முக்கிய அறிவிப்பின் பின்னர் 2,300க்கும் அதிகமான துப்பாக்கிகள் கையளிப்பு

துப்பாக்கிகளை வழங்கினால் சன்மானம் வழங்கப்படும் என்ற அறிவிப்பின் பின்னர் குறிப்பிட்ட கால எல்லைக்குள் 2,300க்கும் அதிகமான துப்பாக்கிகள் கையளிக்கப்பட்டுள்ளதாக ரொறன்ரோ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த அறிவிப்பு விடுக்கப்பட்டு அதறகான கால எல்லை நேற்று முன்தினத்துடன் முடிவுக்கு வந்துள்ள நிலையிலேயே இந்தளவிலான துப்பாக்கிகள் கையளிக்கப்பட்டுள்ளன.

707 கைத்துப்பாக்கிகள் உட்பட 2,338 துப்பாக்கிகள் சேகரிக்கப்பட்டுள்ள நிலையில், கடந்த ஒரு தசாப்தத்தில் இவ்வாறு அதிகளவு துப்பாக்கிகள் சேகரிக்கப்பட்ட முதலாவது சம்பவமாக இது என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதற்கு முன்னரும் இவ்வாறு துப்பாக்கிகளைக் கையளிப்போருக்கு சன்மானம் வழங்கப்படும் என்று திட்டங்கள் அறிவிக்கப்பட்ட நிலையில், 2008ஆம் ஆண்டில் 2,000 துப்பாக்கிகளும், 2013ஆம் ஆண்டில் 500 துப்பாக்கிகளும் கையளிக்கப்பட்டன.

கடந்த வாரம் ரொறனரோ நகர நிர்வாகம் குறித்த இந்த திட்டத்திற்காக 7,50,000 டொலர்களை ஒதுக்கிய நிலையில், இம்முறை பெருமளவானோர் தாமாகவே முன்வந்து துப்பாக்கிகளைக் கொடுத்து பணத்தினைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.

இவ்வாறு இந்த திட்டத்தின் கீழ் துப்பாக்கிகளை ஒப்படைப்போருக்கு சன்மானம் வழங்கப்படுவது மட்டுமின்றி, அவர்கள் மீது எவ்வித குற்றச்சாட்டுகளும் பதியப்படாது என்றும் அறிவிக்கப்பட்டது.