இரண்டு சிறுமிகளுடன் தந்தையும் மர்மமான முறையில் மாயம்

கனடாவில் இரண்டு சிறுமிகளும் அவர்களது தந்தையும் மர்மமான முறையில் மாயமான நிலையில், சிறுமிகளின் தாய் கண்ணீர் மல்க கோரிக்கை ஒன்றை வைத்துள்ளார்.

புதன்கிழமை இரவு கியூபெக்கைச் சேர்ந்த மார்ட்டின் கார்ப்பெண்டர், தனது மகள்கள் நோரா (11) மற்றும் ரோமி (6) ஆகியோருடன் மாயமானார், அவர்கள் சென்ற கார் சற்று தொலைவில் விபத்துக்குள்ளாக, தகவலறிந்து விரைந்த பொலிசார் அங்கு சென்றபோது காரில் யாருமில்லை.

சாட்சியங்கள் மற்றும் குழந்தைகளின் தாயார் ஆகியோரிடம் விசாரித்ததிலிருந்து, மார்ட்டின் குழந்தைகளை கடத்திச் சென்றிருக்கலாம் என பொலிசார் நம்புகின்றனர்.  பொலிசார் காணாமல் போனவர்களை கண்டுபிடிப்பதற்காக பொதுமக்களின் உதவிய நாடியுள்ளதோடு, ஆம்பர் எச்சரிக்கை ஒன்றையும் விடுத்துள்ளார்கள்.

இதற்கிடையில் மார்ட்டினின் மனைவி தன் கணவனிடம் கண்ணீர் மல்க கோரிக்கை ஒன்றை வைக்கும் வீடியோ ஒன்றை பொலிசார் வெளியிட்டுள்ளனர். அந்த வீடியோவில், மார்ட்டினின் மனைவியாகிய Cathy Gingras, மார்ட்டின், நாங்கள் மிகுந்த கவலையில் இருக்கிறோம். அந்த விபத்துக்கு பிறகு உங்களிடமிருந்து எந்த தகவலும் இல்லை, நீங்கள் எப்படியிருக்கிறீர்கள், நோராவும் ரோமியும் எப்படியிருக்கிறார்கள்?

நீங்கள் நன்றாகத்தான் இருக்கிறீர்கள் என்பதை அறிந்துகொள்ள நாங்கள் ஆவலாக இருக்கிறோம், நீங்கள் நன்றாக இருக்கிறீர்கள் என்பதை எங்களுக்கு தெரியப்படுத்த ஏதாவது சிக்னல் கொடுங்கள், உங்கள் பெற்றோரை தொலைபேசியில் அழைக்கலாம், ஏதாவது தகவல் கொடுங்கள். எங்களைப் பொருத்தவரை நீங்கள் அனைவரும் நன்றாக இருக்கிறீர்கள் என்பதுதான் முக்கியம் என்று அந்த வீடியோவில் Cathy Gingras பேசியிருக்கிறார்.

இதற்கிடையில் பொலிசாரின் விசாரணையில் பல்வேறு புதுப்புது கோணங்கள் வெளியாகி வருகின்றன. விபத்து நடந்தபோது, காரில், இரண்டு சிறுமிகளில் ஒரு சிறுமிதான் இருந்தாள் என்று ஒரு தகவல் கிடைத்துள்ளது. அது உண்மையா என்பது குறித்து தெரியவில்லை. பொலிசார் காணாமல் போனவர்களைக் கண்டுபிடிக்க உதவுமாறு பொதுமக்களுக்கு கோரிக்கை வைத்துள்ளார்கள்.