ஈராக்கில் ஐ.எஸ். சிலீப்பர் செல் தாக்குதல் – 12 பேர் பலி

ஈராக்கில் ஆதிக்கம் செலுத்தி வந்த ஐ.எஸ். பயங்கரவாதிகள் கடந்த 2017ம் ஆண்டு தோற்கடிக்கப்பட்டு அவர்கள் கைப்பற்றிய இடங்களை ராணுவம் மீட்டது.
எனினும் அந்த அமைப்பின் சிலீப்பர் செல்கள் தொடர்ந்து இயங்கி வருகின்றன.  அவர்கள் நாடு முழுவதும் தாக்குதல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.  இந்த நிலையில், ஷியா பிரிவு முஸ்லிம்களின் புனித நகரான கர்பாலாவில் இருந்து 10 கி.மீ. தொலைவில் உள்ள ராணுவ சோதனை சாவடி ஒன்றின் வழியே சென்ற மினி பேருந்தின் மீது நேற்றிரவு குண்டுவெடிப்பு தாக்குதல் நடத்தப்பட்டது.
இந்த தாக்குதலில் 12 பேர் பலியாகினர்.  5 பேர் காயமடைந்தனர்.  இதுபற்றி அந்நாட்டின் பாதுகாப்பு அதிகாரி ஒருவர் கூறும்பொழுது, மினி பேருந்தில் இருந்து கீழே இறங்கி சென்ற பயணி ஒருவர் பை ஒன்றை இருக்கைக்கு அடியில் விட்டு சென்றுள்ளார்.  இதன்பின் ரிமோட் கன்ட்ரோல் உதவியுடன் அதனை ராணுவ சோதனை சாவடி பகுதியில் வெடிக்க செய்துள்ளார் என கூறினார்.
ஈராக் நாட்டில் ஐ.எஸ். பயங்கரவாதிகளின் வீழ்ச்சிக்கு பின் பொதுமக்களின் மீது நடந்த மிக பெரிய தாக்குதல்களில் இது ஒன்றாகும்.