பாகிஸ்தான் இந்து பெண்களுக்கு நீதி கோரி கனடாவில் பாரிய ஆர்ப்பாட்டம்

பாகிஸ்தானில் இந்துப் பெண்களுக்கு எதிராக இடம்பெறும் கொடுமைகளுக்கு நீதி கோரி கனடாவில் உள்ள மக்கள் பலர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கனடாவில் வசிக்கும் சிந்தி இந்துக்கள், மிஸ்ஸிசாகா (Mississauga) சதுக்கத்தில் ஒன்று கூடி, அப்பாவி இந்துச் சிறுமிகள் பலவந்தமாக மதமாற்றம் செய்யப்படுவதை நிறுத்த கோரியும், மதமாற்றம் செய்யப்பட்டவர்களுக்கு நீதி கேட்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அத்துடன், மதத்தை ஆயுதமாகப் பயன்படுத்தி அப்பாவிச் சிறுமிகளைக் கடத்தி, பாலியல் துஷ்பிரயோகம் செய்யும் குற்றவாளிகள் மீது பாகிஸ்தான் அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என வலியுறுத்தியும் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

பாகிஸ்தானில் இடம்பெற்றுவரும் பலவந்தமான மதமாற்ற சம்பவங்களால் சிந்தி இந்துக்கள் மிகுந்த வேதனை அடைந்துள்ளதாக போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் ஒருவர் தெரிவித்தார்.

பாகிஸ்தானில் உள்ள சிறுபான்மையினர்கள் மீதான தாக்குதல்களை நிறுத்தவேண்டும். இந்துச் சிறுமிகளை கடத்தி மதம் மாற்றுவதை பாகிஸ்தான் நிறுத்த வேண்டும் என்ற வாசகங்கள் எழுதிய பதாதைகளை ஏந்திய படி கனடா மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுதவிர, அண்மையில் ஆசிரியரால் கடத்தப்பட்ட இந்துச் சிறுமி பாயல் குமாரிக்கு நீதி கோரியும் போராட்டக்காரர்கள் கோஷமெழுப்பியமை குறிப்பிடத்தக்கது.

அதேபோன்று, பாகிஸ்தானின் பின்தங்கிய பகுதிகளில் வசிக்கும் 18 வயதுக்கு உட்பட்ட இந்துச் சிறுமிகள் பலவந்தமாக கடத்தப்பட்டு முஸ்லிம் நபர்களால் திருமணம் செய்துகொள்ளப்படும் சம்பவங்களும் பரவலாக இடம்பெற்று வருகின்றன.