மத அடையாளம் இல்லாமல் மலாலா கியூபெக்கில் கற்பிக்க முடியும் – கியூபெக் கல்வி அமைச்சர்

பெண்கள் கல்விக்காக பிரசாரம் மேற்கொண்டு வரும் மலாலா யூசப்ஃசாயுடன் (Malala Yousafzai) எடுத்துக்கொண்ட ஔிப்படத்தை வெளியிட்டமைக்காக கனடாவின் கியூபெக் மாகாண கல்வி அமைச்சர், கடுமையாக விமர்சிக்கப்பட்டுள்ளார்.

கியூபெக் மாகாண கல்வி அமைச்சர் ஜோன் பிரான்சுவா ரோபேஸ் (Jean-François Roberge), பிரான்ஸில் மலாலாவைச் சந்தித்துள்ளார்.

மலாலாவுடன் தான் தோன்றும் ஔிப்படத்தை டுவிட்டரில் வெளியிட்ட ரோபேஸ், இந்தச் சந்திப்பின்போது, கல்வி மற்றும் சர்வதேச மேம்பாட்டுக்கான விடயங்கள் பற்றி இருவரும் விவாதித்ததாகத் தெரிவித்துள்ளார்.

அண்மையில் கியூபெக் ஒரு சர்ச்சைக்குரிய சட்டமொன்றை நிறைவேற்றியது, ஆசிரியர்கள் உட்பட சில அரசு ஊழியர்கள் பணியின் போது மத அடையாளங்களை அணிவதை அந்த சட்டம் தடைசெய்துள்ளது.

ஔிப்படத்தில் மலாலா தலையில் இஸ்லாமிய கலாசார ஆடையை அணிந்திருப்பதை அவதானித்த பலர், குறித்த சட்டத்தை மேற்கோள் காட்டி, அமைச்சர் ரோபேஸை கடுமையாக விமர்சித்தனர்.

மலாலா கியூபெக்கில் கற்பிக்க விரும்பினால், அதுபற்றி உங்கள் நிலைப்பாடு என்ன என்று ஊடகவியலாளர் சலீம் நாடிம் வால்ஜி என்பவர் டுவிட்டரில் அமைச்சரிடம் கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதில் அளித்த அமைச்சர், “இது ஒரு மகத்தான மரியாதை என்றும், கியூபெக்கில், பிரான்ஸிலும் ஏனைய சகிப்புத் தன்மையுள்ள நாடுகளிலும், ஆசிரியர்கள் தங்கள் செயற்பாடுகளை மேற்கொள்ளும் போது, மத அடையாளங்களை அணிய முடியாது என்று நான் நிச்சயமாக அவரிடம் கூறுவேன்” என தெரிவித்துள்ளார்.

அதேவேளை, எதிர்வரும் ஓகஸ்ற் மாதம் பிரான்ஸில் இடம்பெறவுள்ள G7 மாநாட்டின் போதும், கல்வித் திட்டங்கள் தொடர்பாக கலந்துரையாடுவதற்குத் திட்டமிட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.