இந்தியா-பாகிஸ்தான் இடையிலான பதற்றத்தை தணிக்க முக்கிய பங்காற்றினோம் -ஐக்கிய அரபு எமிரேட்ஸ்

புல்வாமா தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தானுக்குள் சென்று இந்திய விமானப்படை விமானங்கள் பிப்ரவரி 26-ம் தேதி பயங்கரவாத முகாம்கள் மீது குண்டுகளை வீசியது. இதனையடுத்து இருநாடுகள் இடையே போர் பதற்றம் நிலவியது. உலக நாடுகள் இருநாடுகளும் அமைதி காக்க வேண்டும், கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டும் என வலியுறுத்தின. இதனையடுத்து எல்லையில் நிலை படிப்படியாக இயல்பு நிலைக்கு திரும்பியது.
இந்நிலையில் இந்தியா – பாகிஸ்தான் இடையிலான பதற்றத்தை தணிக்க முக்கிய பங்காற்றினோம் என ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தெரிவித்துள்ளது.
இந்தியாவிற்கான ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தூதர் டாக்டர் அகமது அல் பன்னா பேசுகையில்,, “இந்தியா பாகிஸ்தான் இடையிலான பதட்டத்தை தணிக்க நாங்கள் மிகவும் முக்கியமான பணியை மேற்கொண்டோம்.
இருதரப்பு இடையேயும் கொந்தளிப்பு காணப்பட்டபோது எங்களுடைய இளவரசர் பிரதமர் மோடி மற்றும் இம்ரான்கானிடம் பேசினார். சமாதானமாக வேறுபாடுகளை தீர்த்து வைக்கவே நாங்கள் முயற்சியை மேற்கொண்டோம். இருதரப்பு இடையே நாங்கள் மத்தியஸ்தம் செய்யவில்லை. இரு நாடுகளிடம் நாங்கள் கோரிக்கைகளைதான் வைத்தோம். நாங்கள் கொண்டிருக்கும் சிறப்பு உறவு மூலமாக இருநாடுகள் இடையே பதற்றத்தை தணிக்க முயற்சி செய்தோம்,” என கூறியுள்ளார்.