இந்நாடு வெளிநாட்டு முதலீடுகளுக்கு திறந்ததாகும்

“இலங்கை ஒரு மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த இடத்தில் அமைந்துள்ளது. எனவே எமது நாடு பல தரப்பினரையும் ஈர்த்துள்ளது.

இந்த சூழ்நிலையில் இலங்கை நடு நிலைமையான வெளிநாட்டுக் கொள்கையை தெரிவு செய்துள்ளது. பரஸ்பர நன்மையுடன்கூடிய அபிவிருத்தி ஒத்துழைப்பு எமது முதலாவது முன்னுரிமையாகும். இந்நாடு வெளிநாட்டு முதலீடுகளுக்கு திறந்ததாகும்” என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.

நேற்று (30) முற்பகல் கொழும்பு கோட்டையில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் வைத்து தன்னிடம் நற்சான்றுப் பத்திரங்களை கையளித்த இலங்கைக்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள நான்கு தூதுவர்களுடனான சந்திப்பின்போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

கொரிய மக்கள் குடியரசு, ஜேர்மனி, வத்திக்கான் மற்றும் சுவிட்சர்லாந்து நாடுகளின் புதிய தூதுவர்கள் ஜனாதிபதியிடம் நற்சான்றுப் பத்திரங்களை கையளித்தனர்.

அவர்களின் பெயர் விபரங்கள் பின்வருமாறு:

Jeong Woonjin (ஜோங் வூன்ஜின்ங்)
Ambassador of the Republic of Korea (கொரிய மக்கள் குடியரசின் தூதுவர்)

Holger Lothar Seubert (ஹோல்கர் லோத்தர் சொய்பெட்)
Ambassador of the Federal Republic of Germany (ஜேர்மன் சமஷ்டி மக்கள் குடியரசின் தூதுவர்)

Monsignor Brian Udaigwe (பேரருட் மொன்சிங்ஜோர் பிரயன் உடைக்வே ஆண்டகை)
Apostolic Nuncio of the Holy See (புனித வத்திக்கான் அப்போஸ்தலிக் நன்சியோ)

Dominik Furgler (டொமினிக் பேர்க்லர்)
Ambassador of the Switzerlan (சுவிட்சலார்ந்தின் தூதுவர்)

நற்சான்றுப் பத்திரங்களை கையேற்றதன் பின்னர் புதிய தூதுவர்களுடன் சுமூகமாக கலந்துரையாடிய ஜனாதிபதி இந்து சமுத்திரம் பற்றிய இலங்கையின் கொள்கையை விளக்கும்போது, இந்து சமுத்திரம் அனைத்து நாடுகளுக்கும் திறந்த சுதந்திர வலயமாக இருக்க வேண்டுமென தெரிவித்தார். இந்து சமுத்திரத்தை ஒரு அமைதி வலயமாக ஆக்க வேண்டுமென இலங்கை சுமார் ஐந்து தசாப்தங்களுக்கு முன்னர் முன்மொழிந்திருந்ததையும் ஜனாதிபதி நினைவுப்படுத்தினார்.

அண்மைக்கால இலங்கையின் அபிவிருத்தி முயற்சிகள் பற்றி கவனத்திற்கு கொண்டு வந்த ஜனாதிபதி 2009ஆம் ஆண்டு பயங்கரவாதத்தை தோல்வியுறச் செய்ததன் பின்னர் அரசாங்கத்தினதும் மக்களினதும் முக்கிய எதிர்பார்ப்பு துரித அபிவிருத்தியை அடைந்து கொள்வதாகும் எனத் தெரிவித்தார்.

“பயங்கரவாதத்தின் காரணமாக பொருளாதாரம் பெரிதும் வீழ்ச்சியுற்றது. துரித அபிவிருத்திக்கு எமக்கு வெளிநாட்டு உதவிகள் தேவைப்பட்டன. நாட்டின் அபிவிருத்தி திட்டங்களில் முதலீடு செய்வதற்கு சீனா முன்வந்தது. எமது இரு நாடுகளுக்குமிடையில் இடம்பெற்றது ஒரு வர்த்தக ரீதியான கொடுக்கல் வாங்கலாகும். எனினும் சில தரப்பினர் இந்த உறவை சீனாவுக்கு பக்கச்சார்பானதாக வியாக்கியானம் செய்தனர். இலங்கை அனைத்து நாடுகளுடனும் நற்புறவாகவே உள்ளது” என்று ஜனாதிபதி விளக்கினார்.

சீன நிதி உதவியில் ஹம்பாந்தோட்டை துறைமுகம் நிர்மாணிக்கப்பட்டதை கடன் வலையில் சிக்கிக்கொள்வதாக சில தரப்பினர் குறிப்பிட்டபோதும் ஹம்பாந்தோட்டை துறைமுகம் பாரிய அபிவிருத்தி ஆற்றல் வளம் கொண்ட திட்டமாகும் என ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். கடந்த அரசாங்கம் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவுக்கு குத்தகைக்கு வழங்கியபோதும் அது பயன்படுத்தப்படுவது வர்த்தக நோக்கத்திற்காக மட்டுமே ஆகும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

தமது கருத்துக்களை தெரிவித்த நான்கு புதிய தூதுவர்களும் கொவிட் -19 நோய்த் தொற்றை வெற்றிகரமாக கட்டுப்படுத்தியமை குறித்து ஜனாதிபதிக்கும் இலங்கைக்கும் பாராட்டுக்களைத் தெரிவித்தனர். “இலங்கை மிகவும் பாதுகாப்பான நாடு” என கொரிய நாட்டின் தூதுவர் ஜோங் வூன்ஜின்ங் தெரிவித்தார்.

கொவிட் நோய்த் தொற்றை வெற்றிகொண்ட இலங்கைக்கு தூதுவராக வர கிடைத்தமை பற்றி ஜேர்மன் தூதுவர் ஹோல்கர் லோத்தர் சொய்பெட் மகிழ்ச்சி வெளியிட்டார்.

“நாம் இலங்கைக்கு வருகை தந்திருப்பது உங்களுக்கு விரிவுரை நிகழ்த்துவதற்கல்ல. எம்மால் முடிந்த உதவியை செய்வதற்காகவே ஆகும். செய்ய வேண்டியதை இலங்கை சிறப்பாக தெரிவு செய்யும் என்பது எமது நம்பிக்கையாகும். இலங்கையின் அபிவிருத்தி எதிர்பார்ப்புக்களை அடைந்துகொள்வதற்கு முடியுமானதை செய்வதற்கு நாம் தயாராக உள்ளோம்” என ஜேர்மன் மற்றும் சுவிட்சர்லாந்து நாடுகளின் தூதுவர்கள் தெரிவித்தனர்.

2015ஆம் ஆண்டு பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் இலங்கைக்கு விஜயம் செய்தபோது தானும் வருகை தந்திருந்ததாக குறிப்பிட்ட பேரருட் பிரயன் உடைக்வே, ஜனாதிபதிக்கு கிடைத்திருக்கும் பாரிய மக்கள் ஆணை குறித்து பாப்பரசரின் வாழ்த்துக்களை தெரிவித்தார். பூகோள அமைவிடம் இலங்கை பெற்றிருக்கும் பெரும் பேறு என அவர் மேலும் தெரிவித்தார்.