இன்னுமொரு கனடா நாட்டவர் சீனாவில் கைதானார்

சீன அதிகாரிகளால் மற்றொரு கனேடிய நாட்டவர் கடந்த வாரம் கைதுசெய்யப்பட்டு கிழக்கு நகரமான யந்தாயில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே இரண்டு கனடியப் பிரஜைகளை தடுத்துவைத்துள்ளதன் காரணமாக இரண்டு நாடுகளுக்கும் இடையில் முறுகல்நிலை ஏற்பட்டுள்ள நிலையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த பெயர் வௌியிடப்படாத நபர் தற்போது தூதரக உதவிகளை நாடியுள்ளதாக கனடா வௌிவிவகாரத்துறை அமைச்சை மேற்கோட்காட்டி நியுயோர்க் ரைம்ஸ் செய்தி வௌியிட்டுள்ளது.

கடந்த வருடம் டிசம்பர் மாதம் சீனாவில் கைதுசெய்யப்பட்ட இரண்டு கனேடியர்கள் தடுத்து வைக்கப்பட்டதிலிருந்து இரு நாடுகளுக்கிடையிலான உறவுகள் பாதிக்கப்பட்டன.

ஈரான் பொருளாதாரத்தடை மீறல்கள் தொடர்பாக அமெரிக்க அதிகாரிகளின் வேண்டுகோளின் பேரில் வன்கூவரில் வைத்து ஹுவாவி நிறுவனத்தின் பிரதான நிறைவேற்று அதிகாரியான மெங் வாங்ஷோவை கைதுசெய்தமைக்கு பதிலடி நடவடிக்கையாக அவர்கள் கைதுசெய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.