நீதிக்கான போராட்டத்திற்கு வரலாறு காட்டும் வழி. – நிர்மானுசன் பாலசுந்தரம்

அறிமுகம்

தமிழர் தாயகத்திலிருந்த பாதுகாப்பு வலயங்கள், பாடசாலைகள், மருத்துவமனைகள், வழிபாட்டுத் தலங்கள், தமிழர்கள் அடைக்கலம் தேடியிருந்த இடங்கள் போன்றன சிறீலங்கா ஆயுதப் படைகளின் மிலேச்தனமான தாக்குதலுக்கு உள்ளாகின. வெள்ளைக்கொடியோடு வந்தவர்கள் சுட்டுக்கொல்லப்பட்டார்கள். கைதானவர்கள் கையளிக்கப்பட்டவர்கள் என பல ஆயிரக்கணக்கான தமிழர்கள் காணமற்போகச் செய்யப்பட்டவர்கள். மனிதாபிமானப் பணிகளில் ஈடுபட்ட சர்வதேச நிறுவனங்கள் வெளியேற நிர்ப்பந்திக்கப்பட்டன. சுதந்திரமான சர்வதேச ஊடகங்கள் போர் இடம்பெற்ற பகுதிகளுக்கு செல்வதற்கு சிறீலங்கா அரசு தடைவிதித்தது.

மேற்கூறிய நடவடிக்கைகளால் மிகப் பிரதானமாகவும் பெரும்பான்மையாகவும் பாதிக்கப்பட்ட இனம் தமிழினம். ஆதலாலேயே, இந்த நூற்றாண்டின் முதலாவது பாரிய இனஅழிப்பை சந்தித்த இனமாக தமிழினம் காணப்படுகிறது. இனஅழிப்பு நடந்து பத்து ஆண்டுகள் ஆகிறது. பத்து ஆண்டுகளுக்கு முன்னர் இனஅழிப்பை தடுத்த நிறுத்த முடியாமற் போனது. ஆனால், இனஅழிப்புக்குள்ளானவர்களுக்கான நீதிக்கான போராட்டம் தோற்றம் பெற்று தொடர்கிறது. பத்து ஆண்டுகள் ஆகின்ற நிலையில் நீதிக்கான போராட்டத்தை வலுப்படுத்த வேண்டிய கட்டாய சூழல் உருவாகியுள்ளது.

பல்வேறு வழிகளில் நீதிக்கான போராட்டத்தை வலுப்படுத்த முடியும். எதிர்வரும் காலங்களில் வெவ்வேறு அணுகுமுறைகள், உபாயங்கள் தொடர்பாக ஆராயலாம். அந்தப் பெரும்பயணத்தின் முதல்படியாக, பொருத்தமான சர்வதேச ரீதியான கடந்த கால வரலாறுகள் சிலவற்றை இந்த கட்டுரையில் கவனத்திற்கொள்வோம். ஏனெனில் , நீதிக்காக போராடுவதற்கு முன்னர், போராட வேண்டும் என்ற மனநிலையும், அத்தகைய மனநிலையை எவ்வாறு உரமூட்டி நீண்ட காலத்திற்கு நிலைக்கசெய்தல் என்பதுவும் அவசியம். அதனடிப்படையில், முள்ளிவாய்க்கால் இனஅழிப்பு இடம்பெற்ற பிற்பாடு வெளிவந்த இந்த கட்டுரையாளரின் முக்கியமான பதிவுகள் சிலவற்றின் பகுதிகளும் காலத்தின் தேவை கருதி இந்த கட்டுரையில் உள்வாங்கப்பட்டுள்ளது.

சீனா: படுகொலைகளுக்கு பின்னர் விடுதலை, உலகில் முதல்நிலை

சீனாவின் அன்றைய தலைநகரான நன்ஜிங்கை ஜப்பானிய படைகள் 13 டிசம்பர் 1937ல் கைப்பற்றுகின்றன. அந்த ஆக்கிரமிப்போடு அரங்கேறியது படுகொலை வேட்டை. ஆயுதம் தரிக்காத சீனப் படைகள் பொதுமக்கள் என மூன்று இலட்சத்திற்கு அதிகமான சீனர்கள் ஜப்பானிய ஆக்கிரமிப்புப் படைகளால் படுகொலை செய்யப்பட்டனர். சுமார் 20 ஆயிரத்திற்கு மேற்பட்ட பெண்கள் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டனர்.

இன்றைய உலக வல்லரசான சீன 82 ஆண்டுகளுக்கு முன் அந்த பேரிழப்பையும் பெரும் வலியையும் சந்தித்து, அந்தரித்து ஆதரவற்று செய்வதறியாது நின்றது. அது வரலாறு.

மீள்வோம் என்ற நம்பிக்கை. மீள வேண்டும் என்பதற்கான போராட்டம். எப்படி மீளலாம் என்பதற்கான வேலைத்திட்டம். எந்த இலக்கை எப்படி அடைவது என்ற கொள்கை வகுப்பு. எந்த உபாயத்தை எப்படி நகர்த்துவதென்ற நிகழ்ச்சி நிரல். பேரிழப்பை கண்டும் சோர்ந்து போகாத மனம். படுதோல்வியடைந்த போதும் சரணகதி அரசியல் செய்யக்கூடாதென்ற மனப்பாங்கு. கொள்கையில் உறுதி. சீனா மீண்டது. ஏழு தசாப்தங்கள் கடந்த நிலையில் சீனா இன்று உலக வல்லரசு. எந்த சாவலையும் எதிர்கொள்ளும் வல்லமை கொண்ட நாடாக சீனா இன்று நிமிர்ந்துள்ளது.

சீனாவுக்கும் ஜப்பானுக்கும் இடையில் நிலவிய பகமையுணர்வு தணிந்து 1972ஆம் ஆண்டுடன் சீரான உறவுகள் உருவானது. ஆயினும், டிசம்பர் 13ஐ, தேசிய நினைவுகூரல் நாள் என சீனாவின் உயர்மட்ட சட்டசபை 2014 பெப்ரவரி பிரகடனப்படுத்தியது. அத்துடன், இந்த படுகொலை மற்றும் அதற்குப் பின்னரான சீனாவின் எழுச்சி தொடர்பாக இளைய சந்ததிக்கு எடுத்து செல்வதற்கும் சீனா முக்கியத்துவம் கொடுத்துள்ளது.

நினைவுகூரல் என்பது நல்லிணக்கத்தின் ஒரு அங்கம். வரலாற்றினை அடுத்த சந்ததிக்கும் எடுத்து செல்வது அவசியம். போராடுபவன் வெல்வான் என்பதை ஈழத்தமிழர்களுக்கு சொல்லும் சீனாவின் மீண்டெழுந்த வரலாறு, நல்லிணக்கத்தின் பண்புகளையும் சுட்டிக்காட்டுகிறது.

சுதந்திரமான கூட்டு நினைவுகூரல் மறுக்கப்படுகின்ற சூழலிலே நல்லிணக்கம் என்பது சாத்தியப்படாது. அதேவேளை, உத்தியோகபூர்வமான கூட்டு நினைவுகூரலை மறுப்பவர்கள் நல்லிணக்கம் தொடர்பாகப் பேசுவது வெளியுலகத்தை ஏமாற்றுவதற்கே. இதயசுத்தியான நல்லிணகத்தில் அக்கறை கொண்டவர்கள் கூட்டு நினைவுகூரலுக்கு துணைநிற்பார்கள்.

தாம் அல்லது தமது படைகள் மேற்கொண்ட இனஅழிப்பை, போர்க்குற்றங்களை ஏற்காதவர்களால் இதயசுத்தியான நல்லிணக்க செயற்பாடுகளை முன்னகர்த்த முடியாது என்பதையும் சீனா வரலாறு வெளிப்படுத்துகிறது.

குர்திஸ்தான்: உலகே கைவிட்டாலும் உறுதி தளரவில்லை

அடையாளத்தை விரும்பி, தனித்துவத்தை வேண்டிநின்றதால் இனஅழிப்பை சந்தித்த மற்றுமொரு இனம் குர்திஸ். துருக்கி, ஈரான், ஈராக், மற்றும் சிரியா ஆகிய நாடுகளில் சுமார் 25-35 மில்லியன் வரையான குர்திஸ் இனத்தவர்கள் வாழ்கிறார்கள். நான்கு நாடுகளில் பரந்து வாழ்ந்தாலும், இனம், மொழி மற்றும் பண்பாட்டால் குர்திஸ் இனத்தவர் ஒன்றுபட்டுள்ளார்கள். மத்திய கிழக்கில் நான்காவது பெரிய இனக்குழுமமாக திகழும் இவர்களுக்கு சர்வதேச ரீதியாக அங்கீகரிக்கப்பட்ட சுதந்திர தேசமொன்று இன்றுவரை இல்லை. ஆனால், பன்னெடுங்காலங்களுக்கு முன்னர் அதற்காக கருத்தரித்த கனவு இன்றும் உயிர்ப்போடு இருக்கிறது. தம்மைத் தாமே ஆள்வதற்கான சுதந்திர வேட்கை தொடர்கிறது.

சுதந்திரத்திற்கான குர்திஸ் இனத்தவர்களின் போராட்டம் சுமார் 100 ஆண்டுகால வரலாற்றைக் கொண்டது. முதலாவது உலகப் போரின் முடிவு மற்றும் ஒட்டொமன் இராச்சியத்தின் தோல்விக்குப் பின்னர், குர்திஸ் சுயாட்சிக்கான ஏற்பாடு ஒன்றை 1920 ஒகஸ்ட் செவ்றெஸ் உடன்படிக்கையில் (Treaty of Sevres) மேல்குலக கூட்டணி நாடுகள் இணைத்தன. ஆயினும் 1923 யூலை லொஸான உடன்படிக்கையில் (Treaty of Lausanne),துருக்கியின் தென் கிழக்கில் அமைந்திருந்த குர்திஸ்தானுக்கான சுயாட்சி உள்வாங்கப்படவில்லை. குர்திஸ் மக்களின் அபிலாசைகளுக்கு எதிராக இந்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டது. குர்திஸ்தானின் தென்பகுதி 1925ல் ஈராக்குடன் உத்தியோகபூர்வமாக இணைக்கப்பட்டது. இதனையே வடக்கு ஈராக் என்றும் , ஈராக்கி குர்திஸ்தான் என்றும் அழைக்கிறார்கள். ஆயினும், குர்திஸ் இனத்தவரோ, தம்மை ஈராக்குடன் தொடர்புபடுத்தி அடையாளப்படுத்தாமல் குர்திஸ்தான் அடையாளத்துக்கே முன்னுரிமை அளித்து வருகிறார்கள்.

அதேவேளை, ஈராக்கும் துருக்கியும் குர்திஸ்தான் அடையாளத்தை சிதைக்கும் முயற்சியில் தொடர்ச்சியாக ஈடுபட்டுவகிறார்கள். அடையாள அழிப்புக்கும் பண்பாட்டு சிதைப்புக்கும் மத்தியில் குர்திஸ்தானின் இருப்பையும் எதிர்காலத்தையும் நிர்ணயிப்பதற்கான போராட்டம் தொடர்கிறது. சுதந்திரத்துக்கான இந்தப் போராட்டத்தில் குர்திஸ் இனத்தவர்கள் இனஅழிப்பு உள்ளிட்ட பேரழிவுகளை சந்தித்தார்கள்.

ஒரு புறம், பல்லாயிரக்கணக்கான படுகொலைகள். பல ஆயிரக்கணக்கானோர் பலவந்தமாக காணமற்போகச் செய்யப்பட்டார்கள். இராசாயனத் தாக்குதல்கள். எதேச்சதிகார கைதுகள், தடுத்து வைப்புகள். பாரிய இடம்பெயர்வுகள். பல இலட்சம் பெறுமதியான உடமைகள் அழிக்கப்பட்டது. சுமார் 2000ற்கு மேற்பட்ட கிராமங்கள் எரிக்கப்பட்டது. குர்திஸ்தானின் பொருளாதாரமும் உட்கட்டமைப்பு வசதிகளும் அழிக்கப்பட்டது.  மறுபுறம், துரோகங்கள், குர்திஸ்தான் இயக்கங்களுக்கிடையிலான மோதல்கள். இத்தனை அழிவுகள், இழப்புகள், அவலங்கள், சவால்களுக்கு மத்தியிலும் குர்திஸ்தானின் சுதந்திரத்துக்கான போராட்டம் உறுதியோடு தொடர்கிறது.

அடக்குமுறை, பாரபட்சம், ஒருமைப்படுத்தல் – அரேபியமயப்படுத்தல், நில எல்லைகளை மாற்றியமைத்தல், இனச் சுத்திகரிப்பு மற்றும் இனஅழிப்பு போன்றவற்றை எதிர்கொண்டபடி குர்திஸ்தானின் சுதந்திரத்துக்கான நகர்வுகள் மேற்கொள்ளப்பட்டது. குர்திஸ்தானின்  சுதந்திரத்துக்கான முன்னெடுப்புகள் கொடூரமான முறையில் ஈராக் அரசாங்கங்களால் அடக்கப்பட்ட போதும், குர்திஸ்தானின்  சுதந்திர தாகம் தணியவில்லை. பல பேரிழப்புகளை அவர்கள் சந்தித்தார்கள். ஆனால், ஒவ்வொரு பேரிழப்புகளுக்குப் பின்னரும் அவர்கள் மீண்டெழுந்தார்கள்.

ஆர்மேனியா: 100 ஆண்டுகளுக்கு பின்னரும் நீதிக்காக தொடரும் போராட்டம்

கடந்த ஏப்ரல் 24 ஆர்மேனிய இனஅழிப்பின் 104 ஆவது ஆண்டு நினைவுதினம்.
சுமார்; எட்டரை ஆண்டுகளில் ஒன்றரை மில்லியன் ஆர்மேனிய கிறிஸ்தவர்கள் ஒட்டொமன் பேரரசால் படுகொலை செய்யப்பட்டார்கள்.

50 வருடங்கள் கழித்தே இனஅழிப்பு என்பது ஏற்றுக்கொள்ளப்பட்டது.
104 வருடத்தில் இதுவரை 20 வரையான நாடுகளே இனஅழிப்பென்பதை உத்தியோகபூர்வமான ஏற்று அங்கீகரித்துள்ளன.

படுகொலைகள், பட்டினியால் சாகடித்தல், கட்டாய இடம்பெயர்வு தொடக்கம் ஆர்மேனிய சிறுவர்களை பலவந்தமாக மதம் மாற்றியது வரை வெவ்வேறு வடிவங்களில் இனஅழிப்பை ஒட்டொமன் இராச்சியம் முன்னெடுத்திருந்தது. ஆர்மேனியர்களின் பண்பாடு, மொழி, மதம், அடையாளம் போன்றவற்றை நிர்மூலமாக்குதலே இதன் நோக்கமாகும். ஏனெனில், ஒரு இனத்தை அழிக்க வேண்டுமாயின் தனித்து குறித்த இனத்தை பகுதியாகவோ முழுமையாகவோ அழிப்பதனூடாக அதனை முழுமையாக அழிக்க முடியாது. மாறாக, குறித்த இனத்தின் மொழி, பண்பாடு, சமூககட்டமைப்பு, பொருளாதாரம், அடையாளம் மற்றும் குறித்த இனக்குழுமத்தினதோ மதக்குழுமத்தினதோ சித்தாந்தம் போன்றவற்றை உடனடியாகவோ படிப்படியாகவோ அழிப்பதனூடாக இனஅழிப்பு முழுமைபெறும். அந்த வகையிலேயே ஆர்மேனிய இனஅழிப்பு திட்டமிட்டு முன்னெடுக்கப்பட்டது.

இருப்பினும், இனஅழிப்பிலிருந்து தப்பியவர்களும், அடுத்த சந்ததியினரும் இணைந்து முன்னெடுத்த நீதிக்கான நீண்டகால போராட்டம் ஆர்மேனியர்களுக்கான நீதியை அடைய அடித்தளமிட்டது.

சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதாலோ அல்லது ஐ.நா மனித உரிமைகள் பேரவை தீர்மானம் நிறைவேற்றியதலோ ஆர்மேனிய இனஅழிப்பை மேற்குறித்த நாடுகளோ சபைகளோ ஏற்று அங்கீகரிக்வில்லை. மாறாக, ஆர்மேனிய மக்களின், குறிப்பாக புலம்பெயர்ந்து வாழும் ஆர்மேனிய மக்களின் இடைவிடாத, சோர்ந்து போகாத, பரம்பரை பரம்பரையான, விலைபோகதா போராட்டமே இன்றும் ஆர்மேனிய இனஅழிப்பை சர்வதேச அரங்கில் பேசுபொருளாக வைத்திருப்பதோடு, கனடா, ஜேர்மனி, பிரான்ஸ், இத்தாலி மற்றும் ரசியா உட்பட 20 நாடுகளையும் உலகின் முக்கியமான அமைப்புகளையும் எற்று அங்கீகரிக்க வைத்திருக்கிறது.

நடாத்தப்பட்ட இனஅழிப்பை ஏற்று அங்கீகரித்தல் அல்லது நீதிக்கான தீர்ப்பு வழங்குதல் என்பது சர்வதேச சமூகத்தாலோ அல்லது சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தாலோ விரைவாக ஏற்று அங்கீகரிக்கப்பட்டு நீதி வழங்கப்படுவது உடனடியாக சாத்தியமான விடயமல்ல. மாறாக இது பாதிக்கப்பட்ட மக்களிடம் இருந்து தோற்றம் பெற்று, அவர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைப்புகள், அரசியற் கட்சிகள், ஊடகங்கள், அறிவியலாளர்கள், போன்ற தரப்புகள் ஊடாக விரிவடைந்து பரிணமிக்கின்ற ஒரு விடயம்.

பாதிக்கப்பட்ட மக்கள் தமக்கு நடந்த அநீதியை, இனஅழிப்பை முன்னிறுத்தியதால் சர்வதேச அங்கீகாரம் ஏற்பட்டிருக்கிறதே தவிர, சர்வதேச சமூகம் ஏற்று அங்கீகரித்த பிற்பாடே தமக்கு இனஅழிப்பு இடம்பெற்றிருக்கிறது என மக்கள் கூறியதாக வரலாறில்லை. இதனைத்தான் உலகில் முதன்முதலாக இனஅழிப்பை சந்தித்த ஆர்மேனியர்களின் வரலாறு, இனஅழிப்புக்கு முகம்கொடுத்த, முகம்கொடுத்து வருகிற தரப்புகளுக்கும் நீதிக்காக போராடும் தரப்புகளுக்ளும் எடுத்துச் சொல்கிறது.

போரொன்றின் தோல்வி போராட்டத்தின் தோல்வியாக மாறக்கூடாது. நமக்கான போராட்டத்தை நாமே ஆரம்பிக்க வேண்டும்; தொடரவேண்டும். நேர்த்தியான கொள்கைவகுப்புடனும், சிறந்த திட்டமிடல் முகாமைத்துவத்துடனும் முன்னெடுக்கப்படும் மக்கள் மயப்பட்ட அமைதிவழி போராட்டம், எமக்கான நேச சக்திகளையும், எமக்கு சாதகமான உள்ளக வெளியக சூழல்களை உருவாக்கும். மாறாக, எமக்காக யாரும் போராடுவார்கள், யாராவது எமக்கு நீதியை தருவார்கள் என்ற எதிர்பார்ப்பில் காத்திருக்க முடியாது. நாம் போராடாமல் விடுகின்ற ஒவ்வொரு தருணத்திலும், நாம் சோர்வடைகின்ற ஒவ்வொரு கணப்பொழுதுகளிலும், யாரையும் நம்பி நாம் காத்திருக்கின்ற ஒவ்வொரு சந்தர்ப்பங்களிலும், எமக்கான பிரதிநிதிகள் எனக் கூறிக்கொள்வோர் சோரம்போகிற, சரணகதியடைகிற ஒவ்வொரு சூழலிலும் எமது போராட்டம் நீர்த்துப் போகும். அந்தப் பலவீனமான நிலையென்பது எமது போராட்டத்தின் அடித்தளத்தை மெதுமெதுவாக ஆட்டம் காணச் செய்து, இறுதியில் எமது நீதிக்கான போராட்டத்தை முற்றுமுழுதாக அழித்துவிடும்.

ஆகவே, எமக்கான நீதிக்காக நாமே போராட வேண்டும். எமக்கு நடந்த அநீதியை, இனஅழிப்பை ஓங்கி ஒலித்து, உறுதிபட நாமே சொல்ல வேண்டும். உறுதிகுன்றாத மனோதிடமும் போராட்டத்தின் இடைவிடாத தொடர்ச்சியும் நீதிக்கான எமது போராட்டங்களின் அடிநாதங்களில் முக்கியமான அம்சங்களில் ஒன்று.

 

யாரையும் நம்பி நாம் காத்திருக்கின்ற ஒவ்வொரு சந்தர்ப்பங்களிலும், எமக்கான பிரதிநிதிகள் எனக் கூறிக்கொள்வோர் சோரம்போகிற, சரணகதியடைகிற ஒவ்வொரு சூழலிலும் எமது போராட்டம் நீர்த்துப் போகும். அந்தப் பலவீனமான நிலையென்பது எமது போராட்டத்தின் அடித்தளத்தை மெதுமெதுவாக ஆட்டம் காணச் செய்து, இறுதியில் எமது நீதிக்கான போராட்டத்தை முற்றுமுழுதாக அழித்துவிடும்.