சுய தனிமைப்படுத்திக் கொள்வது வெறுமனே பரிந்துரை அல்ல அது கட்டாயமானது – பிரதமர்

COVID-19 எனப்படும் கொரோனா வைரஸின் தாக்கம் தொடர்பாகவும் நாட்டு மக்களை பாதுகாக்க கனடிய அரசு எந்தவிதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க உள்ளது என்பதனை விளக்கும் விதமாக நேற்று(செவ்வாய்க்கிழமை) காலை 11.15 மணியளவில் கனடிய பிரதமர் ஜஸ்டின் ரூடோ தனது உத்தியோக பூர்வ இல்லத்திலிருந்து ஊடகங்களுக்கு நேரடியாக விளக்கமளித்தார்.

கோவிட்-19 உலகளாவிய பெருந்தொற்று நோய்க்கு எதிராகக் கனடா நடவடிக்கை எடுத்து வரும் வேளையில், பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ இன்று பின்வரும் விடயங்களை அறிவித்தார்:

கோவிட்-19 தொடர்பான அவசர சட்டமூலத்தை நிறைவேற்றுவதற்காக நாடாளுமன்றம் இன்று மீண்டும் கூடுகிறது. கனேடியர்கள் அவர்களுக்குத் தேவையான உதவியை இயலுமான விரைவில் பெற்றுக் கொள்வதற்காக இந்தச் சட்டமூலத்தை நிறைவேற்றுவது குறித்து மூன்று எதிர்க்கட்சிகளினதும் தலைவர்களுடனும் உரையாடியதாகப் பிரதம மந்திரி அறிவித்தார்.

தற்போது, முன்னொருபோதும் ஏற்படாத சூழ்நிலை ஏற்பட்டுள்ள நிலையில், வேகமான செயற்பாட்டின் முக்கியத்துவதை பிரதம மந்திரி வலியுறுத்தினார். அத்துடன், கனேடியர்களுக்கு இயலுமான விரைவில் உதவியை வழங்க முயற்சி எடுக்கப்படும் சந்தர்ப்பத்தில், கனடாவின் ஜனநாயக கட்டமைப்புக்களில் தாம் கொண்டிருக்கும் நம்பிக்கையையும், இந்த ஜனநாயக கட்டமைப்புக்களை பாதுகாப்பதற்கு தாம் கொண்டுள்ள உறுதிப்பாட்டையும் அவர் வலியுறுத்தினார்.

வெளிநாடுகளில் சிக்கியிருக்கும் கனேடியர்களை மீண்டும் கனடாவுக்குக் கொண்டுவருவதற்கென கனேடிய அரசு வெவ்வேறு நாடுகளின் அதிகாரிகளுடனும், வான்போக்குவரத்துத் தொழிற்துறையுடனும் தொடர்ந்து செயற்படுகிறது. இதுவரை ஒரு மில்லியனுக்கும் அதிகமான கனேடியர்கள் கனடா திரும்பியுள்ளார்கள்.

பெருவில் இருந்து முதலாவது விமானம் இன்று புறப்பட்டது. இந்த விமானத்தில் தனித்துப் பயணம் செய்யும் இளையோரும், பாரதூரமாக நோயுற்றவர்களுக்கும் முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது. இந்த வாரத்தின் பிற்பகுதியில் மேலதிக விமான சேவைகள் இடம்பெற உள்ளன.

எக்வடோர், எல் சல்வடோர், குவாத்தமாலா, ஹொன்டூரஸ், ஸ்பெய்ன், பெரு, மொறோக்கோ ஆகிய நாடுகளில் இருந்து வரும் விமான சேவைகளுக்கு மேலதிகமாகப் பனாமா, ருனீசியா, யுக்ரெய்ன் ஆகிய நாடுகளில் இருந்து விமான சேவைகளை ஏற்பாடு செய்வதற்கும் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

ஒரு மில்லியனுக்கும் அதிகமான கனேடியர்கள் கனடா திரும்பியுள்ள நிலையில், பயணிகள் சுயமாகத் தனிமைப்படுத்திக் கொள்வதன் தேவை வலியுறுத்தப்பட்டுள்ளது.

பயணிகள் 14 நாட்கள் சுய தனிமைப்படுத்திக் கொள்வது, வெறுமனே பரிந்துரை அல்ல, அது கட்டாயமானது. சுய தனிமைப்படுத்திக் கொள்ளல் நடைமுறைகள் உதாசீனப்படுத்தப்பட்டால், மேலும் இறுக்கமான நடவடிக்கைகளை எடுப்பதற்கு அரசு உறுதிபூண்டுள்ளது.

பதின்நான்கு நாள் சுய தனிமைப்படுத்தல் காலத்தில், அண்மையில் பயணம் செய்தவர்களும், சுய தனிமைப்படுத்தலுக்கு உட்பட்டுள்ளவர்களும், பலசரக்குப் பொருட் கொள்வனவு உட்பட்ட அவசிய தேவைகளுக்கும் வீட்டின் வெளியே செல்லக்கூடாது.

மார்ச் 23 ஆம் திகதி பிரதமருக்கும்,   முதல்வர்களுக்கும் இடையில் இடம்பெற்ற தொலைபேசி உரையாடலின்போது, பின்வரும் விடயங்கள் எட்டப்பட்டன:

அனைத்துப் பிராந்தியங்களுக்கும் தேவைப்படும் மருத்துவப் பரிசோதனைக் கருவிகள், மருத்துவ உபகரணங்கள் உட்பட்ட அனைத்தும் கிடைப்பதை உறுதி செய்வதற்குத் தொடர்ந்தும் சேர்ந்து செயற்படுவதற்கான உறுதிமொழி

நாடெங்கும் உள்ள கனேடியர்கள் பாதுகாப்பாக இருப்பதற்கு மேலும் நெருக்கமாகச் சேர்ந்து செயற்பட்டு, மேலதிக நடவடிக்கைகளை எடுப்பதற்கான உறுதிப்பாடு

மாகாணங்களிலும், பிராந்தியங்களிலும் நடைமுறைப்படுத்தப்பட்ட அவசரகால உத்தரவுகளை மீளாய்வு செய்வதற்கான நடவடிக்கை

 கனடிய அரசு அவசரகாலச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட மாட்டாதென இதுவரை முடிவு செய்யப்படவில்லை. வைரஸ் பரவுவதை தடுப்பதற்குத் தேவைப்படுவதாக நிபுணர்கள் முன்வைக்கும் ஆலோசனைகளும், அரசின் விதிகளும் பின்பற்றப்படாவிட்டால், இறுதி முயற்சியாக மேலதிக நடவடிக்கைகளை எடுப்பதற்கு அரசு தயாராக இருக்கிறது.