முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மாநிலங்களவை எம்.பி.யாக போட்டியின்றி தேர்வு

இந்தியாவின் முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான மன்மோகன் சிங் மாநிலங்களவை எம்.பி.யாக இருந்தார். அவரது பதவிக்காலம் கடந்த ஜூன் மாதம் 14-ந்தேதியுடன் முடிவடைந்தது. மன்மோகன் சிங் ஐந்து முறை மாநிலங்களவை எம்.பி.யாக இருந்துள்ளார். ஐந்து முறையும் அசாம் மாநிலத்தில் இருந்தே தேர்வு செய்யப்பட்டார்.

தற்போது அசாமில் காங்கிரஸ்க்கு போதுமான அளவு எம்எல்ஏ-க்கள் இல்லாததால் அசாமில் இருந்து 6-வது முறையாக தேர்வாகும் வாய்ப்பு இல்லாமல் போனது. மற்ற மாநிலம் ஏதாவது ஒன்றில் இருந்து மாநிலங்களவை எம்.பி.யாக தேர்வு செய்ய காங்கிரஸ் முடிவு செய்தது.

அதன்படி காங்கிரஸ் ஆட்சி செய்யும் ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து மாநிலங்களவை எம்.பி.யாக தேர்வு செய்ய அக்கட்சி முடிவு செய்தது. அதன்படி கடந்த 13-ந்தேதி வேட்பு மனுதாக்கல் செய்தார். மன்மோகன் சிங்கை ஒருமனதாக தேர்வு செய்யும் அளவிற்கு எம்எல்ஏ-க்கள் எண்ணிக்கை இருந்ததால் அவரை எதிர்த்து யாரும் போட்டியிடவில்லை.

இந்நிலையில் அவர் போட்டியின்றி மாநிலங்களவை எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதன்மூலம் தொடர்ந்து 6-வது முறையாக மாநிலங்களவை எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் 26-ந்தேதி அறிவிக்கப்படும்.