருவி (கருப்பு பெட்டி) இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது” என்றார். எனினும், விமானத்தின் முதன்மையான பாகங்கள் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை.