எட்மன்டனில் சிறுவர்கள் உட்பட ஐவர் உயிரிழந்த தீ விபத்து – பொலிஸ் விசாரணையில் வெளியான தகவல்

எட்மன்டனுக்கு வடமேற்கே ஒரு சிறிய குக்கிராமத்தில் உள்ள வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் ஐந்து பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில் இச்சம்பவம் குறித்த விசாரணையில் சந்தேகம் இல்லை எனவும் குற்றச் செயற்பாடுகள் இடம்பெறவில்லை என்பத விசாரணைகளில் தெரியவந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்தில் குறித்த வீட்டில் இருந்த மூன்று குழந்தைகள் உட்பட ஐவர் அடங்கிய குடும்பம் உயிரிழந்தது.

கடந்த வியாழன் கனடா நேரப்படி மாலை 4 மணிக்கு குறித்த வீட்டிற்கு தீயணைப்பு வீரர்கள் மற்றும் பொலிஸார் சென்றிருந்தனர். எனினும் தீயினால் வீடு முற்றாக எரிந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டது.

அத்துடன், வெள்ளிக்கிழமை அதிகாலை 1:30 மணியளவில் வீட்டில் ஒருவரின் எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக தீயணைப்பு வீரர்கள் தெரிவித்தனர். மேலும், வெள்ளிக்கிழமை அதிகாலை 4:30 மணியளவில் மேலும் நான்கு உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தீயணைப்பு வீரர்கள் பொலிஸாருக்குத் தெரிவித்தனர்.

இந்நிலையில், விபத்தில் இறந்தவர்கள் மார்வின் (81 வயது), ஜேனட் கிப்ஸ் (49) மற்றும் அவர்களது மூன்று பேரக் குழந்தைகள் இரண்டு வயது முதல் எட்டு வயது வரையானவர்கள் என அவர்களின் உறவினர் ஒருவர் உறுதிப்படுத்தியுள்ளார்.

இதேவேளை, இந்த குடியிருப்பு சில காலமாகவே உள்ளதாகவும் பழைய குடியிருப்பு எனவும் தெரிவித்துள்ள பொலிஸார், இதில் வசித்தவர்கள் அங்கு சிறிது காலம் வாழ்ந்திருக்கிறார்கள் என்றும் தெரிவித்துள்ளனர்.