தொடரும் உயிரிழப்புக்கள் – ரொறன்றோவில் ஆடை நன்கொடை தொட்டியை கட்டுப்படுத்த நடவடிக்கை

ஆடை நன்கொடைத் தொட்டிகளை இன்னும் கட்டுப்படுத்துவதற்கு ரொறன்றோ நகரசபை நடவடிக்கை எடுக்க தீர்மானித்துள்ளது.

ரொறன்றோவில் தற்போதுவரை 200 ற்கும் மேற்பட்ட சட்டவிரோத ஆடை நன்கொடைத் தொட்டிகள் பல இடங்களில் வைக்கப்பட்டுள்ளது.

இதில் கடந்த குளிர்கால பகுதியில் வீடற்ற பெண்ணொருவர் குறித்த தொட்டிக்குள் சிக்கி உயிரிழந்ததை அடுத்தே இந்த நடவடிக்கை எடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்த முடிவை அடுத்து நாளை (வியாழக்கிழமை) உரிமம் வழங்குவது தொடர்பான குழு கூட்டம் இடம்பெறவுள்ளது.

இந்த கூட்டத்தின்போது சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் தங்களது பெட்டிகள் பாதுகாப்பாக இருப்பதை நிரூபிக்க சில ஆவணங்களை சமர்ப்பிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ப்ரூர் ஸ்ட்ரீட் மற்றும் டோவர் சௌர்ட் வீதி அருகே வீடற்றவர்கள் இருக்கும் பகுதியில் வைக்கப்பட்டுள்ள ஆடை நன்கொடைத் தொட்டியில், கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் இதுவரை 8 பேர் சிக்கி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.