புனித மருந்தென்ற பெயரில் 50000 பேருக்கு பினோலை வாயில் ஊற்றிய பாதிரியார் கைது

உகாண்டாவில் புனித மருந்து என்ற பெயரில் பினோலை (Pinol) பக்தர்களுக்கு குடிக்க கொடுத்த அமெரிக்க பாதிரியாரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

அமெரிக்காவின் நியூஜெர்சியை சேர்ந்த பெந்தேகொஸ்தே பாதிரியாரான ரொபர்ட் போல்ட்வின் என்பவர் உகாண்டாவில் மத பரப்புரையாளராகவும், பாதிரியாராகவும் பல வருடங்களாக பணிபுரிகிறார்.

இவர் புற்றுநோய் மற்றும் எய்ட்ஸ் போன்ற கொடிய வியாதிகளை குணப்படுத்தும் அற்புத மருந்து எனக் கூறி அவரவர் வயதுக்கேற்ப வகைவகையான இரசாயனப் பொருட்களை எடுத்து அவர்களுக்கு அருந்தக் கொடுத்துள்ளார்.

இதனால் சுமார் 50,000 பேர் வரை பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் உபயோகித்த இரசாயனப் பொருட்கள் புடைவைகளுக்காக பயன்படுத்தப்படும் இரசாயனங்கள் மற்றும் அழுக்குகளை அகற்ற பயன்படும் பினோல் வகை திரவங்கள் எனக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த வகையான இரசாயனங்களை வைத்து நோயை சரிசெய்ய முடியும் என்று உலகமெங்கும் பரப்புரை செய்து வரும் எம் எம் எஸ் (MMS – Miracle Mineral Solution) என்ற அமைப்பை சேர்ந்தவர்தான் இந்த போல்ட்வின் என கண்டுபிடித்துள்ளனர். இந்த அமைப்பு கனடா, அயர்லாந்து போன்ற நாடுகளில் தடைசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.