தென் இலங்கையும் சுமந்திரனும்!

“…தனி நாட்டுக்கான தமிழர் போராட்டத்தின் முதற்கட்டத்தை எஸ்.ஜே.வி.செல்வநாயகமும், இரண்டாம் கட்டத்தை வேலுப்பிள்ளை பிரபாகரனும் முன்னெடுத்தனர். தற்போது அதன் மூன்றாவது கட்டத்தை எம்.ஏ.சுமந்திரன் முன்னெடுக்கின்றார்…”

கடந்த வாரம் இடம்பெற்ற சிங்களத் தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்டிருந்த மஹிந்த தரப்பு பாராளுமன்ற உறுப்பினரான உதய கம்மன்பில மேற்கண்டவாறு கூறினார். அதே நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்த சுமந்திரன், அந்தக் கருத்துக்களைக் கேட்டு புன்னகைத்தார்.

அதற்கு முதல்நாள்தான் இன்னொரு சிங்களத் தொலைக்காட்சியில் மூன்று ஊடகயிலாளர்களின் சரமாரியான கேள்விக்கு தனி ஒரு ஆளாக, அதுவும், தனக்கு அதிகம் பரிச்சயமில்லாத சிங்கள மொழியில் சுமந்திரன் பதிலளித்திருந்தார். அவரின் பதில்கள், அரசியலமைப்பு சார்ந்த விளக்கங்கள் மிகவும் சிலாகிக்கப்பட்டன. அந்தப் பின்னணியில்தான், உதய கம்மன்பில ஆரம்பத்திலேயே, சுமந்திரனை புலியாக்குவது சார்ந்து விவாதத்தில் பேசத் தொடங்கினார்.

 ஒருவரை கேள்விகளால் துளைக்க முடியாத போது, அவர் மீது   அடையாளங்களை பூசுவதன் மூலம் விடயங்களை இலகுவாகக் கடக்கலாம் என்பது, கம்மன்பிலவின் நினைப்பாக இருந்திருக்கலாம். ஆனால், இரண்டு மணித்தியாலங்கள் அளவில் நீண்ட அந்த விவாத நிகழ்ச்சியில் ஒரு கட்டத்தில் கம்மன்பில சுமந்திரனை நோக்கியும், கூட்டமைப்பை நோக்கியும் முன்வைத்த குற்றச்சாட்டுக்களுக்கு, குற்றச்சாட்டுக்களை முன்வைத்து முடிக்க முன்னமே சுமந்திரன் பதிலளிக்கத் தொடங்கினார். இதனை எதிர்பாராத கம்மன்பில, தன்னை பேச விடுமாறு திரும்பத் திரும்ப கெஞ்சிக்கொண்டிருந்தார்.

‘மாமனிதர்’ ரவிராஜூக்குப் பின்னர், வடக்கு- கிழக்கைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் தலைவர் ஒருவர் தென் இலங்கை மக்களை நோக்கி, அவர்களின் மொழியிலேயே பேச ஆரம்பித்தது இப்போதுதான். புதிய அரசியலமைப்பு பற்றிய விளிப்புணர்வுக் கூட்டங்கள் தென் இலங்கையில் இடம்பெறுகின்ற பெரும்பாலான சந்தர்ப்பங்களில் அங்கு சுமந்திரன் பேசியிருக்கின்றார். சுமார் 30 கூட்டங்களாவது இருக்கும். வடக்கிலும்- தெற்கிலும் அரசியலமைப்பு சார்ந்து அதிகம் கேள்விக்குள்ளாக்கப்பட்ட ஒரு நபர் சுமந்திரன்தான். தெற்கில், ‘நாட்மைப் பிரிக்கும் சதித்திட்டத்தில் சுமந்திரன் ஈடுபடுகிறார்’ என்ற குற்றச்சாட்டுக்களும், வடக்கில் ‘ஒற்றையாட்சிக்குள் தமிழர் இறைமையை பலிகொடுக்கிறார்’ என்ற குற்றச்சாட்டுக்களும் தொடர்ந்து வருகின்றன. புலம்பெயர் தரப்புக்களில் குற்றச்சாட்டுக்கள் வேறு போனஷாக இருக்கின்றன.

குறிப்பாக, மைத்திரி- மஹிந்தவின் ‘ஒக்டோபர் சதிப்புரட்சி’ தோல்வியடைந்தது முதல், அந்தச் சதிப்புரட்சிக்கு ஒத்து ஊதிய தரப்புக்கள், சுமந்திரனை தமது பிரதான எதிரியாக கருதி செயற்பட ஆரம்பித்தன. அடுத்த பிரபாகரனாக சுமந்திரனைச் சித்தரிப்பது சார்ந்து தென் இலங்கை காட்டும் ஆர்வம் என்பதுவும் அதன் போக்கிலானதே. இந்த சித்தரிப்பு என்பது ஒரு கட்டம் வரையில் சிரிப்பை வரவழைத்தாலும், அதன் இன்றைய தன்னை என்பது அச்சுறுத்தும் அளவுக்கானதாக மாறிவிட்டது.

தென் இலங்கை அரசியல் என்பது எப்போதுமே பௌத்த சிங்கள மேலாதிக்க வேர்களில் நிலைத்து நிற்பது. மரம் பசுமையான தோரணை காட்டினாலும், அதன் உயிராக இருக்கும் வேர்கள் எப்போதுமே நஞ்சூறியது. அத்தோடு, பௌத்த இனவாத்தின் வழி விழுதுகளையும் புதிது புதிதாக விட்டுக்கொண்டே இருக்கும். குறித்த இரண்டு தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சிகளிலும் சுமந்திரனை நோக்கி வைக்கப்பட்ட கேள்விகளும், அவரை நோக்கிய குற்றச்சாட்டுக்களும் அவர்களுக்கு முன்னால், பிரபாகரன் உட்கார்த்திருக்கிறார் என்கிற தோரணையிலானதாக இருந்தமை அதன் போக்கிலானதே.

தந்தை செல்வாவுக்கு இணக்கமான அடையாளமாக சுமந்திரன் தன்னை முன்னிறுத்துவது சார்ந்து ஆர்வம் கொள்ளலாம். ஆனால், தலைவர் பிரபாகரனின் அடையாளம் தன் மீது விழுவது சார்ந்து அவர் ஆர்வம் கொள்வதற்கு வாய்ப்பில்லை. ஆயுதப் போராட்டங்களுக்கான நியாயங்களை தான் ஏற்றுக்கொண்டிருந்தாலும், தன்னுடைய போராட்ட வடிவம் மென் வலு சார்ந்தது என்று கூறியே அவர் யாழ். மக்களிடம் வாக்குப் பெற்றார். இன்றைக்கும் அவர் அதன் வழியிலேயே நிற்கிறார். தமிழரசுக் கட்சியையும், கூட்டமைப்பையும் அதன் போக்கிலேயே முன்னிறுத்தவும் விளைகிறார். சுரேஷ், விக்னேஸ்வரன் போன்றவர்களின் வெளியேற்றத்தை அதன் போக்கில் அவர் ஆதரித்தும் வந்தார். அப்படியான நிலையில், தன்னை நோக்கி புலி அடையாளமோ, பிரபாகரன் என்கிற அடையாளமே விழுவதை அவர் சிறிதும் விரும்பவில்லை.

தமிழ்த் தேசிய அரசியல் பரப்புக்குள் இருக்கும் சுமந்திரனுக்கு எதிரான தரப்புக்களும் கூட, அவர் மீது, பிரபாகரன் அடையாளம் பூசப்படுவதையோ, தந்தை செல்வா, தலைவர் பிரபாகரன் என்கிற வரிசையில் அவர் வைக்கப்படுவதையோ விரும்பவில்லை. தென் இலங்கையின் விசுவாசியாக, குறிப்பாக ரணிலின் பரம விசுவாசியாக எப்படியாவது சுமந்திரனை முன்னிறுத்தி, தமிழ்த் தேசிய அரசியல் பரப்பிலிருந்து அகற்றிவிட வேண்டும் என்கிற எண்ணம், சுமந்திரனுக்கு எதிரான தரப்புக்களிடம் உண்டு. ஆனால், அந்த எதிர்பார்ப்புக்களையெல்லாம் மீறி சுமந்திரனை ஆளுமையான நபராக காலம் மாற்றிக் கொண்டிருக்கின்றது. அதனை அவர், குறிப்பிட்டளவு என்ஜோய் செய்கிறார்.

இன்றைக்கு, மஹிந்த ராஜபக்ஷ தொடங்கி தென் இலங்கையின் கடும்போக்குவாதிகள் அனைவரும் சுமந்திரனை நாளாந்தம் திட்டிக் கொண்டிருக்கிறார்கள். வடக்கில், விக்னேஸ்வரன், கஜேந்திரகுமார், சுரேஷ் தொடங்கி யார் யாரெல்லாம் புதிதாக கட்சி ஆரம்பிக்கிறார்களோ, அல்லது அமைப்புக்களை ஒருங்கிணைக்கிறார்களோ அவர்கள் எல்லோரும் சுமந்திரனுக்கு எதிராகவே பேசிக்கொண்டிருக்கிறார்கள். இதனால், இலங்கை ஊடகச் சூழலில் சுமந்திரன் இன்றி ஒருநாளும் விடிவதில்லை. பத்திரிகைப் பக்கங்களையும், வானொலி தொலைக்காட்சி செய்திகளிலும் அவர் நிறைந்திருக்கிறார்.

சுமந்திரனின் மக்களுடனான அரசியல் என்பது, ஊடகங்களை முன்னிறுத்திக் கொண்டு ஆரம்பித்ததுதான். தன்னுடைய கருத்துக்களை ஊடகங்கள் சர்ச்சைக்குரியதாக மாற்றும் போது, அதனை மக்கள் சந்திப்புக்களில் நின்று விளக்கமளித்து விடயங்களை வெற்றிகொள்ளும் உத்தியை அவர் கடைப்பிடிக்க ஆரம்பித்தார். (அதாவது, பெரும் சர்ச்சைகளை ஊரே கூடிப் பேசி முடித்ததும், அது சார்ந்த தெளிவுபடுத்தல்களை சிறிய சிறிய குழுக்களுக்கு விளக்கமளிப்பதன் மூலம் மெல்ல மெல்ல அவர்களை தன் பக்கத்துக்கு சாய்க்க முடியும் என்று அவர் நம்பினார்.) வடக்கை நோக்கி சுமந்திரன் வந்த கடந்த 5 வருடங்களில் அதைத்தான் செய்தார்.

ஆரம்பத்தில், தேசியப் பட்டியல் உறுப்பினரான சுமந்திரன் என்ன நம்பிக்கையில் யாழ்ப்பாணத்தில் போட்டியிட வருகிறார் என்று கேட்டவர்கள் எல்லாம், இன்றைக்கு அடுத்த தேர்தலில் சுமந்திரனின் வெற்றி குறித்து எந்த சந்தேகத்தையும் எழுப்புவதில்லை. கிட்டத்தட்ட இளைஞர் தரப்பொன்றை தன்னுடைய பக்கத்தில் சேர்ந்துக் கொண்டிருக்கின்றார். தன்னை நோக்கி திட்டித்தீர்த்த இளைஞனிடம் கேள்விகளும், கோபமும் ஆறிய புள்ளியில் நின்று உரையாடும் உத்திதான் அவரை கரை சேர்த்திருக்கின்றது. அந்த உத்தியைத்தான் தென் இலங்கை ஊடகங்களிடமும் சுமந்திரன் முன்வைக்க எத்தணிக்கின்றார்.

ஆனால், வடக்கில் அவரின் அரசியல் அணுகுமுறை என்பது, அவருக்கு வெற்றியைத் தேடித் தரும் சூழல் உண்டு. அடுத்த தேர்தல் குறித்தோ, அதில் தன்னுடைய வெற்றி வாய்ப்புக் குறித்தோ அவர் கவலை கொள்ளத் தேவையில்லை. ஆனால், தென் இலங்கையில் நினைப்பாடு என்பது, தன்னை மீறிச் செல்கின்ற தமிழர் தரப்பை எப்போதும் அனுமதித்தது இல்லை. அப்படியான அச்சுறுத்தலான சூழலொன்று சுமந்திரனை நோக்கி தென் இலங்கை முன்னெடுத்துவிடலாம் என்கிற அச்சம், அவரைச் சூழ உள்ளவர்கள் மீதும், அவரை அடுத்த கட்டத்துக்கான அரசியல் தலைமையாக கொள்வோருக்கும் உண்டு.  இவ்வாறான கட்டத்தில் சுமந்திரனும், அவரைச் சுற்றியுள்ளவர்களும் அவதானமாக இருக்க வேண்டிய கடப்பாடு உண்டு.

 

-புருஜோத்தமன் தங்கமயில்