மிஸ் யூனிவர்ஸ் அழகி பட்டம் வென்ற தென்னாப்பிரிக்க பெண்

அமெரிக்காவின் ஜார்ஜ் மாநிலத்தின் அட்லாண்டாவில் மிஸ் யூனிவர்ஸ் அழகி போட்டி நடைபெற்றது. இதில்  90 நாட்டை சேர்ந்த அழகிகள்  கலந்து கொண்டனர். இறுதி போட்டியில் தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த சோசிபினி டன்சி “மிஸ் யூனிவர்ஸ் 2019” பட்டம் வென்றார். அவருக்கு  கடந்த ஆண்டு பட்டம் வென்ற கட்ரியோனா கிரே மகுடம் சூட்டினார்.
26 வயதான சோசிபினி டன்சி பாலின குற்றங்களுக்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுப்பவர். அதேபோல், என்னதான் அழகியாக இருந்தாலும் இயற்கை அழகை மட்டுமே நம்பும் பெண். இதுபோன்ற காரணங்களே அவரின் இந்த வெற்றிக்கு சாதகமாக அமைந்துள்ளன.
“மிஸ் யூனிவர்ஸ் 2019” என்ற அறிவிப்பிற்கு முன்னர் சோசிபினி டன்சிக்கு புகழாரம் சூட்டிய போது, “ சமூக வலைதளங்களில் தான் செய்த பிரசாரங்களின் மூலம் பாலின பேதத்தை உடைத்துக் கொண்டிருப்பவர். பெண்களிடையே இயற்கை அழகை ஊக்குவித்தவர்” என்று கூறியே அவரை அழைத்தது.
போட்டியில் இறுதிக் கேள்வியாக இன்றைய இளம் தலைமுறைப் பெண்களுக்கு என்ன கற்பிக்க வேண்டும் என்று கேட்கப்பட்டது. அவரவர் தங்களுடைய கருத்தை பதிவு செய்த நிலையில் சோசிபினி டன்சி அளித்த பதில்தான் விருந்தினர்களை கவர்ந்தது. அதாவது, அவர் “பெண்களுக்கு தலைமை பண்பை கற்றுக்கொடுக்க வேண்டும்” என்று கூறியுள்ளார். அது, அவையோரை கவனம் பெறச் செய்ததாலேயே அவருக்கு “மிஸ் யூனிவர்ஸ் 2019” பட்டம் கிடைத்துள்ளது.