மெக்ஸிகோவில் மீண்டும் துப்பாக்கி மோதல் – 14 பேர் உயிரிழப்பு

மெக்ஸிகோவில் ஆயுதமேந்திய கும்பலுக்கும் பொலிஸாருக்கும் இடையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சண்டையில் 4 பொலிஸார் உட்பட 14 பேர் உயிரிழந்தனர்.

அமெரிக்காவின் ரெக்சாஸ் மாநிலத்தின் எல்லையோரத்தில் அமைந்துள்ள மெக்ஸிகோவின் கோஹுய்லா மாநிலத்திற்குட்பட்ட வில்லா யூனியன் குடியிருப்பு பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கொள்ளையடிக்கும் நோக்கில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு சென்றிருந்த ஆயுதமேந்திய குழுவினரால் அங்குள்ள வர்த்தக நிறுவனங்கள் மற்றும் அரச அலுவலகங்கள் மீது திடீரென தாக்குதல் நடத்தப்பட்டதுடன் சில வாகனங்களும் தீயிட்டு எரிக்கப்பட்டன.

தகவல் அறிந்து விரைந்து சென்ற பொலிஸார் அவர்களுடன் சுமார் ஒருமணி நேரம் நடத்திய துப்பாக்கிச் சண்டையில் 4 பொலிஸ் அதிகாரிகள் உட்பட 14 பேர் உயிரிழந்தனர்.

ஹெராயின், கஞ்சா, அபின், பிரவுன் ஷுகர் உள்ளிட்ட போதைப்பொருள் கடத்தல் மற்றும் உற்பத்தியில் உலகின் முக்கிய நாடாக மெக்ஸிகோ விளங்கி வருகிறது. இங்குள்ள போதைப்பொருள் கடத்தல்காரர்கள் கொலை, கொள்ளை, பாலியல் துஷ்பிரயோகம் போன்ற செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதுதவிர, அபினி செடிகளை வளர்ப்பதிலும், வெளிநாட்டு தரகர்களுக்கு பொருட்களை விற்பனை செய்வதிலும் இங்குள்ள கொள்ளைக் காரர்களுக்கு இடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது.

இதனிடையே, பொலிஸாருக்கும் கடத்தல்காரர்களுக்கும் இடையில் தொடர்ந்து துப்பாக்கி மோதல் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.