வெள்ளையின மேலாதிக்கத்தில் கனடா செயற்படுகிறது – சீனா குற்றச்சாட்டு

மேற்கத்தேய ஏகபோகம் மற்றும் வெள்ளையின மேலாதிக்கத்துடன் கனடா செயற்படுகின்றதென சீனா குற்றஞ்சாட்டியுள்ளது.

சீனாவில் இரு கனேடிய பிரஜைகள் தடுத்துவைக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களை விடுவிக்குமாறு கனடா இவ்வாறான மனப்பான்மையுடன் வலியுறுத்தல் விடுத்துவருவதாக சீன தூதுவர் ஒருவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

ஆனால், சீனாவின் ஹூவாவி தொலைதொடர்பு நிறுவனத்தின் தலைமைய நிதி நிர்வாகி கைதுசெய்யப்பட்டமை எவ்வித அடிப்படையும் அற்றதென சீனா குறிப்பிட்டுள்ளது.

எனினும், அவரை விடுவிப்பது தொடர்பாக எவ்வித கரிசனையும் கொள்ளாமல் சீனாவில் உள்ளவர்களை மாத்திரம் விடுவிக்குமாறு கோருவதாக சீனா குற்றஞ்சாட்டியுள்ளது.

அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும் விதித்த தடைகளை மீறி ஈரானுக்கு தொலைதொடர்பு கருவிகளை விற்பனை செய்ததாக ஹூவாவி தொலைதொடர்பு நிறுவன தலைமை நிதி அதிகாரி Meng Wanzhou,  கனடாவின் வாங்கூரில் கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில், Meng Wanzhou அமெரிக்காவிற்கு நாடுகடத்தும் அச்சுறுத்தலை எதிர்நோக்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. அவர் மீதான குற்றச்சாட்டுக்கள் நிரூபணமாகும் பட்சத்தில் ஒவ்வொரு குற்றத்திற்கும் சுமார் 30 வருடங்களுக்கு மேலாக தண்டனை வழங்கப்படுமெனவுத் தெரிவிக்கப்பட்டது.

இவரது கைது சம்பவத்தை தொடர்ந்து இரண்டு கனடியர்கள் சீனாவில் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.