கத்திக்குத்து சம்பவம் – இளம் பெண் மருத்துவமனையில் அனுமதி

ஸ்பரோ மிட்லான்ட் பார்க் பகுதியில் பலமுறை கத்தியால் குத்தப்பட்டு பலத்த காயங்களுக்கு உள்ளான 22 வயதுப் பெண் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பிரிம்லி வீதி மற்றும் லோறன்ஸ் அவனியூ பகுதியில், பிர்க்டேல் வீதியில் நேற்று (வியாழக்கிழமை) முற்பகல் 11:30 அளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

பாரதூரமான நிலையில் காணப்பட்ட அவர் உடனடியாகவே அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சத்திரசிகிச்சைக்கு உள்ளாக்கப்பட்டதாகவும், அவர் உயிர் பிழைத்துவிடுவார் என்று நம்பப்படுவதாகவும் ரொறன்ரோ அவசர மருத்துவப் பிரிவினர் தகவல் வெளியிட்டுள்ளனர்.

தாக்குதலுக்கு உள்ளான பெண்ணும் தாக்குதலாளியும் ஒருவரை ஒருவர் முன்னரே அறிந்தவர்கள் என்று கூறப்படுகின்ற போதிலும், சந்தேக நபர் இன்னமும் கைது செய்யப்படவில்லை.

மேலும், இத்தாக்குதலுக்கான காரணமும் கண்டறியப்படாத நிலையில், இதுகுறித்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.