சவுதிக்கு எதிராக அமெரிக்காவின் நகர்வு

சவுதிக்கு எதிராக அமெரிக்காவின் நகர்வு

ஜனகன் முத்துக்குமார்

அமெரிக்க செனட் சபை நிறைவேற்றவிருக்கும் தீர்மானம் சவூதிய அண்மைய கொள்கைகள் அமெரிக்காவின் மத்திய கிழக்கு பிராந்திய நலன்களுக்கு பாதகமாக இருக்கமாயினும் அமெரிக்க தாற்பரியங்களுக்கு விரோதமானது  என்ற அடிப்படையில் – குறித்த தீர்மானம்,  பத்திரிகையாளர் ஜாமால் கஷோகிஜி கொலை செய்யப்பட்டதில் இளவரசர் முகம்மது பின் சல்மான் “உடந்தையாக” இருந்தார் என நிறைவேற்றப்படவுள்ளமை, மத்தியகிழக்கில் அமெரிக்காவின் ஆதிக்கத்தை வேறு ஒரு திசைக்கு திருப்புவதிலும், அதன் அடிப்படியில் சவூதி தொடர்ச்சியாக யேமனில் நடாத்தும் யுத்தத்தில் அமெரிக்கா ஒரு பக்க சார்பு நிலையை எடுக்கவேண்டிய நிலைக்கு வருகின்றமையையுமே காட்டுகின்றது. குறித்த 6  பக்க தீர்மானம் இது தவிர, ஊடகவியலாளர்கள் ஒடுக்குமுறை, யேமெனில் மேற்கொள்ளும் மனிதாபிமானத்துக்கு எதிரான யுத்தம், மாற்றுக்கொள்கையாளர்களை சிறைப்படுத்தல் மற்றும் சவுதியில் மனிதஉரிமைகளை பெருமளவு வரையறைசெய்துள்ளமை என பல நிரல்களில் ஆதிக்கம் செலுத்தும் ஒரு தீர்மானமாக – வெளிப்படையான கூறின் – ஐக்கிய அமெரிக்க மற்றும் சவுதிக்கு இடையிலான நட்புறவை தகர்க்கக்கூடிய ஒரு வெளிப்பாடாகவே பார்க்கப்படுகின்றது. இத்தீர்மானம், இளவரசர் முகமதுவின் கொள்கைகளை மட்டுமல்லாமல், அவரது நெருங்கிய நட்பு நாடான ஐக்கிய அரபு இராச்சியத்தின் (கஷோகி கொலைக்குப் பின்னர் சவூதித் இளம் தலைவர் விஜயம் செய்த முதல் நாடு ஐக்கிய அரபு இராச்சியம் என்பது குறிப்பிடத்தக்கது) இளவரசர் முகம்மது பின் ஸாயீடின் அரசியல் நிரலுக்கு எதிராக அமைக்கின்றமை குறிப்பிடத்தக்கது.அமெரிக்காவின் குறித்த இவ்வாறான நகர்வுக்கு காரணம் என்ன என்பது பற்றியே இப்பத்தி ஆராய்கின்றது.

குறித்த நகர்வு நான்கு விடையங்களை அடிப்படையாக கொண்டது. முதலாவது, சவூதி – அமெரிக்க உறவானது நீண்ட வரலாறு, பிராந்திய மூலோபாய நலன்கள், அரசியல் பிணைப்புக்கள் மற்றும் எண்ணெய் மற்றும் ஆயுத வியாபாரம் என பலதரப்பட்ட வகையில் இணங்கிச்செல்வதாகும். அதனடிப்படையில் பார்க்கப்போனால் குறித்த இத்தீர்மானம் தனியாகவே கஷோகியின் கொலையுடன் மட்டும் சம்பத்தப்பட்டது என்பது சவூதி – அமெரிக்க உறவைப்பொறுத்தவை நம்பமுடியாத ஒன்று.

இரண்டாவது, அண்மையிலேயே சவூதி – கனடா முரண்பாடுகள் கனேடிய தூதுவரை சவூதி தனது நாட்டிலிருந்து மனிதவுரிமை சம்பந்தமாக கனடிய அரசாங்கம் சவுதிக்கு எதிராக வெளியிட்ட கூற்றை கண்டிக்கும் முகமாக வெளியேற்றியிருந்தது. அது தொடர்பில் இப்பத்தியாளர் முன்னொரு பத்தியில் குறிப்பிடுகையில், சவூதி – கனடா உறவுகள் எப்போதும் குறிப்பிடத்தக்க அளவில் பேசப்படவில்லை. மத்திய கிழக்கின் பாதுகாப்பு கட்டமைப்பில் நேட்டோவின் உறுப்புரிமையாக செயல்படும் கனடா, அதனை தாண்டி தனிப்பட்டளவில் சவுதியுடன் எந்தவித பாதுகாப்பு உடன்படிக்கைகளை கொண்டிருக்காமை, ஆயுத உற்பத்தி, மற்றும் சவுதிக்கு யேமென் மீதான போரியலில் நேரடியாக உதவுவதற்கு கனடா விருப்பம் காட்டத்திருந்தமை, இது தவிர கனடா அதன் தளத்தில் இருந்து ஒரு போதும் சவுதிக்கு எதிராக பழிவாங்கும் நடவடிக்கையை மேற்கொள்ளாது என சவூதி கருதுவதுமே காரணமாகும்.

மூன்றாவதாக, சவூதி அரேபிய அரசாங்கத்தின் ஆதரவான யேமென் அரசாங்கம் மற்றும் ஹூடியா போராளிகளுக்கிடையில் இடையே ஸ்வீடனில் போரினை முடிவுக்கு கொண்டுவரும் பொருட்டு மேற்கொண்ட பேச்சுவார்த்தைகள் சவுதியின் கரங்களையும் மீறி மிக உடனடியான சாதகமானதும், அதன் காரணமாக சவுதியின் பிராந்திய தலைமைத்துவம் தொடர்பில் சவூதியின் நிலைப்பாடு தகர்க்கப்பட்டுள்ளது.

நான்காவதாக, இளவரசர்  முஹம்மதுவின் சில நட்பு நாடுகளின் மத்தியில் குறித்த தீர்மானம் கோபத்தைத் தூண்டக்கூடிய ஒன்றாக காணப்பட்டாலும், குறித்த தீர்மானம் ஏற்றுக்கொள்ளப்பட்டால் அல்லது செயல்படுத்தப்பட்டால், குறிப்பாக அது, ஐக்கிய அரபு இராச்சியத்தை சவுதியின் நேரடி நட்பு வட்டத்திலிருந்து பிறக்கவே செய்யும் என்பதுடன் அது ஐக்கிய அரபு இராச்சிய அடிப்படை மூலோபாயங்களை மறுபரிசீலனை செய்ய ஏதுவாய் இருக்கும். அது அரேபிய மற்றும் மத்திய கிழக்கின் இஸ்லாமிய நவீனத்துவத்தின் ஒரு வழிகாட்டியாக ஐக்கிய அரபு இராச்சியத்தை நிலைநிறுத்தவும், சவுதியின் இறுக்கமான கொள்கைகளில் இருந்து பிராந்திய நாடுகளை விடுவிக்கவும் உதவும் ஒரு முன்னிரலாக அமையும். இவ்வாதத்தை பிரதிபலிப்பதாவவே ஐக்கிய அரபு இராச்சிய இளவரசர் முகமதுவின் நெருங்கிய நண்பரும், அமெரிக்காவுக்கான ஐக்கிய அரபு இராச்சிய தூதுவருமான யூசுப் அல்-ஒடிபா, இளவரசருக்கு அனுப்பிய ஒரு (வெளிக்கசிந்த) மின்னஞ்சலில் பின்வருமாறு தெரிவித்திருந்திருந்தார். “பிராந்திய அரசியலில் சவுதியின் தலைமைத்துவம் தொடர்ச்சியாக இருக்கும் என நான் நினைக்கவில்லை.” மேலும், அல்-ஒயிடிபா  “இது நீண்ட காலத்தில் நாங்கள் சவுதி அரேபியா மீது ஒரு நல்ல செல்வாக்குடன் இருக்கவும், சவுதியின் மூலோபாய விடயங்களில் நாங்கள் செல்வாக்கு செலுத்தக்கூடியதாய் இருக்கும்” என குறிப்பிட்டிருந்தமை பிராந்தியத்தில் சவுதியில் செல்வாக்குக்கு எதிராக மாற்று தலைமை ஒன்று உருவாக்குவதற்கு நிலைமைகள் உண்டு என்பதையே காட்டுகின்றது.

இவற்றின் அடிப்படையில், மேலும் மேற்கத்தேய நாடுகள் (குறிப்பாக கனடா, மற்றும் ஐக்கிய இராச்சியம், பிரான்ஸ், ஜேர்மன்) வெளிப்படையாகவே சவுதியை குறித்த கஷோகியின் மரணம் தொடர்பான விடயங்களில் கைவிட்ட நிலையில், அமெரிக்க செனட் சபை தீர்மானத்தை கொண்டுவந்துள்ளது. இது முதலாவதாக அமெரிக்க நிறைவேற்றுத்துறையை குறுகிய கால நலன்களில் அடிப்படையில் இரு தரப்பு வர்த்தக உடன்படிக்கையில் சவுதியை தளர்வு நிலைக்கு கொண்டுவருவதன் மூலம் வர்த்தக இலாபத்தை மீட்டல், மேலும், சவுதியை தொடர்ச்சியாக தனது கட்டுப்பாட்டில் வைத்திருத்தல் என்பதற்கான ஒரு உத்தியாக பார்க்கப்படுகின்றது. இரண்டாவதாக, சவூதி தொடர்ச்சியாகவே தனது இறுக்கமான ஜனநாயகத்துக்கு எதிரான தலைமைத்துவம், மற்றும் மனித உரிமைகளை மறுத்தல் என்பதை நடைமுறைப்படுத்துமாயின் அமெரிக்காவும் மேற்கத்தேய நாடுகளும் வேறொரு பிராந்திய நாட்டுடன் நட்பாக செயல்படவேண்டிய அவசியம் ஏற்படும் என்பதை சவுதிக்கு சுட்டிக்காட்டுதல் (அதன் காரணமாகவே குறித்த செனட் நடவடிக்கை ஒரு சட்டவலுவற்ற தீர்மானமாக நிறைவேற்றப்படுகிறது), மூன்றாவதாக, ஐக்கிய அரபு இராச்சியத்தை தனது சொந்த மூலோபாய நகர்வுகளை மேற்கொள்ள சுகந்திரமளித்தல் – அதன் மூலம், சவுதிக்கு அடுத்ததாக இன்னொரு நாட்டை (குறிப்பாக சவுதிக்கு ஆதரவான ஒரு நாட்டை) தனது பிராந்திய நலன்களுக்கு பயன்படுத்தல், நான்கு, மேற்கத்தேய நாடுகள் வரிசையில் அமெரிக்கா தனியாக பிராந்திய நலன்களுக்காக உலக மனித உரிமையையே அடகுவைக்கின்றது என்ற விமர்சனத்திலிருந்து தன்னை பாதுகாத்தல் (யேமென் மனிதாபிமானத்துக்கு எதிரான சவுதியின் நகர்வுகளில் அமெரிக்கா கண்மூடித்தனமாக இருந்தமை குறிப்பிடத்தக்கது) என பல காரணிகளின் அடிப்படையிலேயே குறித்த தீர்மானம் முன்மொழியப்பட்டுள்ளது.

ஆகவே, வெளிப்படையாக இது அமெரிக்கா தனது மத்திய கிழக்கு பிராந்திய நலன்களுக்காக மூலோபாய நட்பு நாடான சவுதிக்கு எதிராக தீர்மானம் மேற்கொள்ளுதல் அதன் வெளிவிவாகார கொள்கைக்கு முரணாக அமையும் என தென்பட்டாலும், அதன் உள்ளார்ந்தம் மிகவும் கணிக்கப்பட்ட செயற்ப்பாடே என்பதே ஆழமாக நோக்கப்படவேண்டியதாகும்.