ஈஸ்ட் யோர்க் பகுதியில் விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பியோடிய சாரதி கைது

ஈஸ்ட் யோர்க் பகுதியில் வீடு ஒன்றின் முகப்பின் மீது வாகனத்தை மோதிவிட்டு, தப்பியோடிய சாரதியை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

விபத்தை ஏற்படுத்திவிட்டு காலை எட்டு மணியளவில் அவர் சிறிய காயங்களுடன் உள்ளூர் மருத்துவமனை ஒன்றுக்கு சென்று சேர்ந்ததாகவும், பின்னர் அவர் கைது செய்யப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்று (ஞாயிற்றுக்கிழமை), லும்ஸ்டன் அவென்யூ பகுதியில் கிழக்கு நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த கறுப்பு நிற மேர்சடிஸ் ரக வாகனம், சிஷோல்ம் அவென்யூவில் உள்ள வீதி வளைவில் கட்டுப்பாட்டினை இழந்து வீதி சமிக்கைகள் சிலவற்றையும் மோதியவாறு அருகே இருந்த வீடு ஒன்றின் முகப்பின் மீது மோதி நின்றுள்ளது.

இந்தச் சம்பவம் இடம்பெற்ற வேளையில் அந்த வீட்டின் உரிமையாளர் வீட்டினுள் உறங்கியவாறு இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

அந்த வீட்டின் கட்டுமானங்கள் இன்னமும் வதிவதற்கு பாதுகாப்பானதா என்பதனை ஆய்வு செய்வதற்காக, சம்பவ இடத்திற்கு கட்டுமான பொறியாளர்கள் அழைக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.