கனடாவின் இழப்பீட்டுக் கோரிக்கையை ஈரான் நிராகரித்தது

கடந்த மாதம் உக்ரேனிய விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதில் கொல்லப்பட்ட தமது குடிமக்களுக்கான கனடாவின் 1 பில்லியன் டொலர் இழப்பீட்டுக் கோரிக்கையை ஈரான் நிராகரித்துவிட்டது.

உக்ரேனிய விமான விமானம் தவறாக சுட்டு வீழ்த்தப்பட்டதாக ஈரான் ஒப்புக்கொண்ட போதிலும், கனடாவின் கோரிக்கையில் சட்டபூர்வமான அடிப்படை இல்லை என அந்நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர் முகமது ஜவாத் ஸரீஃப் கூறியுள்ளார்.

அத்துடன், ஈரானின் நடவடிக்கைகள் சர்வதேச விதிகளின் அடிப்படையில் அமைந்தவை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கடந்த மாதம், ஈரான் புரட்சிப் படையின் மூத்த தளபதியின் படுகொலை தொடர்பாக ஈரானுக்கும் அமெரிக்காவிற்கும் இடையில் ஏற்பட்ட பதற்றங்களுக்கு மத்தியில், ஈரானில் இருந்து 176 பயணிகளுடன் புறப்பட்ட, உக்ரைனின் போயிங்-737 என்ற விமானம் 2020, ஜனவரி 8ஆம் திகதி தற்செயலாக சுட்டு வீழ்த்தப்பட்டது.

இந்தச் சம்பவத்தில் விமானத்தில் பயணித்த அனைவரும் உயிரிழந்த நிலையில் இறந்தவர்களில் 57 கனேடியர்களும் உள்ளடங்குகின்றனர்.

இந்நிலையில், சுட்டு வீழ்த்தப்பட்ட உக்ரேனிய விமானத்தின் பாதிக்கப்பட்டவர்கள் சார்பாக கனேடிய வழக்கறிஞர்கள் தொடர்ந்துள்ள வழக்கில் குறைந்தபட்சம் 1.1 பில்லியன் டொலர் இழப்பீடு கோரப்பட்டது. இந்த வழக்கில், விமானம் வேண்டுமென்றே அழிக்கப்பட்டதாகவும், அது ஒரு பயங்கரவாதச் செயல் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, விமானத்தில் இருந்த கருப்புப் பெட்டியை ஆய்வு செய்யத்தருமாறு கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ முன்வைத்த கோரிக்கையையும் ஈரான் நிராகரித்தது. இந்நிலையில், பாதிக்கப்பட்ட தமது குடிமக்களுக்கான கனடாவின் 1 பில்லியன் டொலர் இழப்பீட்டையும் ஈரான் நிராகரித்துள்ளது.