சிரியாவின் எல்லைக்குள் துருக்கியின் ஒரு முனைப்போர்

துருக்கிய இராணுவம் மற்றும் சிரியாவின் அரசாங்கத்துக்கு எதிரான இராணுவ குழுவான FSA ஆகியன அண்மையில் சிரியாவின் ஆபிரோன் மாவட்டத்தில் YPG குழுவுக்கு எதிரான இராணுவ தாக்குதலை மேற்கொண்டிருந்தமை ஏற்கனவே சிக்கலில் உள்ள சிரியாவின் உள்நாட்டு யுத்தத்தினை மேலதிக சிக்கல் நிலைக்கு தள்ளியுள்ளது. கடந்த வருடம், துருக்கிய இராணுவம் வடக்கு சிரியாவில் YPG இலக்குகளுக்கு எதிராக இராணுவ தாக்குதல்களை மேற்கொண்டிருந்தது. அது தொடர்பில் அமெரிக்காவும் ரஷ்யாவும் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளன. இதேபோல், இவ்வாண்டின் ஆரம்பப்பகுதியில் ஆஃப்ரின் (Afrin) நகரத்திற்குள் உள்நுழைவதற்கு துருக்கி தயாராகி வருவதாக அக்ரா சமிக்ஞை செய்தபோது, ​​ரஷ்யா துருக்கியின் இராணுவ நடவடிக்கைக்கு எதிர்ப்பு நடவடிக்கையை மேற்கொள்வதற்காக ஆஃப்ரின்வு நகருக்கு விரைந்திருந்தமையும், பின்னர் துருக்கிய இராணுவம் சிரியாவின் கோபனி (Kobani) நகருக்குள் அத்துமீறி நுழைந்து இருந்தபோதிலும் அமெரிக்க மற்றும் ரஷ்யாவின் எதிர்ப்பின் அடிப்படையில் குறுகிய காலத்திற்கு பின் பின்வாங்கியமையும் குறிப்பிடத்தக்கது.

யுத்தத்துக்கு பின்னரான சிரியாவின் பூகோளவியலில் குர்திஸ் அமைப்பின் இருப்பை ரஷ்யாவும் அமெரிக்காவும் ஆதரிக்கின்றன. மேலும் ஐ.ஐ.எஸ்ஸிற்கு எதிரான போராட்டத்தில் குர்திஸ் அமைப்பினரின் முக்கிய பாத்திரத்தை அவர்கள் அடிக்கடி வலியுறுத்துகின்றனர். துருக்கி, மறுபுறத்தில் YPG யை சிரியாவின் அங்கமாகவே பார்க்கிறது; எனவே, துருக்கி பிராந்தியத்தில் உள்ள ஒரு குர்திஸ் அமைப்பான YPG இனை துருக்கியிலுள்ள PKK அமைப்பை ஒத்ததாகவே கருதுகின்றது. இது துருக்கியின் உள்நாட்டு விவகாரங்களில் எவ்வாறு PKK குர்திஸ் மக்களுக்கு ஒரு தனித்துவமான அடையாளத்திற்கான அழைப்பு விடுக்கின்றதோ, அதேபோன்று பிராந்தியத்தில் துருக்கிக்கு எதிரான ஒரு குர்திஸ் தன்னாட்சி அரசு அமைவதற்கு YPG வழிவகுத்துவிடும் என கருதுகின்றது. இருந்தபோதிலும், மொஸ்கோவும் வாஷிங்டனும் YPG ஐ ஒரு பயங்கரவாத அமைப்பாக பட்டியலிட மறுத்துவிட்டன என்பதுடன், மாறாக, ஐ.ஐ.எஸ்ஸிற்கு எதிரான போராட்டத்தில் அவை களநிலைமையில் ஒரு முக்கிய நட்பு அமைப்பாகவே கருதுகின்றன.

மறுபுறத்தில், ஈராக் மற்றும் சிரியாவில் ISIS பயங்கரவாதக் குழு தோற்கடிக்கப்பட்ட சில வாரங்களுக்கு பின்னர், அமெரிக்கா ISIS இன் மீள்வளர்ச்சியை தவிர்க்கும் காரணமாக, ஈராக்கில் உள்ள குர்திஸ் பிராந்தியத்தின் தலைநகரான எர்பில் (Erbil) ல் இருந்து மத்திய தரைக்கடல் கடல் வரை ஒரு பாதுகாப்பு வளையத்தை உருவாக்கப்போவதாக அமெரிக்கா அறிவித்திருந்தது. குறித்த விடையம் தொடர்பில் அமெரிக்க தலைமையில் 30,000 இராணுவத்தினர் குறித்த்த எல்லைகளில் பாதுகாப்புக்காக நிறுத்தப்படுவார்கள் எனவும், இக்கருமத்தில் சிரியாவை சேர்ந்த குர்திஸ் போராளிகளும் இணைத்துக்கொள்ளப்படுவார்கள் எனவும் தெரிவித்திருந்தது. இந்நடவடிக்கையானது சிரியாவில் உள்ள குர்திஸ் ஆதிக்க சக்திகளுக்கு அமெரிக்க ஆதரவு வழங்குவதாகவே கருதப்பட வேண்டும் என துருக்கிய தனது அதிருப்தியை வெளிப்படுத்தியிருந்தது. துருக்கி இதுபற்றி வெளியிட்ட கருத்தில் சிரியாவின் போராளிகளில் 50 சதவீதத்துக்கும் அதிகமானவர்கள் குர்திஸ் போராளிகளே ஆவார்கள் எனவும், குறித்த அமெரிக்காவின் போக்கானது துருக்கியின் உள்நாட்டு பாதுகாப்புக்கு எதிராக உள்ள குர்திஸ் PKK குழுக்களை வலுப்படுத்தும் எனவும் கருத்து வெளியிட்டிருந்தது.

இந்நிலையிலேயே குறித்த இராணுவ தாக்குதலை FSA உடன் இணைந்து மேற்கொண்டிருந்த துருக்கி, சிரியாவின் எல்லை பிராந்தியமான ஆபிரோன் மாவட்டத்தில் நான்கில் மூன்று பகுதியை கைப்பற்றியுள்ளது. குறித்த இந்நிலையானது குறித்த பிராந்தியத்தில் நேரடியாகவும் பதிலீடு வகையிலும் போரியலில் ஈடுபட்டுள்ள எல்லா மட்டங்களிலும் உள்ள இராணுவ மற்றும் போராட்ட குழுக்களுக்கும் அவை சார்ந்த குறுகிய கால மற்றும் நீண்ட கால அபாயங்களை இருப்பினும், இவ்விராணுவ நடவடிக்கையானது துருக்கியின் பாதுகாப்பு மற்றும் தேசிய இறையாண்மைக்கு அவசியமான ஒரு நடவடிக்கையாகவே துருக்கி கருதுகின்றது.

குறித்த இராணுவ நடவடிக்கையை அடுத்து குறித்த பிராந்தியத்தில் 200,000 மக்கள் மனிதாபிமான உதவி தேவைப்படும் நிலையில் உள்ளார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளதுடன், துருக்கியின் குறித்த அத்துமீறல் செயல்ப்பாடானது சர்வதேச சட்டத்தின் பிரகாரம் சிரியாவின் ஆட்புல எல்லைக்குள் – இறையாண்மைக்கு களங்கம் விளைவிக்கும் செயல் எனவும் ஆராயப்படுகிறது.

இந்நிலையில் குறித்த இராணுவ நடவடிக்கை பற்றி துருக்கி குறிப்பிடும் போது, இது சர்வதேச சட்டத்துக்கு அமைவாக – குறிப்பாக – ஐக்கிய நாடுகள் சாசனத்தின் 51 வது உறுப்புரையான ‘சுய பாதுகாப்பு நடவடிக்கையில்’ கீழான ஒன்று எனவும், குறித்த இராணுவ நடவடிக்கையில் எல்லா விதமான மனிதாவிமான சட்டத்துக்கும் ஏற்புடைய இராணுவ நடவடிக்கையையே துருக்கி மேற்கொண்டுள்ளது எனவும் குறிப்பிடுகின்றது. துருக்கியை பொறுத்தவரை குறித்த இராணுவ நடவடிக்கையின் குறுகிய கால நோக்காக   துருக்கிய-சிரியா எல்லையில் பாதுகாப்பு மற்றும் ஸ்திரப்பாட்டை நிறுவவும், சிரிய மக்களை YPG குழுவான (துருக்கியை பொறுத்தவரை) பயங்கரவாதிகளின் கொடூரத்திலிருந்தும் காப்பாற்றவும் இலக்கு கொண்டுள்ளது என்றே அறியப்படுகின்றது.

சிரியா மீது துருக்கி கடந்த வருடம் அறிவித்திருந்த புதிய இராணுவ நடவடிக்கை, நேரடியாக YPGஐ இலக்காகக் குறிப்பதாக அமையும் இந்நிலை நிச்சயமாக சிரிய நெருக்கடியை மேலும் சிக்கலாக்குகின்றமையுடன் துருக்கியின் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலாகும். கேள்வி என்னவென்றால், இவ்வளவு சவால்களுக்குப் மத்தியிலும், இந்த நடவடிக்கைக்கு துருக்கி மிகவும் ஆர்வமாக உள்ளமையின் உண்மையான தோற்றப்பாடு என்ன என்பதேயாகும். மதரீதியாக உந்துதல் பெற்ற துருக்கிய தேசியவாதம் சமீபத்திய ஆண்டுகளில் துருக்கியின் சர்வாதிகார ஆட்சி அமைப்புக்கு பின்னரான ஒரு முக்கிய காரணியாக இருந்து வந்துள்ளது; இது புதிய சர்வாதிகார ஆட்சியின் கருத்தியல் அஸ்திவாரமாக அமைகின்றது. துருக்கிய அரசியலை பொறுத்தவரை அது எப்போதும் துருக்கிய தேசியவாதத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது. இது துருக்கிய குடியரசு அரசியல் முறைமைக்கு எதிரான கொள்கையுடையதாகும். எனினும், குடியரசு ஆட்சியின் வரலாற்றில் முந்தைய தோற்றங்களைத் தவிர துருக்கிய தேசியவாதத்தின் இந்த புதிய வடிவத்தை மிகவும் வலுவான உந்துதளமாக வடிவமைப்பது என்னவென்றால், அது, பாரம்பரியமான தேசியவாத பிரதிபலிப்புகளில் இஸ்லாமியவாதத்தை இணைத்தமையே ஆகும். இதனடிப்படையியேயே பிராந்தியத்தில் ஒரு வலுவான சுதந்திர குர்திஷ் உட்பிரிவின் தோற்றத்தை கருத்தில் கொண்டிருக்கும் ஒரு தனித்துவமான குர்திஸ் அமைப்பின் உருவாக்கம் துருக்கியின்  சொந்த குர்திஷ் மக்களை அந்நாட்டு அரசுக்கு எதிராக திரட்டுவதாக இருக்கும் என அஞ்சப்படுகின்றமையும் இது துருக்கியின் சொந்த இருப்புக்கான அச்சுறுத்தலாக அமையும் என கருதப்படுகின்றமையுமே என்பதே எதிர்ப்புக்கான மிகமுக்கியமான காரணமாகும்.

எது எவ்வாறாக இருப்பினும் குறித்த இராணுவ நடவடிக்கையானது எப்போதுமே ஒருதலைப்பட்சமாக இருக்காது என்பதுடன், இதன் பிரதி விளைவுகள் மிகவும் பாரதூரமாக அமையும் என்பதுமே இப்போதைக்கு அச்சப்பட வேண்டிய ஒன்றாகும்.