கனடாவிலும் எதிரொலித்த முள்ளிவாய்க்கால் நினைவு தினம்

கனடாவின் ஒன்டாரியோ மாகாண உறுப்பினர் குரட்டன் சிங் முள்ளிவாய்க்கால் நினைவு தினம் குறித்து கருத்து வெளியிட்டுள்ளார்.

இலங்கையில் நடைபெற்ற இன அழிப்பு தொடர்பாக நேற்று சபை விவாதத்தில் அவர் தனது கருத்துக்களை பதிவு செய்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “தமிழ் இனப்படுகொலையினை புரிந்துகொள்வதற்கு இலங்கை தமிழ் மக்கள் சகித்துக்கொள்ள வேண்டியிருந்த கொடூரமான மனித உரிமை மீறல்கள் பற்றி நாம் முதலில் புரிந்துகொள்ள வேண்டும்.

பல தசாப்த காலங்களாக தமிழ் மக்கள் இலங்கை அரசினால் முன்னெடுக்கப்பட்ட கட்டமைக்கப்பட்ட இன அழிப்பு நடவடிக்கைக்கு இலங்கை தமிழ் மக்கள் இலக்கு வைக்கப்பட்டிருந்தனர்.

1983 கருப்பு ஜூலை பல்லாயிரக்கணக்கான இலங்கை தமிழர்களின் உயிர்களை பறித்திருந்தது. செஞ்சோலை போன்ற சிறுவர் இல்லங்களின்  நடத்தப்பட்ட குண்டு தாக்குதல்களில் பல மாணவர்களும் ஊழியர்களும் கொல்லப்பட்டிருந்தனர்.

இலங்கை ராணுவத்தினரால் 19வயதான கிருஷாந்தி எனும் பாடசாலை மாணவி கடத்தப்பட்டு கூட்டு பாலியல் வன்புணர்ச்சி செய்யப்பட்டிருந்ததுடன் அவரை பார்ப்பதற்காக வெளியே வந்த அவளின் குடும்பமும் கொலை செய்யப்பட்டது.

கிருஷாந்திக்கு நிகழ்ந்த சம்பவமானது இலங்கை அரசாங்கத்தினால் இல்லாமல் ஆக்கப்பட்ட பல்லாயிரக்கணக்கானவர்களுக்கு நடந்த சம்பவங்களில் ஒன்றாகும். இரவு நேரங்களில் வெள்ளை வேனில் கடத்தப்பட்டவர்கள் மறுபடி கிடைக்கவே இல்லை. தமிழ் மக்கள் ரகசியமாகவே கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டிருந்தனர்.

இவ்வாறான சம்பவங்களினால் செம்மணி போல் மிக பெரிய தொகையில் மனித உடல்கள் இலங்கையின் பல பகுதிகளிலும் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இவ்வாறான எல்லா வன்முறை சம்பவங்களும் 2009 மே 18 அன்று முடிவுக்கு வந்தது. அதனால் தான் நாம் அந்நாளை தமிழ் இன அழிப்பு நினைவு நாளாக அனுஷ்டிக்கிறோம்.” என கூறினார்.