ஓட்டிசம் பிள்ளைகளும் தேவைப்படும் பேரன்பும்

ஓட்டிசம் பிள்ளைகளும் தேவைப்படும் பேரன்பும்

கனடாவில் 66இல் 1 பிள்ளை ஓட்டிசத்தால் பாதிக்கப்படுகின்றனர் என்பது சோகம் தரும் செய்தி. இவ்வாறான நிலையே பல நாடுகளிலும் தென்படுகிறது. ஓட்டிசம் என்றால் பிள்ளைகள் உடலியல் ரீதியாக வளர்ந்தாலும் உளவியல் மனோவியல் ரீதியான வளர்ச்சியில் பின்தங்கி நிற்ப்பதே. இது ஏனைய சாதாரண பிள்ளைகள் போலான அவர்கள் செயற்பாட்டை தடுத்துவிடுவதுடன், அவர்கள் தங்குநிலையை தொடாந்தும் அதிகரித்துவிடும்… இது அவர்களுக்கு மட்டுமல்ல, அவர்கள் சார்ந்த குடும்பத்திற்கும் அனைத்துவழிகளிலும் அதிகரித்த பளுவை சுமத்திவிடும். கனடாவை எடுத்துக் கொண்டால் 2003இல் 294 பேரில் 1 குழந்தை ஓட்டிசத்தால் பாதிப்பு என்ற நிலையில் இருந்து, 2007இல் 150இற்கு 1 குழந்தையாகி, 2012இல் 88இற்கு 1 ஆகி, 2015இல் 66இற்கு 1 குழந்தையாகியுள்ளது. இதற்குக் காரணம் ஓட்டிசத்தை கண்டறிகின்ற முறைமை அதிகரித்துள்ளதும், பலர் துணிவாக வெளியே வருவதும். இதைக்கடந்து உண்மையாகவே ஒரு அதிகரிப்பு, இவை அனைத்தையும் கடந்து இருக்கிறதா? என்பது இன்னும் ஆய்விலேயே உள்ளது.

இதில் ஆண் குழந்தைகளின் பாதிப்பு, பெண் குழந்தைகளை விட நான்கு மடங்கு, அதிகமாக இருப்பதுவும் கண்டறியப்பட்டுள்ளது. ஆண் பிள்ளைகளில் 42இல் 1வருக்கு உள்ள பாதிப்பு, பெண் குழந்தைகளில் 165இற்கு 1ஆகவுள்ளது. ஓட்டிசம் பாதிப்புக்குள்ளானவர்களாக அடையாளம் காணப்பட்டவர்களில் 56 சதவீத்தினரின் பாதிப்பு 6 வயதிற்குள் கண்டறியப்பட்டுள்ளது. 90 சதவீதமானோரின் பாதிப்பு 12 வயதிற்குள் கண்டறியப்பட்டுள்ளது. இவர்கள் சோதனைக்கு உட்படுவதற்கே ஒன்ராரியோவில் 31 வாரக்காத்திருப்பு தற்போது நிலவுகிறது. 2300 பேர் இந்த காத்திருப்புப் பட்டியலில் ஒன்ராரியோவில் மட்டும் உள்ளனர். வளர்ந்துவிட்ட கனடாவிலேயே இந்நிலை என்றால், வளர்முக நாடுகளில் இவ்வாறான குழந்தைகளின் நிலையை ஒருமுறை எண்ணிப் பாருங்கள். இதைக்கடந்து, பின்னர் அவர்களுக்கான விசேட கல்வி, பயிற்சி, வைத்தியம் எனப் பல சவால்களை பெற்றோர் எதிர் கொள்கின்றனர். தற்போது இவ்வாறான உதவிகளைப் பெற்றுக்கொள்வதற்காக மட்டும், 23 ஆயிரம் சிறுவர்கள் காத்திருக்கின்றனர். இவ்வாறானவர்களுக்கான உதவிகள், 18 வயதுவரை வழங்கப்படுகின்றன. 2 வயது முதல் 18 வரை என்றால், 1 லட்சத்து 40 ஆயிரம் டொலர்களும், 7 வயது முதல் என்றால் 55 ஆயிரம் டொலர்களும் என உதவிகள் வழங்கப்படுகின்றன. இவ்வாறானவர்களுக்கான வைத்திய முன்னெடுப்புகள், சிறுவயதிலேயே பெரும் பாலும் முயன்று பார்க்கப்படுகின்றன என்பதே இவ்வாறான பெரும் பணஇடைவெளிக்கான காரணம் என்கிறார்கள். இதிலும் மோசமான பாதிப்புக்குள்ளாகியுள்ளோர் விடயத்தில், இவ்வுதவி போதுமா? என்ற பெரும் அங்கலாய்ப்பு அனைவரிடமும் உண்டு.

இன்று பெப்பிரவரி 6ஆம் நாள், புதன்கிழமை ஒன்ராரியோ அரசு இது குறித்த முக்கிய அறிவித்தல்களை வெளியிட்டுள்ளது. சோதனைக்கு காத்திருக்கும் 2300 பேரின் காத்திருப்பு நேரத்தை குறைப்பதான முன்னெடுப்புக்கள், உதவித் திட்டத்தில் இணையக் காத்திருக்கும் 23000 பேரை திட்டத்தில் இணைத்துக் கொள்வது, குறித்த அறிவித்தல்கள் வெளியாகியுள்ளன. பல தமிழ் குழந்தைச் செல்வங்களும், இப்பாதிப்பை எதிர்கொண்டு நிற்கின்றனர் என்பதே யதார்த்தமான உண்மையாகும். இவர்களுக்கான பெருமருந்து பேரன்பே… தங்கள் பிள்ளைகளின் நிலையை வெளியே சொல்லமுடியாமல் இந்தப் பெற்றோரில் பலர், படும் அவலம் சொல்லி மாளாது. அதிலும் இவர்களை கையாள்வதில், அது குறித்த முறைமைகளிலான பட்டறிவு, எனப்பல சவாலகள் அவர்கள் முன்னே விரிந்து கிடக்கின்றன.

ஒருமுறை இவ்வாறான இளையவளை அவளின் பருவ வயதில் சந்திக்கும் வாய்ப்புக் எனக்கு கிட்டியது. அவளின் அதிரடி நடவடிக்கைகள் சிலருக்கு அச்சத்தை ஏற்படுத்தினாலும், அவள் தனக்குள் அன்புக்கு ஏங்குவதை என்னால் உணர்ந்து கொள்ள முடிந்தது. நான் எவ்வித தயக்கமுமின்றி, தொடர்ந்தும் அவள் மேல் பேரன்பை என் செயல்களினூடாக வெளிப்படுத்தினேன். அது அவளின் செயற்பாடுகளில் மாற்றத்தை ஏற்படுத்துவதை வெளிப்படையாக உணர்ந்தேன். வெளியே விளையாடிக் கொண்டிருந்த ஏனைய சிறுவர்கள் மத்தியில் அவளை அழைத்துச் சென்றேன். பந்தை அவளை நோக்கி உருட்டிவிட்டேன். என் கைகளைத் தட்டி ஆர்ப்பரித்தேன். சிறிது நேரத்தில் அவளும் அப்பந்தை என்னை நோக்கி உருட்டிவிட்டு ஆர்ப்பரித்தாள். நானும் அவளுடன் சேர்ந்து ஆர்ப்பரித்தேன். ஏனையவர்களையும் அவ்வாறு செய்யத் தூண்டினேன். அவளின் மகிழ்ச்சி அதிகரிக்க ஆரம்பித்தது. பின்னர் பந்தை காலால் அவளை நோக்கி தட்டிவிட்டேன். அதை அவளும் செய்தாள். ஈற்றில் பந்தை எறிவதற்கும், பிடிப்பதற்குமான நிலையில் வந்து நின்றோம். இவை அனைத்தையும் அதிசயமாக பார்த்துக் கொண்டிருந்த, அந்த இளையதாய் கண்ணில் கண்ணீருடன் என்னிடம் சொன்னார், அண்ணா இவ்வளவு மகிழ்சியாக இவள் இருந்து இன்று தான் நான் காணுகிறேன் என்றார். நான் சொன்னேன். இது ஒரு நாள் முடியும், ஏன் ஒரு வாரம் முடியும், ஆனால் தொடர்ந்து முயல்வது என்பது, என்னால் கூட முடியாமல் போகலாம். கடந்த 12 ஆண்டுகளுக்கு மேலாக இதைச் செய்திருகிறாய். தலைவணங்குகிறேன் என்றேன்.

இங்கு தான் இவ்வாறானவர்களுக்கான சமுதாயத்தின் பேரன்பு, பெரிதாக தேவைப்படுகிறது. சமூகம் புரிதலுடன் இதை எதிர்கொண்டால், வீடுகளுக்குள் பெரிதும் முடங்கியுள்ள அவர்களை ஒரு உறவுப் பாலமாக நான் வெளியே கொண்டுவரமுடியும். அவர்கள் தங்கள் வீடுகளுக்கு எம்மை தயங்காது அழைப்பார்கள். நாமும் தயங்காது அவர்கள் பிள்ளையை, எமது வீட்டுக்கு அழைக்கலாம். எல்லாவற்றையும் கடந்து, எங்கள் பேரன்பு, எங்கள் கவனம், எங்கள் கரிசனை, இவ்வாறான பிள்ளைகள் மீது வெளிப்பட்டாக வேண்டும். இல்லையேல், அவர்கள் நடவடிக்கைகள் கடுமையாக மாறிவிடும். இந்தப் பயமே பெற்றாரின் தயங்குநிலைக்குப் பெரும் காரணம். இதை மையப்படுத்தியே, பேரன்பு எனப் படம் ஒன்றை இயக்குனர் ராம் தருவதால், அதை பார்ப்பது சமூகமாக இவ்வாறானவர்களுக்கான உறவுப் பாலத்தை கட்டியெழுப்புதற்கு பேருவதவியாக இருக்கும். வெள்ளி வெளியாகும் பேரன்பு படத்தை, பார்த்துவிட்டு தொடர்ந்தும் ஓட்டிசம் குறித்தும், நாம் வெளிப்படுத்த வேண்டிய பேரன்பு குறித்தும், தொடர்ந்தும் பேசுவோம்… மாற்றம் ஒன்றோ மாற்றமுடியாதது… மாற்றங்களை நோக்கிய பயணத்தில் பேரன்புவையும் இணைத்துக் கொள்வோம்…

Nehru Gunaratnam