வோன் பகுதியில் ஆண் ஒருவர் சுட்டுக்கொலை – யோர்க் பிராந்திய பொலிஸார் விசாரணை

வோன் பகுதியில் ஆண் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் யோர்க் பிராந்திய பொலிஸாரின் மனிதக் கொலை தொடர்பிலான சிறப்பு விசாரணைப் பிரிவினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

நேற்று (சனிக்கிழமை) அதிகாலை இரண்டு மணியளவில் ஆண் ஒருவர் துப்பாக்கிச் சூட்டுக்காயங்களுடன் வைத்தியசாலைக்குச் சென்று சேர்ந்த தகவல் கிடைத்ததை அடுத்து விசாரணைகள் ஆரம்பமானதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

இன்று அதிகாலை 1:45 அளவில் குறித்த இந்தத் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் இடம்பெற்றதாக ஆரம்பகட்ட விசாரணைகள் தெரிவிப்பதாகவும், Cranston park Avenue மற்றும் Ridgeway Court குடியிருப்புப் பகுதி வீடொன்றுக்கு வெளியே இடம்பெற்ற மோதலைத் தொடர்ந்து இந்த துப்பாக்கிப் பிரயோகம் இடம்பெற்றுள்ளதாகவும் பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளனர்.

இதன்போது காயமடைந்த குறித்த அந்த நபர், பின்னர் வைத்தியசாலையில் உயிரிழந்து விட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை சம்பவ இடத்திலிருந்து கறுப்பு நிற வாகனம் ஒன்றில் சந்தேக நபர்கள் தப்பிச் சென்றமை அவதானிக்கப்பட்டுள்ள நிலையில், இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட சந்தேக நபர்களைத் தேடி வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்தச் சம்பவத்தை நேரில் பார்த்தோர் அல்லது அது தொடர்பில் தகவல் அறிந்தோர், கைத்தொலைபேசி மூலம் எடுக்கப்ப்டட இது தொடர்பான ஒளிப்பதிவுகளை அல்லது நிழற்படங்களை வைத்திருப்போர் தம்மைத் தொடர்பு கொள்ளுமாறும் விசாரணை அதிகாரிகள் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.