குழம்பிப் போயிருக்கும் கொழும்பு : தமிழ்த் தரப்பு என்ன செய்யலாம்?

குழம்பிப் போயிருக்கும் கொழும்பு :
தமிழ்த் தரப்பு என்ன செய்யலாம்?
    எந்த ஒரு நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி முறைமை அபிவிருத்திக்கு அவசியம் என்று வாதிடப்பட்டதோ எந்த ஒரு நிறைவேற்று அதிகாரத்தின் கீழ்தான் யுத்தத்தை வெல்லக்கூடியதாக இருந்தது என்று எடுத்துக் காட்டப்பட்டதோ அதே நிறைவேற்று அதிகாரம் இப்பொழுது இலங்கைத்தீவை அம்மணமாக்கி நிறுத்தியிருக்கிறது. நிறைவேற்று அதிகாரத்திற்கும் நாடாளுமன்றத்திற்கும் இடையிலான மோதலானது நாட்டை அரசாங்கமற்ற ஒரு நிலைக்குத் தள்ளியிருக்கிறது. சட்டவாக்கத்துறை அதாவது நாடாளுமன்றமே உயர் மன்றமாகும். நீதிபரிபாலனம் அதற்குக் கீழ்ப்பட்டதே என்று முன்பு வாதிடப்பட்டது. ஆனால் இப்பொழுது நீதிபரிபாலனக் கட்டமைப்பிடமே தீர்வை எதிர்பார்க்கும் ஒரு நிலை தோன்றியிருக்கிறது. தீர்ப்பு எப்படியும் அமையலாம். அதை நிறைவேற்று அதிகாரம் எப்படி எதிர்கொள்ளப் போகிறது என்பதே இங்குள்ள பிரச்சினையாகும். அதாவது நாட்டில் நடப்பவற்றைத் தொகுத்துப் பார்த்தால் எல்லாப் பிரச்சினைகளுக்கும் காரணம் நிறைவேற்று அதிகாரமா? என்று கேட்கத் தோன்றும்.
கொழும்பில் உள்ள லிபரல் ஜனநாயகவாதிகளும் பெரும்பாலான புத்திஜீவிகளும், யு.என்.பியினரும் அவ்வாறுதான் கூறி வருகிறார்கள். இலங்கைத்தீவின் ஜனநாயகப் பாரம்பரியத்தை நிறைவேற்று அதிகாரமே நாசமாக்கியது என்றும் அவர்கள் கூறுகிறார்கள். அப்படியென்றால் நிறைவேற்று அதிகாரத்தின் கீழ் முன்னெடுக்கப்பட்ட யுத்தத்தில் மேற்கொள்ளப்பட்ட இனப்படுகொலைக்கு அவர்களுடைய பதில் என்ன? யுத்தத்தை வெல்வதற்கு ஒரு காரணமாக இருந்த நிறைவேற்று அதிகாரமே இப்பொழுது ஜனநாயகத்தை பாழாக்கியதற்கும் காரணம் என்று கூறப்படுகிறது ஆயின் யுத்தத்தில் பெறப்பட்ட வெற்றியென்பது ஜனநாயகத்தை மதித்து பெறப்படவில்லையென்பதனை அவர்கள் ஏற்றுக் கொள்கிறார்களா? மெய்யாகவே இங்கு நிறைவேற்று அதிகாரம் மட்டும்தான் பிரச்சினையா?
    நிச்சயமாக இல்லை. நாட்டில் இப்பொழுது ஏற்பட்டிருக்கும் குழப்பங்களை பின்வருமாறு விளங்கிக்கொள்ளலாம்.
தமிழ் மக்களுக்கு எதிராக யாப்பை மீறி வந்த ஒரு பாரம்பரியம் இப்பொழுது அதன் உச்சக்கட்ட விகாரத்தை அடைந்திருக்கிறது. அதாவது இன ஒடுக்கு முறையே யாப்பு மீறல் பாரம்பரியத்தின் தொடக்கமாகும். யாப்பு தமிழர்களை ஒடுக்கும் ஒரு கருவியாகவே பயன்படுத்தப்பட்டது. எப்பொழுது யாப்பு இன ஒடுக்கு முறையின் கருவியாக மாறியதோ அப்பொழுதே இலங்கைத்தீவின் யாப்புப் பாரம்பரியம் அதன் புனிதத்தை இழந்து விட்டது. அப்பொழுதே இலங்கைத்தீவின் ஜனநாயகப் பாரம்பரியமும் சிதையத் தொடங்கிவிட்டது. எனவே இலங்கைத்தீவின் ஜனநாயகம் சீரழிக்கப்பட்டது மகிந்தவால் அல்லது சிறிசேனவால் என்று கூறப்படுவது பிரச்சினையை மேலோட்டமாக விளங்கிக் கொள்ளும் ஓர் ஆய்வு முறைதான். மாறாக இன ஒடுக்கு முறையிலிருந்தே இலங்கைத்தீவின் ஜனநாயகம் சீரழியத் தொடங்கிவிட்டது என்பதுதான் சரி.
ஜே.வி-.பியின் முதலாவது கிளர்ச்சியை ஒடுக்கியபின் பெற்ற படிப்பினைகளின்  அடிப்படையிலும் தமிழ் மக்களின் ஆயுதப் பிரச்சினையை ஒடுக்குவதற்குரிய தயாரிப்பாகவும் ஜயவர்த்தனா நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி முறைiமையை உருவாக்கினார். தனக்கு முன்பிருந்த எந்தவொரு தலைவரும் பெற்றிராத ஐந்தில் நாலு பெரும்பான்மையை அவர் பெற்றார். ஆனால் அந்த மக்கள் ஆணையை மக்கள் ஆட்சிக்கு எதிராகத் திருப்பினார். ஒரு மன்னராட்சியை சிருஷ்டித்தார். அம்மன்னராட்சியின் கீழ் தனது சொந்த நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் திகதியிடப்படாத ராஜினாமாக் கடிதங்களை வாங்கி வைத்திருந்தார். தமிழ் மக்களை ஒடுக்குவதற்கான யாப்புத் திருத்தங்களையும் முன்னெடுத்தார். ஒடுக்கு முறையின் விளைவாக இந்தியத் தலையீடு ஏற்பட்டது. அதன் விளைவாக ஜே.வி.பியின் இரண்டாவது கிளர்ச்சி எழுந்தது. அதாவது நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி முறைமையின் கீழ் பொருளாதாரப் பிரச்சினைகள் தீர்க்கப்பட்டிருந்திருந்தால் ஜே.வி.பியின் இரண்டாவது கிளர்ச்சி எப்படி ஏற்பட்டது? எனவே நிறைவேற்று அதிகாரமெனப்படுவது பொருளாதார வளர்ச்சிக்கும் உதவவில்லை.
அதே சமயம் ஜயவர்த்தனாவிற்குப் பின்வந்த பிறேமதாசா அதே நிறைவேற்று அதிகாரங்களைப் பிரயோகித்து ஜே.வி.பியை ஒடுக்கினார். நாட்டின் ஆறுகளில் பிணங்களை மிதக்கச் செய்தார். தெருக்களில் ரயர்களைப் போட்டு பிணங்களை எரிக்கும் ஓர் அரசியலை முன்னெடுத்தார். அவருக்குப் பின் வந்த எல்லா ஜனாதிபதிகளும் நிறைவேற்று அதிகாரத்தைப் பயன்படுத்தி தமிழ் மக்களை ஒடுக்க முற்பட்டார்கள். முடிவில் மகிந்த ராஜபக்ஷ நந்திக் கடற்கரையில் அறுபதினாயிரத்திற்கும் குறைவான தமிழ் மக்களைக் கொன்று ஆயுத மோதல்களை முடிவிற்குக் கொண்டு வந்தார்.
இப்படிப் பார்த்தால் நிறைவேற்று அதிகாரத்தின் கீழ் சிங்கள மக்களும் இரத்தம் சிந்தியிருக்கிறார்கள். தமிழ் – முஸ்லிம் மக்களும் ரத்தம் சிந்தியிருக்கிறார்கள். இலங்கைத்தீவின் மூன்று இனங்களும் இரத்தம் சிந்தக் காரணமாகவிருந்த நிறைவேற்று அதிகாரம் இப்பொழுது இலங்கைத்தீவை ஒரு தோல்வியுற்ற நாடாக மாற்றியிருக்கிறது. எனவே நாட்டை இப்போது ஏற்பட்டிருக்கும் குழுப்பங்களிலிருந்து மீட்பதென்றால் நிறைவேற்று அதிகாரத்தை அகற்றினால் மட்டும் போதாது. மாறாக யாப்பை ஒடுக்கு முறையின் கருவியாக மாற்றிய இனஒடுக்கு முறைக்கும் தீர்வு காணப்பட வேண்டும். தமிழ் மக்களுக்கு நீதி கிடைத்தால் மட்டும்தான் இலங்கைத்தீவின் யாப்பும், ஜனநாயகமும் மகிமை பெறும். எனவே இனப்பிரச்சினைக்கான தீர்வை எப்படிக் கண்டுபிடிப்பது என்பதைக் குறித்தே தமிழ்த் தலைவர்களும் முஸ்லிம் தலைவர்களும் சிங்கள மக்கள் மத்தியிலுள்ள நீதியான தரப்புக்களும் சிந்திக்க வேண்டும். ரணிலைக் காப்பாற்றினால் அது நடக்குமா?
இல்லை. இனவாதத்தை மகிந்த என்ற ஓர் அளவுகோளால் மட்டும் அளக்கக்கூடாது. மகிந்த வெளிப்படையான இனவாதி. ரணில் மனித முகமூடியோடு வரும் இனவாதி. அவர் நீருக்குள் மிதக்கும் பனிக்கட்டியைப் போன்றவர். நீர் வேறு பனிக்கட்டி வேறு அல்ல. கடந்த நொவெம்பர் மாதம் மூன்றாம் திகதி கொழும்பு லிபேர்ட்டி சுற்று வடத்தில் நடந்த ஒரு எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் பங்குபற்றிய ஒரு சிங்களப்பெண் ஒரு செய்தியாளரிடம் பின்வருமாறு கூறினார்.’மகிந்த ஒரு புற்று நோய் ஆனால் ரணில் ஒரு மருந்து அல்ல’ தமிழ் மக்களும் இப்படித்தான் கூறுவார்கள்.எனவே ரணிலைக் காப்பாற்றுவதால் தீர்வு கிடைத்து விடாது. மாறாக சிங்கள அரசு யந்திரத்தின் மீது வெளி நிர்ப்பந்தத்தைப் பிரயோகிப்பதன் மூலமே ஒரு தீர்வைக் கண்டு பிடிக்கலாம். இலங்கைத்தீவில் இதுவரை எட்டப்பட்ட ஒப்பீட்டளவில் நீண்டகாலம் நீடித்த இரண்டு தீவுகளும் மூன்றாவது தரப்பின் அழுத்தம், பிரசன்னம், கண்காணிப்பு போன்றவைகளின் கீழ் செய்யப்பட்டவைதான்.
முதலாவது இந்திய – இலங்கை உடன்படிக்கை இதற்கு இந்தியா பொறுப்பேற்றது. இந்தியப் படைகள் இலங்கைத்தீவில் பிரசன்னமாகியிருந்தன. இரண்டாவது ரணில் – பிரபா உடன்படிக்கை. இதற்கு நோர்வே அனுசரணை வழங்கியது. மேற்கு நாடுகள் இணை அனுசரணை வழங்கின. ஸ்கண்டிநேவிய யுத்தநிறுத்தக் கண்காணிப்பாளர்கள் நாட்டில் பிரசன்னமாகியிருந்தார்கள்.
எனவே மேற்கண்ட இரண்டு தீர்வு முயற்சிகளின் போதும் மூன்றாந் தரப்பொன்றின் பிரசன்னம் காணப்பட்டது. அப்படி மூன்றாந் தரப்பொன்றின் பிரசன்னத்தின் கீழ்த்தான் இனிமேலும் தீர்வு முயற்சிகள் சரிப்பட்டு வரும். அப்படி மூன்றாந் தரப்பொன்றின் மேற்பார்வையில்லாத ஒரு நிலமையின் கீழ் இரண்டு இனவாதக் கட்சிகளும் சேர்ந்துருவாக்கிய நிச்சயமற்ற மூன்றில் இரண்டு பெரும்பான்மையின் மீது நம்பிகைகளை முதலீடு வைத்ததன் விளைவாக இப்பொழுது தீர்வு முயற்சிகள் தடைபட்டு விட்டன. எனினும் இந்த இடத்தில் யு.என்.பி ஆதரவாளர்கள் ஒரு விடயத்தைச் சுட்டிக்காட்டுவார்கள். மேற்காட்டிய இரண்டு தீர்வு முயற்சிகளிலும் ஈடுபட்டது யு.என்.பிதான். எஸ்.எல்.எவ்.பி அல்லவென்று. அது உண்மைதான் அதே சமயம் இவ்விரண்டு சமாதான முன்னெடுப்புக்களின் போதும் மூன்றாம் தரப்பின் பிரசன்னம் இருந்தது என்பதும் அதே அளவிற்கு உண்மைதான். தவிர, பண்டாரநாயக்காவின் தீர்வுத் திட்டத்தையும் சந்திரிகாவின் தீர்வுத் திட்டத்தையும் குழப்பியது யு.என்.பி.தான் என்பதும் ஒரு வரலாற்று  உண்மைதான்.
எனவே தமிழ்த் தலைமைகள் ரணிலைக் காப்பாற்றுவது என்பதற்குமப்பால் இப்போதிருக்கும் நிலைமைகளைப் பயன்படுத்தி இலங்கைத்தீவின் சீரழிந்த ஜனநாயகக் கட்டமைப்பை அம்பலப்படுத்த முயற்சிக்க வேண்டும். யாப்பை அளாப்பும் தலைவர்களிடமிருந்து எப்படித் தீர்வைப் பெறலாமென்று வெளியுலகத்திடம் கேட்க வேண்டும். கடந்த மூன்றரை ஆண்டுகளாக இனவாதத்தை ஏன் தோற்கடிக்க முடியவில்லை அல்லது ஏன் அதன் பலத்தைக் குறைக்க முடியவில்லை. என்ற கேள்வியை ஐ.நாவிடமும், உலக சமூகத்திடமும் கேட்க வேண்டும். ஓர் இனப்படுகொலைக்குப் பின்னரும் ஆட்சி மாற்றத்தின் பின்னரும் இலங்கைத்தீவின் அரசுக்கட்டமைப்பில் நம்பிக்கையூட்டும் மாற்றங்கள் நடக்கவில்லை என்பதைத்தான் நாட்டில் நடப்பவை நிரூபித்துள்ளன. எனவே மூன்றாவது தரப்பொன்றின் கண்காணிப்பும் மேற்பார்வையும் இல்லாமல் ஒரு  தீர்வைக் கண்டுபிடிக்க முடியாது. அவ்வாறான மூன்றாவது தரப்பொன்றின் தலையீட்டிற்கான உத்தரவாதத்தையே தமிழ்த்தரப்பு முதலில் பெறவேண்டும்.
இது விடயத்தில் ரணில் விக்கிரமசிங்கிவிடமிருந்து உத்தரவாதம் எதையும் பெற முடியாது. ஏனெனில் அவர் ஒரு நொண்டிக்குதிரை. அவர் தானாக ஓடமாட்டார். தமிழ், முஸ்லிம், மலையக வாக்குகள் இல்லையென்றால் அவர் வெல்லவும் மாட்டார். சாதாரண சிங்கள மக்கள் அவரை சிங்களத் தன்மை பொருந்திய ஒரு மிடுக்கான தலைவராகப் பார்க்கவில்லை. மேற்கத்தைய தன்மை மிக்க மேற்கின் சேவகனாகவே பார்க்கிறார்கள். அதுதான் உண்மையும். ரணில் என்ற நொண்டிக்குதிரையை மேற்கு நாடுகளே ஓட வைக்கின்றன. அந்த நொண்டிக் குதிரையோடு எந்தவொரு உடன்படிக்கையையும் செய்ய முடியாது. பதிலாக அந்த நொண்டிக் குதிரையின் கடிவாளத்தை கையில் வைத்திருக்கும் மேற்கு நாடுகளுடன்தான் தமிழ்த்தரப்பு ஏதும் ஓர் உடன்படிக்கையைச் செய்ய வேண்டும். இல்லையென்றால் கடந்த மூன்றரை ஆண்டுகளின் பின் பெற்ற அதே தோல்விதான் திரும்பவும் கிடைக்கும்.
நாட்டை தேர்தல்களை நோக்கி நிர்ப்பந்திப்பதே மைத்திரி + மகிந்த அணியின் நிகழ்ச்சி நிரலாகும். இப்படி தேர்தல்கள் நடந்தால் அதில் ஜனாதிபதித் தேர்தலை மகிந்த விரும்புவார். நாடாளுமன்றத் தேர்தலை அவர் குறைந்தளவே விரும்புவார். ஏனெனில் ஜனாதிபதித் தேர்தல் எனப்படுவது நபர்களை மையப்படுத்துவது. அதில் யுத்தவெற்றி நாயகர் ஒருவர் போட்டியிட்டால் அவருக்கு முன் ரணில் நின்று பிடிக்க மாட்டார். பதிலாக நாடாளுமன்றத் தேர்தல் என்று வரும் பொழுது தமிழ் வாக்குகளும், முஸ்லிம் வாக்குகளும் ரணிலைப் பலப்படுத்தக்கூடும். எனவே ரணில் உடனடிக்கு ஒரு தேர்தலை விரும்பாவிட்டாலும் கூட ஜனாதிபதித் தேர்தல் அல்லாத ஏனைய தேர்தல்கள் பரவாயில்லை என்று கருதக்கூடும். சில சமயம் நாடாளுமன்றத் தேர்தல் ஒன்று நடந்தால் அல்லது இப்பொழுது பரவலாக ஊகிக்கப்படுவது போல சில வேளை மைத்திரி ஒரு சர்வசன வாக்கெடுப்பை நடத்தினால் அதில் ரணில் வெல்கிறார் என்று வைத்துக் கொள்வோம். அதன்பின் என்ன நடக்கும்?
அப்பொழுதும் அவரால் ஒரு தீர்வைக் கண்டு பிடிப்பது சவால்கள் மிகுந்ததாகவே இருக்கும். ஏனெனில் அதற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை வேண்டும். அதைவிட முக்கியமாக இன்னும் ஓராண்டு காலத்திற்கு மைத்திரியே ஜனாதிபதியாக இருப்பார். அவர் ஒரு தீர்வை நோக்கி ரணிலைப் போக விடமாட்டார். எனவே ரணில் சில சமயம் வென்றாலும் ஒரு தீர்வை நோக்கிப் போவது சவால்கள் மிகுந்ததாகவே இருக்கும். யாப்பை மாற்றாத வரை ஜனாதிபதித் தேர்தலில் ராஜபக்ஷக்களுக்கு வெற்றி வாய்ப்புக்கள் அதிகமாக இருக்கும். யாராவது ஒரு ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருக்கும் வரை ஒரு தீர்வு கிடைக்கப்போவதில்லை.
எனவே நிறைவேற்று அதிகாரத்திற்கும் நாடாளுமன்றத்திற்கும் இடையிலான மோதல் அதோடு நிறைவேற்று அதிகாரமானது நீதி பரிபாலனக் கட்டமைப்பை எப்படிக் கையாளக்கூடும் என்ற கேள்விக்கான விடைகள் போன்றவற்றின் பின்னணியில் சிந்திக்கும் பொழுது ஒரு புதிய யாப்பைக் கொண்டு வந்து நிறைவேற்று அதிகாரத்தை நீக்காத வரையிலும் இனப்பிரச்சினைக்கான தீர்வைக் கண்டுபிடிப்பது கடினமானதாகவே இருக்கும். ஆனால் யார் வென்றாலும், தோற்றாலும் தமிழ் மக்களின் பேரம் உயர்வாகவே இருக்கும். தமிழ் மக்களை வைத்துத்தான் தென்னிலங்கைத் தலைமைகளைக் கையாள வேண்டிய தேவை இந்தியாவிற்கும் இருக்கும். மேற்கிற்கும் இருக்கும். தமக்கிருக்கும் பேரத்தைப் பயன்படுத்தி முதலில் வெளித்தரப்புக்களோடு உடன்படிக்கை செய்வதைக் குறித்து தமிழ்த்தரப்புக்கள் சிந்திக்க வேண்டும். கடந்த வாரம் ஐ.பி.சி.தொலைக்காட்சியில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் ஒரு கூட்டமைப்பு உறுப்பினர் சொன்னார்… ‘ஏற்கனவே எழுதப்படட உடன்படிக்கைகள் தோல்வியுற்றபடியால்தான் இம்முறை எந்த ஒரு உடன்படிக்கையையும் எழுதவில்லை’ என்று. எழுதப்பட்ட உடன்படிக்கைகள் ஏன்  முறிக்கப்பட்டன என்று ஆராயவேண்டும். மூன்றாம் தரப்பொன்றின் மேற்பார்வை இலையென்பதே காரணம். அதற்குத் தீர்வு உடன்படிக்கையை எழுதாமல் விடுவதல்ல. மாறாக அதில் மூன்றாவது தரப்பொன்றை பொறுப்புக்கூறவைப்பதே. ஈழத் தமிழர்களைப் பொறுத்தவரை ராஜதந்திரப் போர் என்பது இந்த அடிப்படையில் தான் திட்டமிடப்பட வேண்டும

இகுருவிக்காக நிலாந்தன்   Dec 15 2018