ஜோர்ச்டவுன் பகுதியில் சந்தேகத்திற்கிடமான தீ பரவல் – ஒருவர் கைது

ஜோர்ச்டவுன் பகுதியில் அமைந்துள்ள வீடொன்றில் ஏற்பட்ட தீபரவல் தொடர்பாக, ஒருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக ஹல்ட்டன் பிராந்திய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைதுசெய்யப்பட்டவர் ஜோர்ச்டவுன் பகுதியைச் சேர்ந்த 62 வயது ஆண் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

கிரேஸ்டோன் கிறிசெண்டில் அமைந்துள்ள வீடொன்றில் நேற்று முன் தினம் (ஞாயிற்றுக்கிழமை) சந்தேகத்திற்கிடமான தீப்பரவல் ஏற்பட்டது.

எனினும், குறித்த வீட்டில் இருந்த பெண் வீட்டின் முகப்பு ஜன்னல் பகுதியில் தீ பரவுவதைக் கண்டு, தீயணைப்பு படையினர் அங்கு சென்று சேர்வதற்கு முன்னரே தீப்பரவலைக் கட்டுப்படுத்தியுள்ளார்

இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள், இதுதொடர்பாக தீவிர விசாரணைகளை முன்னெடுத்தனர்.

இதனையடுத்து, இதுதொடர்பாக கருத்து தெரிவித்த பொலிஸார், குறித்த வீட்டுக்கு வேண்டுமென்றே தீ வைக்கப்பட்டுள்ளமை தெளிவாகத் தெரிவதாகவும், எனினும் இதன்போது எவரும் காயமடையவில்லை என்றும், இந்தச் சம்பவத்தினால் அந்தப் பகுதியில் உள்ள ஏனைய வீடுகளுக்கோ கட்டிடங்களுக்கோ அச்சுறுத்தல் இல்லை எனவும் குறிப்பிட்டனர்.

இந்த நிலையில், ஹல்ட்டன் பிராந்திய பொலிஸார் இதுகுறித்து தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.