மிக பிரபலமான சர்க்யூ டு சோலைல் 3,500பேரை ஆட்குறைப்பு செய்கிறது

கடனைத் திருப்பிக் கொடுக்க இயலாதிருத்தலை தவிர்ப்பதற்காக, கனடிய பொழுதுபோக்கு நிறுவனமான சர்க்யூ டு சோலைல் ஒரு ஒப்பந்தத்தை மேற்கொண்ட பின்னர் 3,500பேரை ஆட்குறைப்பு செய்யவுள்ளது.

சுறுசுறுப்பான சாகசங்களுக்கு மிகவும் பிரபலமான இந்த குழு, கொரோனா வைரஸ் தொற்றுநோய் முடக்கநிலையால், நிகழ்ச்சிகளை இரத்துசெய்து அதன் கலைஞர்களை பணிநீக்கம் செய்ய நிர்பந்தித்ததாகக் கூறியது.

சர்க்யூ டு சோலைல் நிறுவனம், 95 சதவீதமான ஊழியர்களை விலக்கி மறுசீரமைக்க முயற்சி செய்யவுள்ளது.

ஏற்கனவே மார்ச் மாதத்தில் லாஸ் வேகாஸில் ஆறு உட்பட அதன் அனைத்து நிகழ்ச்சிகளையும் இடைநிறுத்தி இருந்தது.

இந்நிறுவனத்தின் தலைவர் டேனியல் லாமர் இதுகுறித்து கூறுகையில், ‘கொவிட்-19 காரணமாக எங்கள் நிகழ்ச்சிகள் அனைத்தும் கட்டாயமாக மூடப்பட்டதிலிருந்து பூஜ்ஜிய வருவாயுடன், நிர்வாகம் தீர்க்கமாக செயற்பட வேண்டியிருந்தது’ என கூறினார்.