ஒஷாவாவில் தாய் கொலை – மகன் அதிரடியாக கைது

ஒஷாவாவில் எரிந்துகொண்டிருந்த அடுக்குமாடிக் குடியிருப்பு வீடு ஒன்றுக்குள் இருந்து பெண் ஒருவரிச் சடலத்தை மீட்ட பொலிஸாரின் விசாரணையில், அந்தப் பெண் கொலை செய்யப்பட்டுள்ளது உறுதியாகியுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இதனை அடுத்து அவரது மகன் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் விசாரணைகளை மேற்கொண்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நொங்குவின் வீதியில் உள்ள குறித்தவீட்டில், கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு 7.10 அளவில் இந்த தீப்பரவல் அறியப்பட்டு, அங்கு தீயணைப்பு படையினர் விரைந்து சென்று தீப்பரவலைக் கட்டுப்பாடடினுள் கொண்டுவந்தனர்.

இதனை அடுத்து அதற்குள் இருந்து வயதான பெண் ஒருவர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டதாக டுர்ஹம் பிராந்திய பொலிஸார் தகவல் வெளியிட்டிருந்தனர்.

சுமார் 80 வயது மதிக்கத்தக்க அந்தப் பெண் உயிராபத்தான நிலையில் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போதிலும், சிறிது நேரத்தில் அவர் உயிரிழந்து விட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

விசாரணைகளில் இருந்து அவர் கொலை செய்யப்பட்டுள்ளமை தெரியவந்ததை அடுத்து, மனிதக் கொலை தொடர்பிலான சிறப்பு விசாரணைப் பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டனர்.

இந்த விசாரணைகள் இடம்பெற்று சிறிது நேரத்திலேயே 56 வயதான ஆண் ஒருவரைக் கைது செய்துள்ளனர். மேலும் கைது செய்யப்பட்டவர் அவருடைய மகன் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் அந்தப் பெண் எவ்வாறு கொல்லப்பட்டார் என்ற விபரங்கள் எதனையும் இதுவரை வெளியிடாத பொலிஸார், மேலதிக விசாரணைகள் முன்னெடுத்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

மேலும் டுர்ஹம் பிராந்தியத்தில் இந்த ஆண்டில் இடம்பெற்றுள்ள ஐந்தாவது மனிதக் கொலை இது என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.