எத்தகைய சவால்களையும் எதிர்கொள்வதற்கும் கனடிய அரசு தயாராக இருக்கிறது – கனடிய பிரதமர்

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக கனடிய மக்களிடையே ஏற்பட்டிருக்கின்ற பதற்ற நிலையினை போக்கும் முகமாக, நாட்டு மக்களை பாதுகாக்க கனடிய அரசு என்ன விதமான முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவுள்ளது என்பதனையும் பொருளாதார ரீதியாக
பாதிக்கப்பட்டிருக்கின்ற தொழிலாளர்களையும், தொழில் வழங்குநர்களையும் கனடிய அரசு எவ்வாறான திட்டங்களில் மூலம் பாதுகாக்கவுள்ளது என்பது தொடர்பாகவும் இன்று காலை கனடிய பிரதமர் ஜஸ்டின் ரூடோ தனது உத்தியோக பூர்வ இல்லத்திலிருந்து ஊடகங்களுக்கு நேரடியாக விளக்கமளித்தார்.

கோவிட்-19 உலகளாவிய பெருந்தொற்று நோய்க்கு எதிராகக் கனடா நடவடிக்கை எடுத்து வரும் வேளையில், பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ இன்று பின்வரும் விடயங்களை அறிவித்தார்.

கோவிட்-19 காரணமாகப் பாதிக்கப்பட்ட வணிக நிறுவனங்களுக்கு 75 சதவீதம் வரையான சம்பள மானியம் வழங்கப்படுமெனக் கனேடிய அரசு மார்ச் 27 ஆந் திகதி அறிவித்தது. கனடா அவசர சம்பள மானியம் (Canada Emergency Wage Subsidy) என்ற இந்த மானியதைப் பெறுவதற்கான தகுதி குறித்த மேலதிக தகவல்களைப் பிரதம மந்திரி இன்று வெளியிட்டார்:

• இதற்கு  தகுதி பெறுவதற்கு வணிக வருமானம் கோவிட்-19 காரணமாக ஆகக் குறைந்தது 30 சதவீதத்தால் குறைவடைந்திருக்கவேண்டும்.
• நிறுவனங்கள் இந்த மானியத்தைப் பெறுவதற்குத் தகுதி பெறுவதற்கு அங்குள்ள பணியாளர்களின் எண்ணிக்கை தடையாக இருக்க மாட்டாது. ஒரு பணியாளராக இருந்தாலும், 1000 பணியாளர்களாக இருந்தாலும் வேலைவாய்ப்பைப் பாதுகாத்து ஆதரவளிப்பதற்கு இந்த மானியத் திட்டம் உதவியளிக்கும்.
• இலாப நோக்கற்ற நிறுவனங்கள், தொண்டு அமைப்புக்கள், சிறிய மற்றும் பெரிய வணிக நிறுவனங்கள் அனைத்தும் இந்த மானியத்தைப் பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம்.

கோவிட்-19 காரணமாகப் பாதிக்கப்பட்ட பணியாளர்களுக்கு கனடா அவசர சம்பள மானியம் (Canada Emergency Wage Subsidy) மூலம் பின்வருவன கிடைக்கும்:
• கோவிட்-19 காரணமாகப் பாதிக்கப்பட்ட நிறுவனம் ஒன்றில் பணியாளர்கள் தொடர்ந்தும் பணிபுரிந்தால், அவர்கள் சம்பளமாகப் பெறும் முதல் 58,700 டொலரின் 75 சதவீதம் வரையான பணத்தை அரசு வழங்கும். வாரமொன்றுக்கு 847 டொலர் வரையான பணம் வழங்கப்படும்.
• மார்ச் 15 ஆந் திகதியில் இருந்து இந்த மானியம் வழங்கப்படும்.

கடந்த சில நாட்களாக அறிவிக்கப்பட்ட அவசர நடவடிக்கைகள் பொருளாதாரத்தின் அனைத்துப் பிரிவுகளிலும் உள்ளவர்கள் கோவிட்-19 காரணமான பாதிப்பை எதிர்கொள்வதற்கு உதவியளித்துப் பலமான எதிர்காலம் ஒன்றுக்கான தயார்படுத்தலை மேற்கொள்வதற்காக உருவாக்கப்பட்ட அனைத்து விடயங்களையும் உள்ளடக்கிய மூன்று அம்சத் திட்டம் ஒன்றில் அடங்குகின்றன.

• கனடா அவசர சம்பள மானியம் (Canada Emergency Wage Subsidy), வேலைவாய்ப்பைப் பாதுகாப்பதில் கவனம் செலுத்துகிறது.
• கனடா அவசர நடவடிக்கைக் கொடுப்பனவு (Canada Emergency Response Benefit (CERB)) வேலைவாய்ப்பை இழந்தோருக்கு உதவியளிக்கிறது.
• உத்தரவாதமளிக்கப்பட்ட கடன்களை இலகுவாகப் பெறுவதற்கான ஏற்பாடுகள் அனைத்து அளவுகளையும் உடைய வணிக நிறுவனங்கள் கடன்களைப் பெற்றுக்கொள்ள உதவியாக இருக்கிறது.

நிதியமைச்சர் பில் மோர்னோ (Bill Morneau), சிறுவணிகத்துறை அமைச்சர் மேரி இங் (Mary Ng) ஆகியோர் இந்தத் திட்டத்தின் விபரங்களை விளக்கும் ஆவணங்களை வழங்குவார்கள்.

ஏற்படக்கூடிய அனைத்துச் சூழ்நிலைகளிலும் நடவடிக்கைகளை எடுத்துக் கனேடியர்களுக்கு உதவியளிப்பதற்கு அரசு தயாராக இருப்பதாகப் பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ அறிவித்தார்.

• கோவிட்-19 இற்கு எதிரான போராட்டத்தில் சமூகத்திற்கு உதவியளிப்பதற்குக் கனேடிய பாதுகாப்புப் படையினர் கடந்த சில வாரங்களாக தயாராகி வருகிறார்கள்.
• மாகாணங்களோ, பிராந்தியங்களோ நடவடிக்கை எடுக்குமாறு இன்றுவரை சமஷ்டி அரசைக் கோரவில்லை. ஆனால், இந்த நிலை மாறினால் உதவியளிப்பதற்குப் பாதுகாப்புப் படையினர் தயாராக இருப்பார்கள்.
• மருத்துவ உபகரணங்களைக் கொண்டுசெல்வது, நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் வெள்ளம் அல்லது காட்டுத்தீ காலப் பகுதியில் வீடுகளைப் பாதுகாப்பது அல்லது பொதுவான அவசரகால தயார்நிலையைப் பேணுவது போன்ற உதவிகளைப் பாதுகாப்புப் படையினர் வழங்கக் கூடியதாக இருக்கும்.

கனேடிய பாதுகாப்புப் படையினரின் பணியையும், அவர்களது ஈடுபாட்டையும் பாராட்டிய பிரதமர்  அவசர நடவடிக்கைப் பணியாளர்கள், மருத்துவத்துறையினர், பராமரிப்புப் பணியாளர்கள், விவசாயிகள், வழங்கல் வலையமைப்பில் பணியாற்றுபவர்கள் ஆகியோருக்கும் நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டார்.