கொரோனா வைரஸ் அறிகுறிகளை கண்டறிய விண்ட்சர் பிராந்திய மருத்துவமனை விஷேட திட்டம்

உலகையே அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் கனடாவிலும் பரவியிருக்க கூடுமென அச்சம் வெளியிடப்பட்டுள்ள நிலையில், இதனை கண்டறிவதற்கு விண்ட்சர் பிராந்திய மருத்துவமனை விஷேட வேலை திட்டமொன்றை முன்னெடுத்துள்ளது.

கார்ப்பரேட் கம்யூனிகேஷன்ஸ் மற்றும வின்ட்சர் பிராந்திய மருத்துவமனைக்கான அரசு மற்றும் சமூக உறவுகளின் மேலாளர் ஸ்டீவ் எர்வின் குறித்த திட்டம் குறித்து தெளிவுப்படுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், ‘சுவாச நோய்த்தொற்று அறிகுறிகளை முன்வைக்கும் நோயாளிகளை அவர்கள் சமீபத்தில் சீனாவுக்குச் சென்றிருக்கிறார்களா என்பதைக் கண்டறிய மருத்துவமனை நேர்காணல் செய்து வருகிறது.

அவ்வாறு தொற்று இருப்பது அடையாளம் காணப்பட்டால், நாங்கள் எங்கள் வழக்கமான நடைமுறைகளைப் பின்பற்றுவோம்.

கொரோனா வைரஸ் அறிகுறிகளை முன்வைக்கும் நோயாளிகளை ஒரு சிறப்பு தனிமைப்படுத்தும் அறைக்கு அனுப்படுவர்.

எனினும், விண்ட்சர் பிராந்திய மருத்துவமனையில் எந்த நோயாளிகளும் கொரோனா வைரஸ் அறிகுறிகளைக் கொண்டிருக்கவில்லை’ என கூறினார்.

இதற்கிடையில், கனடாவின் சுகாதார அமைச்சர் பாட்டி ஹஜ்து இதுகுறித்து கூறுகையில், ‘கனடாவில் பலர் நோயால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்பதற்கான அறிகுறிகளைக் கவனித்து வருகின்றோம். எனினும், கனடியர்களுக்கு ஆபத்து குறைவாகவே உள்ளது’ என கூறினார்.

சீனாவில் தீவிரமாக பரவிவரும் கொரோனா வைரஸிற்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 25 ஆக அதிகரித்துள்ளது. அத்தோடு, பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் 830 ஆக அதிகரித்துள்ளது.

சீனா மட்டுமல்லாமல் தென்கொரியா, தாய்லாந்து, ஜப்பான், அமெரிக்கா ஆகிய நாடுகளிலும் இவ்வைரஸ் பரவியுள்ளது குறிப்பிடத்தக்கது.