சீனா சட்டவிரோத தடுப்புக்காவலில் இருந்து கனேடியர்களை விடுவிக்க வேண்டும் – அமெரிக்க தூதுவர்

சீனாவில் சட்டவிரோதமாக தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள இரண்டு கனேடியர்கள் தொடர்பாக அமெரிக்க கூடிய கவனம் செலுத்தி வருவதாக கனடாவுக்கான அமெரிக்க தூதுவர் கெல்லி க்ராஃப்ட் தெரிவித்துள்ளார். நேற்று (சனிக்கிழமை) இது தொடர்பாக ஊடக அறிக்கையொன்றை வௌியிட்டுள்ள அவர்,

முன்னாள் இராஜதந்திரி மைக்கேல் கோவ்ரிக் மற்றும் தொழில் முனைவர் மைக்கேல் ஸ்போவர் ஆகியோரின் கைதுகள் ஏற்றுக்கொள்ள முடியாதது மற்றும் தன்னிச்சையான கைதுகளை முடிவுக்கு கொண்டுவருமாறு சீனாவை அவர் வலியுறுத்தியுள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பாக அமெரிக்க தூதுவர் பொதுவௌியில் கருத்து வௌியிட்டிருப்பது இதுவே முதன்முறையாகும்.  கடந்த டிசம்பர் மாதம் 10 ஆம் திகதி சீனா இரண்டு கனடா நாட்டு பிரமுகர்களை காரணங்கள் எதுவும் இன்றி கைது செய்தது.

முன்னதாக அமெரிக்காவின் வேண்டுகோளின் பேரில் சீனாவின் முக்கிய தொலைத்தொடர்பு நிறுவனத்தின் நிறைவேற்று அதிகாரியான மெங் வான்ஷோவை கனடா கைது செய்தமைக்கு அழுத்தம் கொடுக்கும் வகையிலேயே இந்த கைது இடம்பெற்றிருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.