சீன சிகரெட்டுக்கள் குறித்து பாராளுமன்றத்தில் விளக்கம்

சீன சிகரெட்டுக்கள் சட்டவிரோதமாக நாட்டுக்குள் கொண்டுவரப்படுவதால், அரசுக்கு ஏற்படும் வருமான இழப்பைத் தடுக்கும் நோக்கிலேயே சீன சிகரெட் இறக்குமதிக்கு உத்தியோகபூர்வமாக அனுமதி வழங்கத் தீர்மானித்ததாக நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

தீவிர பொறுப்பு முகாமைத்துவச் சட்டத்தின் கீழ் தீர்மானங்கள், உற்பத்தி வரி (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் கீழான கட்டளைகள் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

எவ்வளவு தடைகள் இருக்கின்ற போதும் உலகத்தில் உள்ள பல சிகரெட் வகைகள் சட்ட விரோதமாக நாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுச் சந்தையில் விற்பனை செய்யப்படுகின்றன. இதனால், அரசாங்கத்துக்குப் பெருந்தொகை வருமான இழப்பு ஏற்படுகின்றது என்றும் அவர் குறிப்பிட்டார்.

தொடர்ந்தும் உரையாற்றிய அவர், சீன சிகரெட்டுக்கள் சட்டவிரோதமாக நாட்டுக்குள் கொண்டுவரப்படுகின்றன. பெருமளவான சீனத் தொழிலாளர்கள் பல்வேறு இடங்களில் பணியாற்றுகின்றனர். இவர்கள் தமக்கான சிகரெட்டுக்களை சட்டவிரோதமான முறையில் நாட்டுக்குள் கொண்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

சட்ட விரோதமான சிகரெட்டுக்கள் நாட்டுக்குள் கொண்டுவரப்படுவதால், அரசுக்கு பாரிய வருமான இழப்பு ஏற்படுகிறது. இதனாலேயே கடந்த வரவு -செலவுத் திட்டத்தில் வெளிநாட்டு சிகரெட்டுக்களை இறக்குமதி செய்ய சிலருக்கு அனுமதி வழங்குவது குறித்த யோசனை ஒன்றை முன்வைத்திருந்தேன் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.