வல்வை படுகொலை நூல் மீள்பதிப்பு -ந.அனந்தராஜ் ”வல்வைப்படுகொலை” ஆவணப்பட உருவாக்கம் -மதி சுதா

வல்வை படுகொலை நூல் மீள்பதிப்பு

வரலாற்று நூல்கள் என்பன ஒரு காலத்தின்  சமுக,அரசியல் எண்ணங்களின் பிரதிபலிப்பாகும் என்பது மட்டுமல்லாது,மக்களின் உணர்வலைகளையும் பிரதிபலிப்பனவாகும். மனித அவலங்களையும், துன்பியலான அனுபவங்களையும் நினைவு கூர்பவையாகவும் இருக்கும்.

அவற்றை எழுத்துவடிவில் ஆவணப்படுத்துதல் என்பது ஒரு சமுகக் கடமையாக மட்டமன்றி,அவற்றை அடுத்த சந்ததியினருக்கு எடுத்துச் செல்லவேண்டிய ஒரு கடமையுமாகும்.பழையனவற்றை நினைவூட்டுவது என்பது ஒரு சமுதாயத்தை திருப்திப்படுத்துவதாக ஒருபோதும் இருக்காது. ஆனால் அவை ஆரோக்கியமான  ஒரு சமுகத்தை அடையாளப்படுத்துவதற்கான மீள் எழுச்சிக்கான தேவையுமாகும்.
 1990 ஆம் ஆண்டு நான் எழுதிய இந்த வல்வைப் படுகொலைகள் என்ற நூலை மீளப் பிரசுரிப்பதற்கு முன்னர்,இந்த நூலை மீண்டும் ஒரு தடவை பதிப்புச் செய்வதென்பது அவசியமா என்று எனக்குள்ளேயே கேள்விகளை எழுப்பினேன்.அந்த வகையில் பின்வரும் சில காரணங்களுக்காக இந்த நூலை மீள்பதிப்புச் செய்யவேண்டுமென்ற முடிவுக்கு வந்தேன்.
1. ஏற்கனவே நான் குறிப்பிட்டபடி,எமது இனத்திற்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட படுகொலைகள் தொடர்பான வரலாறுகளை அடுத்த சந்ததியினருக்குக் கொண்டு செல்லவேண்டும் என்பது ஒரு ஊடகவியலாளனுக்குரிய கடமையாக மட்டும் பார்க்காது,சமுகப் பொறுப்புள்ள ஒரு பிரஜை என்ற வகையிலும் எனக்குள்ள கடமையை உணர்ந்தேன்.தமிழ் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட படுகொலைகள் தொடர்பாக ஏற்கனவே கணிசமான தொகையிலான  நூல்களை எழுதி வெளியிட்டேன்.தமிழ் மக்களின் அவலங்களை வெளிகப்படுத்தும் வகையில் அன்று காலத்தின் தேவை  முழுமையான ஆதாரங்களுடன் இந்த நூலை எழுதியிருந்தேன்.இந்த நூலில் ஸ்ரீலங்கா இராணுவத்தினரின் கொடுமைகளையல்லாது,வல்வெட்டித்துறை மண்ணில் இந்திய இராணுவத்தினரால் மேற்கொள்ள்பபட்ட படுகொலைகள் தொதடர்பான விரிவான ஒரு நூலாக இதனை எழுதியிருந்தேன்.

” “

2. இந்த நூல் ஒரு புனை கதையல்ல.இது 1989 ஆம் ஆண்டு வல்வெட்டித்துறையில் இந்திய இராணுவத்தினரால் மேற்கொள்ளப் பட்ட படுகொலைகளின் ஆவணப்படுத்தப்பட்ட சத்தியப் பிரமாண வாக்குமூலங்களைக் கொண்ட ஒரு வரலாற்று ஆவணமாகும் என்பதுடன் ஒவ்வொரு தமிழர்களின் கைகளிலும் ஆவணப் படுத்தப்பட்ட இந்த நூல் சென்றடையவேண்டும்.
3. கொள்கை உருவாக்க்ததிற்கான அல்லது கொள்கையை மாற்றுவதற்கான பேச்சுவார்த்தகளை ஆரம்பிப்பதற்கான ஒரு அடித்தளத்தை உருவாக்குவதற்கான ஆரம்பமாக இருப்பதே மிகச் சிறந்த ஒரு நூலின் தன்மை என்பதை நான் நம்புகின்றேன்.தமிழர்கள் என்ற வகையில் ஸ்ரீலங்காவில் நடந்த இனச்சுத்திகரிப்பு மற்றும் இனப்படுகொலைகளுக்கு எதிராகக் உரத்துக் குரல் எழுப்பவேண்டிய கடப்பாடு எமக்கு உண்டு.
அந்த வகையில் 1989 ஆம் ஆண்டின் முற்பகுதியில் இருந்து  இந்திய இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட படுகொலைகளுக்கான நியாயத்தைக் கோருவதற்கான பேச்சுவார்த்தைக்கான ஒரு ஆரம்பமாவும் இருக்குமென்றும் நான் நம்புகின்றேன்.
4. இந்தியாவின் முன்னாள் பாதுகாப்புத்துறை அமைச்சராக இருந்த ஜோர்ஜ் பெர்னான்டஸ் இந்திய இராணுவத்தினரால் வல்வெட்டித்துறையில் மேற்கொள்ளப்பட்ட படுகொலைகள் உரிய முறையில் ஆவணப்படுத்தப்படவேண்டும் என்ற வகையில் இந்த நூலுக்கான அணிந்துரையை எழுதியிருந்தார்.ஆயினும் பிரித்தானியப் பிரதமர் தெரேசா மே இந்தியாவில் 100 வருடங்க ளுக்கு முன்னர் பிரித்தானிய இராணுவத்தினரால் மேற்கொள்ளப் பட்ட குரூரமான படுகொலைகளுக்காக கடந்த ஏப்ரல் மாதம் பிரித்தானிய பாராளுமன்றத்தில் வருத்தம் தெரிவித்தது போன்று, இலங்கையின் வடபுலத்தில் இந்திய இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட மிகக் கொடுரமான படுகொலைகளுக்காக இந்தியாவும் ஒரு நாள் வருத்தம் தெரிவிக்கும் என்று நம்புகின்றேன்.

5. இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட படுகொலைகள் தொடர்பான ஆய்வுகளை எதிர்காலத்தில் மேற்கொள்ளவுள்ள மாணவர்களுக்கான துணை ஆதாரங்களைக் கொண்ட நூல்கள் ஓரளவுக்குக் கணிசமாக இருந்தாலும்

மூல ஆதாரங்களைக் கொண்ட நூல்கள் மிகக் குறைவாகவே உள்ள நிலையில் இந்த நூலானது,ஓரளவுக்காவது அந்த வெற்றிடத்தை நிறைவு செய்யும் என்றும் எதிர்பார்க்கின்றேன்.

இவ்வாறான காரணங்களே இந்த நூலை மீள்பதிப்புச் செய்யவேண்டு மென்ற நிலைக்கு என்னைத் தள்ளியது. துமிழர்களுக்கு எதிரான இன அழிப்புத் தொடர்பான கலந்துரையாடல்களுக்கு மிகவும் பெறுமதிவாய்ந்த ஒரு பங்களிப்பை இந்த நூல் இருக்கும் என்று நம்புகின்றேன். அதேவேளை எங்களுடையு இன்றைய வரலாறுகளை அடுத்த சந்ததியினருக்கு எடுத்துச் செல்லும் நூலாக இருப்பதுடன், இதனூடாக சமூக ஒற்றுமையை கொண்டுவருவதற்கான ஒரு அடிப்படையாகவும் இருக்கும் என்றும் எதிர்பார்க்கின்றேன்.

 
வல்வை.ந.அனந்தராஜ்  

 

=============================================================
”வல்வைப்படுகொலை” ஆவணப்பட உருவாக்கம்

ஈழத்தமிழர்களின் வாழ்க்கை பக்கங்களைப் புரட்டுவோமானால், ஒவ்வொரு பக்கமும் இதற்கு முன் இரத்தக் கறைபடிந்த ஒரு கை தட்டிப் பார்த்த தடயத்துடன் தான் நாமும் தட்டவேண்டியிருக்கும்.
காலத்துக்குக் காலம் அவர்களது நிழலாக அவர்கள் மரணமும் துரத்திக் கொண்டே இருந்தது. அதில் ஒன்றாக 3 தசாப்தங்கள் கடந்தும் நினைவை விட்டகலாத ”வல்வைப் படுகொலை” நிகழ்வு ஆழ்மனதில் நிலையாய் அமர்ந்திருக்கிறது. அமைதிப்படை எனக் கூறிக் கொண்டு தமிழர் பிரதேசங்களுக்குள் நுழைந்த இந்திய ராணுவமானது வல்வெட்டித்துறையில் ஆகஸ்டு மாதம் 2ம் திகதி ஆரம்பித்த மக்களின் உயிர் வேட்டையை தொடர்ந்து 3 நாட்களுக்கு அரங்கேற்றியது.
யாரும் உள்நுழைய முடியாமல் ஊரடங்கை பிறப்பித்த அப்பிரதேசத்துக்குரிய இராணுவத்தளபதிகள் விடுதலைப்புலிகள் மேல் இருந்த கொலைவெறி வெறுப்பை அப்பாவி மக்களிடம் போக்கிக் கொண்ட நாட்களாகும்.
இப்படுகொலை தொடர்பாக திரு ந. அனந்தராஜ்  அவர்கள் எழுதிய India’s Mylai என்ற நூலை காணொளி வடிவமாக்கும் இந்த ஆவணப்படத்தை இயக்கும் பொறுப்பை இன்றைக்கு 6 மாதங்களுக்கு முன்னர் என் பொறுப்பில் பெற்றுக் கொண்டேன்.
என்னைப் பொறுத்தவரை இவ் ஆவணப்படமானது, 30 ஆண்டுகளுக்கு முன் இருந்த தலைவர்கள் செய்த தவறுக்காக இன்று இந்திய அரசாங்கத்தைக் குற்றவாளிக் கூண்டில் ஏறி நிக்க வைக்கும் நோக்கில் நான் அமைக்கவில்லை, ஆனால், எங்களது அபிலாசைகளை அன்று இந்தியா எந்தளவுக்கு சிதைத்தது என்பதை என் தலைமுறைக்கும் சொல்ல வேண்டும் என்ற நிர்ப்பந்தம் ஒன்று இயற்கையாலேயே எனக்குள் அமைந்து விட்டது.

இலங்கையைப் பொறுத்தவரை இங்குள்ள தமிழர் பிரதேசங்கள் அனைத்தும் இந்தியாவின் கலாச்சார பண்பாடுகளை விரும்பியோ விரும்பாமலோ உள்வாங்கிக் கொண்டு நகரும் வாழ்க்கை அமைப்பைக் கொண்ட குடித்தொகைகளைக் கொண்டதாகும். எல்லாவற்றையும் விட இப்படுகொலை நடந்த வல்வெட்டித்துறையை எடுத்துக் கொண்டால் அங்குள்ள பெரும்பாலான வீடுகளின் வாசல்களை இன்றுவரை இந்தியாவின் பெரும்தலைவர்களின் படங்களே அலங்கரித்துக் கொண்டிருக்கிறது. ஆனால், அவர்கள் மீது இந்தளவு பற்றுக் கொண்ட மக்களின் அபிலாசைகளை இந்தியா ஒரு பொருட்டாகக் கூட மதித்ததில்லை.
இந்தியத் துணைக்கண்டத்தின் அரசியல் நகர்வுக்கு இக்குடிமக்களின் துணை நேரடிப் பலமாக இல்லாமை ஒரு காரணமாக இருக்கலாம். ஆனால், தமிழ்நாட்டு அரசியலில் ஈழத்தமிழர்களின் பங்கு பேசு பொருளாகவேனும் பெரும் பங்காற்றுகிறது.
ஈழத்தமிழர்களைப் பொறுத்தவரை, இன்னொரு நாட்டின் மூலம் தமக்கு ஏதாவது அரசியல் இலாபம் கிடைக்குமானால் அது இந்தியாவால் மட்டும் தான் ஆக்கபூர்வமாக கிடைக்கும் என நம்பிக் கொண்டிருக்கிறார்கள். ஏனெனில், மற்றைய நாடுகளின் இலங்கைப் பிரவேசமானது இலங்கைப் பெரும்பான்மை அரசாங்கத்துடனான இராஜதந்திர உறவுக்கானதாகவே அமையும். ஆனால், பாரத தேசத்திற்கு அண்மையாக இருக்கும் தமிழர் பிரதேசங்களானது இந்தியாவை மதித்துக் கொண்டே இருக்கின்றன. எடுத்துக்காட்டாக இந்திய இராணுவத்தால் பாதிக்கப்பட்ட இத்தனை பிரதேசங்களிலும் இந்திய கிரிக்கெட் அணியின் வெற்றிகளுக்கு பட்டாசு கொளுத்திக் கொண்டாடும் அம்மக்கள் கூட்டமே மிகப் பெரும் உதாரணமாகும்.
இவ் ஆவணப்படத்தின் மூலம் அவர்கள் எவ்வளவுக்கெவ்வளவு இம்மக்களை இத்தனை வருடத்துக்கு முன்னிருந்து நசுக்கினார்கள் என்பதை புதிய தலைவர்களுக்கும், தலைமுறையினருக்கும் நினைவூட்டுவதற்கான நல்ல ஒரு சந்தர்ப்பமாக கருதியே இவ்வாவணப்படத்தை பூர்த்தி செய்திருக்கிறேன்.
இதன் நோக்கத்தைப் புரிந்து மீளவும் ஒத்துழைப்புக் கொடுத்த மக்கள் அனைவரும் நன்றி கூறப்படவேண்டியவர்களே. தமிழர் பிரதேசங்களின் பல்வேறு இடங்களில் இப்படியான மிலேச்சத்தனமாக வன்முறைகளை அவிழ்த்து விட்டு பசியாறிய இராணுவ வீரர்கள் இன்று தம் இயற்கையின் இறுதிக்காலத்தை அண்மித்துக் கொண்டிருப்பார்கள் என்றே நினைக்கிறேன்.
அக்காலத்திலேயே பல இராணுவ வீரர்கள் இதற்கு வருத்தம் தெரிவித்திருந்தாலும், இந்தியாவின் பிரதமராக இருந்த ராஜீவ் காந்தி அவர்கள் வரலாற்றுப் பக்கங்களில் இருந்து இதை மூடி மறைத்திருந்தார். இன்று இருந்திருந்தாலும் அவர் இச்சம்பவத்துக்கு பிராயச்சித்தம் செய்திருப்பாரோ தெரியாது. ஆனால், நிச்சயம் இங்கு நடைபெற்ற கொலைகள் அவரது உள்மனதைக் குடைந்து கொண்டு தான் இருந்திருக்கும்.

மதி சுதா

வல்வை படுகொலை நூலுக்கு 30வது அகவை – நவஜீவன் அனந்தராஜ்