ரொறன்ரோ போக்குவரத்துக் கழக பேருந்துக்குள் துப்பாக்கிச்சூடு

எட்டோபிகோக் பகுதியில் ரொறன்ரோ போக்குவரத்துக் கழகத்திற்குச் சொந்தமான பேரூந்தினுள் வைத்து மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.

ப்ளூரி ஸ்ட்ரீட் மற்றும் இஸ்லிங்டன் அவென்யூ பகுதியில், நேற்று (சனிக்கிழமை) அதிகாலை 4.20 அளவில் இந்தச் சம்பவத்தில் படுகாயமடைந்த இருவரும் தற்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பேரூந்தினுள் இரண்டு ஆண்கள் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் இருந்ததை உறுதிப்படுத்தியுள்ள பொலிஸார், அதில் ஒருவர் உயிராபத்தான காயங்களுடனும், மற்றையவரும் பாரதூரமான காயங்களுடனும் இருந்ததாக தெரிவித்துள்ளனர்.

இந்த துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதலை அடுத்து நான்கு சந்தேக நபர்கள் இஸ்லிங்டன் அவனியூவில் வடக்கு நோக்கித் தப்பியோடிச் சென்றமை அவதானிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், அவர்கள் நால்வரையும் தேடி வருவதாக தெரிவித்துள்ள போதிலும், அவர்களின் அடையாளங்கள் தொடர்பாக பொலிஸார் எந்தவித தகவல்களையும் வெளியிடவில்லை.