உக்ரேன் விமானத்தை வீழ்த்தியது ஈரானின் ஏவுகணையே – கனேடிய பிரதமர்

ஈரானில் விபத்துக்குள்ளான உக்ரேன் விமான விபத்து குறித்து, பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ள நிலையில், இந்த விமானத்தை ஏவுகணை மூலம் தாக்கி வீழ்த்தியது ஈரான் தான் என கனடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கருத்து தெரிவித்த அவர், ”உக்ரேன் விமானத்தை ஏவுகணை மூலம் தாக்கி வீழ்த்தியது ஈரான் தான். இதற்கான ஆதாரம் கிடைத்துள்ளது. எங்கள் உளவுத்தகவல்கள் மட்டுமல்ல; எங்கள் நேசநாடுகளின் உளவுத்தகவல்களும் இதனை உறுதிப்படுத்தியுள்ளன.

ஆனால் இதனை ஈரான் திட்டமிட்டு செய்ததாக நாங்கள் கூறவில்லை. சரியான புரிதல் இல்லாமல், தவறாக புரிந்து கொண்டு இந்த தாக்குதலை நடத்தி இருக்கலாம். ஈரான் வான்வெளியில் அந்த நாட்டின் ஏவுகணை மூலமே இந்த விமானம் வீழ்த்தப்பட்டுள்ளது எனக் கூறியுள்ளார்.

ஈரானின் தெஹ்ரானில் இருந்து கையவ் சென்ற விமானத்தில் ஏழு நாடுகளைச் சேர்ந்த 176 பேர் பயணித்த உக்ரேன் இன்டர்நஷனல் ஏயார்லைன்ஸின் பி.எஸ்.752 விமானம் புதன்கிழமை விபத்துக்குள்ளானது. இதில் பயணித்த அனைவரும் உயிரிழந்தனர். இதில் 63 கனேடியர்களும் அடங்குகின்றனர்.

ஈராக்கின் பாக்தாத்தில் அமெரிக்க படைகளை குறிவைத்து ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்திய போது, இந்த விமானம் தாக்கப்படுகின்ற வகையிலான காணொளியொன்றினை அமெரிக்கா வெளியிட்டுள்ளது.

அத்தோடு விபத்துக்குள்ளான உக்ரேன் விமானத்தில் இருந்து மீட்கப்பட்ட கருப்பு பெட்டியை அதன் உற்பத்தியாளரான அமெரிக்காவை சேர்ந்த போயிங் நிறுவனத்திடமோ அல்லது அமெரிக்க அரசிடமோ ஒப்படைக்க மாட்டோம் என்று ஈரான் அறிவித்துள்ளது. இதுவே தற்போது ஈரான் ஏவுகணை தாக்குதலால் விமானம் வீழ்த்தப்பட்டதா என்ற சந்தேகத்தை ஏற்படுத்த முக்கிய காரணமாக அமைந்துள்ளது.