குழந்தைகளை கனடாவுக்கு கொண்டு வருவதில் சட்ட சிக்கல்

இத்தாலியில் பிறந்து கனடா குடியுரிமை பெற்ற தந்தையொருவர், வாடகைத் தாய் மூலம் பெற்ற குழந்தைகளை கனடாவுக்கு கொண்டு செல்வதில் சட்ட சிக்கலை எதிர்நோக்கியுள்ளார். இதன்காரணமாக அவர் கடந்த ஒரு மாதம் வரை பல இடங்களுக்கு ஏறியிறங்க வேண்டிய நிலைமைக்கு தள்ளப்பட்டார்.

இத்தாலியில் பிறந்து கனடா குடியுரிமையை ஜோசப் பெற்றுக் கொண்டாலும், அவரது குழந்தைகள் ஆப்பிரிக்க நாடு ஒன்றில் பிறந்ததால் கனடா சட்டப்படி அவர்களுக்கு ஜோசப்பின் குடியுரிமை சட்டரீதியாக பொருந்தாது.

கென்ய நகரம் ஒன்றில் 81,000 டொலர்கள் செலவிட்டு இந்திய செயற்கை கருத்தரிப்பு நிலையம் ஒன்றின் உதவியுடன் வாடகைத்தாய் மூலம் இரண்டு குழந்தைகளுக்கு தந்தையானார் ஜோசப்.

கிழக்கு ஆப்பிரிக்க நாடு ஒன்றில் வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொள்வதில் சிக்கல்கள் குறைவு மற்றும் கட்டணமும் குறைவு என்பதால் ஜோசப் கென்யாவை தேர்ந்தெடுத்தார்.

வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொள்வதிலுள்ள சிக்கல்கள் என்னென்ன என்பதைக் குறித்து தூதரகம், மருத்துவமனை மற்றும் வழக்கறிஞர்களிடமும் கலந்தாலோசித்த பின்னரே அவர் கென்யாவைத் தேர்ந்தெடுத்திருந்தார்.

குழந்தைகள் பிறந்து அவர்களை தனது வீட்டுக்கு கொண்டு வரும் நேரத்தில், கனடா சட்டப்படி அவர்கள் கனடா குடிமக்களாக கருதப்பட மாட்டார்கள் என்ற செய்தி கூறப்பட்ட நிலையில் ஜோசப்புக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை.  ஒரு மாத போராட்டத்திற்குப் பின் இந்த வாரம் அவரது குழந்தைகளுக்கு விசா வழங்கப்பட்டு தங்கள் தந்தையுடன் சேர்ந்திருக்கிறார்கள்.