சட்டவிரோத மதுபானத்தையும் ஒழிக்கும் நிகழ்ச்சித்திட்டம் விரைவில்

கிராமிய வறுமையை அதிகரிப்பதற்கு முக்கிய காரணமாகவுள்ள சட்டவிரோத மதுபானத்தையும் முழுமையாக ஒழிப்பதற்குத் தேவையான நிகழ்ச்சித்திட்டம் விரைவில் நடைமுறைப்படுத்தப்படும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

தமது அதிகார எல்லைக்குள் சட்டவிரோத மதுபானங்கள் இருக்குமாயின் அப்பிரதேசத்திற்கு பொறுப்பான பொலிஸ் பொறுப்பதிகாரியும் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரியும் முழுமையாக பொறுப்பு கூறவேண்டும் என்ற புதிய சுற்றுநிரூபமொன்று அடுத்தவாரம் வெளியிடப்பட உள்ளதாக ஜனாதிபதி தெரிவித்தார்.

“எழுச்சிபெறும் பொலன்னறுவை” மாவட்ட நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் பொலன்னறுவை மாவட்டத்திலுள்ள குறைந்த வருமானம் பெறும் மக்களுக்கு உதவிகள் வழங்குவதற்காக நேற்று (09) பிற்பகல் பொலன்னறுவை புதிய நகர நீர்ப்பாசன விளையாட்டரங்கில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனை தெரிவித்தார்.

மக்களை வறுமையிலிருந்து விடுவித்து அவர்களை பொருளாதார ரீதியாக எழுச்சிபெறச் செய்வதற்கு தேவையான நிகழ்ச்சித்திட்டங்களை அரசாங்கம் முன்னெடுத்திருக்கின்ற நிலையில் அதன் நன்மைகளை முழுமையாக அடைந்து கொள்வது மக்களின் பொறுப்பாகும் எனக் குறிப்பிட்ட ஜனாதிபதி, குடும்ப வாழ்க்கையையும் சமூகத்தையும் அதேபோன்று நாட்டின் பிள்ளைகளின் எதிர்காலத்தையும் இருளில் தள்ளிவிடும் சட்டவிரோத மதுபானத்திற்கு எதிரான நிகழ்ச்சித்திட்டத்தையும் நாட்டினதும் பிள்ளைகளினதும் எதிர்காலத்திற்காக தனது பதவிக்காலத்தில் நடைமுறைப்படுத்தவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

பாடசாலை மாணவர்களுக்கான “லக்தரு திரிய” புலமைப்பரிசில்கள் வழங்குதல், வீட்டுரிமைகளை வழங்குதல், வாழ்வாதார அபிவிருத்தியின் கீழ் உபகரணங்கள் வழங்குதல், பகுதியளவு நிர்மாணிக்கப்பட்டுள்ள வீடுகளுக்கு கூரைத் தகடுகள் உள்ளிட்ட மூலப்பொருட்கள் வழங்குதல் உட்பட பொலன்னறுவை மாவட்ட மக்களுக்கு இன்று வழங்கப்பட்ட நன்மைகளின் மொத்த பெறுமதி சுமார் 12.5 கோடி ரூபா ஆகும்.

பயனாளிகளுக்கான உதவிகளை ஜனாதிபதி இதன்போது வழங்கி வைத்தார்.

மஹிந்த அமரவீர, லசந்த அழகியவன்ன, இசுற தேவப்பிரிய, பொலன்னறுவை நகரபிதா சானக்க சிதத் ரணசிங்க, மாவட்ட செயலாளர் பண்டுக ஆபேவர்தன உள்ளிட்டோர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.