கனடாவில் உயர் விருது பெற்றவருக்கு நேபாளத்தில் 16 வருட சிறைத் தண்டனை

கனடா அரசாங்கத்தால் உயரிய விருது வழங்கி அங்கீகரிக்கப்பட்ட பிரபல சமூக ஆர்வலர் ஒருவருக்கு நேபாளத்தில் 16 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் அவரால் பாதிக்கப்பட்ட ஒவ்வொருவருக்கும் தலா 5,000 அமெரிக்க டொலர் இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் நேபாள நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

கனடாவின் உயரிய விருதுகளில் ஒன்றான ‘Order of Canada’ விருது பெற்ற பிரபல சமூக செயற்பாட்டாளரான பீற்றர் டால்க்லிஷ் என்பவருக்கே இந்த சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

அவர் மீதான பாலியல் துஸ்பிரயோக வழக்கு விசாரணை நீண்ட நாட்களாக இடம்பெற்று வந்த நிலையில், டால்க்லிஷ் குற்றமற்றவர் எனவும், அவருக்கு எதிராக இந்த வழக்கு புனையப்பட்டது எனவும் அவருக்காக வாதாடிய வழக்கறிஞர் நாடர் ஹசன் தெரிவித்துள்ளார்.

அத்துடன் இந்த தண்டனை தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்யவுள்ளதாகவும், டால்க்லிஷ் குற்றமற்றவராக வெளியே வருவார் எனவும் ஹசன் நம்பிக்கை தெரிவத்துள்ளார்.

62 வயதான டால்க்லிஷ் கடந்த வருடம் ஏப்ரல் மாதம் 8 ஆம் திகதி அவரது குடியிருப்பில் வைத்து நேபாள பொலிசாரால் கைது செய்யப்பட்டார்.

இவர் 11 மற்றும் 14 வயதுடைய நேபாள சிறுவர்கள் இருவரை பாலியல் துஸ்பிரயோகம் செய்துள்ளதாக பொலிஸார் குற்றம்சுமத்தியுள்ளனர்.

கைதாகும்போது இவரது குடியிருப்பில் இரண்டு நேபாள சிறுவர்களும் இருந்துள்ளனர். நேபாளத்தில் உள்ள ஏழை சிறுவர்களை இலவச கல்வி, வேலை அல்லது வெளிநாட்டு பயணம் என ஆசைகளை தூண்டி தமது பாலியல் இச்சைக்கு பயன்படுத்தி உள்ளார் என விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது.