இயற்கை விவசாய வாரம் ஜனவரி 8 முதல் 14 வரை – 2019, ஒரு பார்வை.

இயற்கை விவசாய வாரம் ஜனவரி 8 முதல் 14 வரை – 2019, ஒரு பார்வை.

கடந்த 2018 ஜனவரி மாதம் புதியவெளிச்சம் இயற்கை விவசாயம் சார்த்த பயிற்சிப்பட்டறைகள் கருத்தரங்குகளை இலங்கையின் வடபகுதியில் ஒழுங்குசெய்திருந்தது, இந்த கருத்தரங்குகள் நடைபெற்ற காலப்பகுதியில் இயற்கை விவசாய வாரமாக 8ஆம் திகதி தொடக்கம் 14ஆம் திகதி வரையான ஒருவார காலப்பகுதியை பிரகடனப்படுத்தியிருந்தது. அத்துடன் இயற்கை வழி இயக்கங்களும் தோற்றிவிக்கப்பட்டு , அதன் செயற்பாடுகளும் வடக்கு முழுவதும் கடந்த ஆண்டு செயற்பாடுகளை விஸ்தீரணம் செய்திருந்தது .

இயற்கை வழி இயக்கம்  இந்த வருடமும் இயற்கை விவசாய வாரம் 2019 இலங்கையின் வடபகுதியில் வவுனியா, முல்லைத்தீவு, கிளிநொச்சி மன்னார், மற்றும் யாழ்ப்பாண மாவட்டங்களில் சிறப்புற முன்னெடுக்கப்பட்டிருந்தது.

இயற்கை வழி இயக்கம் கடந்த ஒரு வருட காலப்பகுதியில் பல்வேறு செயற்பாடுகளை முன்னெடுத்ததோடு மட்டுமல்லாமல், இவ்வருடமும்  புதிய வெளிச்சம் ஆரம்பித்து வைத்த இயற்கை விவசாய வாரம்   மாவட்ட ரீதியாக இயற்கை வழி இயக்கத்தினரால் ஒழுங்கமைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஒருவருடகால இயற்கை வழி இயக்கத்தின் செயற்பாடுகளை பற்றி பார்ப்போமானால், முக்கியமாக களப் பயணங்களையும், இயற்கை விவசாயிகள் மற்றும் இயற்கை வழி விளைந்த உற்பத்திப்பொருட்களை கொள்வனவுசெய்பவர்களையும் இணைக்கும் ஒரு சந்திப்புப்புள்ளியாக இயற்கை வழி உற்பத்திப்பொருட்களின் விற்பனை நிலையமான அங்காடியை ஆரம்பித்ததையும் குறிப்பிடலாம்.

அநேகமாக ஒவ்வொரு வாரமும் ஒழுங்குசெய்யப்பட்ட களப்பயணங்களில் இயற்கை வழி விவசாய பண்ணைகளுக்கு விளைநிலங்களுக்கு இயற்கை வழி இயக்கத்தினர் சென்று அங்கு இடம்பெறும் செயற்பாடுகள் பற்றி அறிந்துகொள்வதோடு, கலந்துரையாடல்களையும் மேற்கொள்வார்கள், இதன் மூலம் இயற்கை வழி விவசாய முறைகள் மற்றும் நோய்கள், அவற்றுக்கான தீர்வுகள் என பல விடயங்களும் கலந்துரையாடப்படும். இவற்றோடு முற்றுமுழுதாக அசேதன பாவனையற்ற விவசாய முறையே பின்பற்றப்படுகிறது என்பதும் உறுதிசெய்யப்படும்.

இயற்கை வழி இயக்கத்தின் அங்காடியை பற்றிக்குறிப்பிடுவதானால், முதலாவது அங்காடி யாழ்ப்பாணத்தில், வையித்தியசாலை வீதியில் 6ஆம் திகதி ஏப்ரல் மாதம் ஆரம்பிக்கப்பட்டது. தற்போது வாரச்சந்தையாக ஒவ்வொரு வெள்ளிக்கிழமைகளிலும் மாலை 3 மணிமுதல் 7 மணிவரை இயற்கை வழி இயக்க அங்காடி நடைபெற்று வருகிறது, இந்த மூலம் இயற்கை வழி விளைந்த உற்பதிப்பொருட்களை விவசாயிகள் நேரடியாக விற்பதற்கு சந்தர்ப்பம் கிடைப்பதோடு இயற்கை வழி விளைந்த, நஞ்சற்ற காய்கறிகள் மற்றும் பொருட்களை பெற்றுக்கொள்வதற்கான சந்தர்ப்பம் மக்களுக்கு கிடைக்கிறது.

இந்த ஆண்டு இயற்கை விவசாய வார நிகழ்வுகள் பற்றி பார்ப்போமானால், 8ஆம் திகதி ஜனவரி முதல் 16ஆம் திகதிவரை மாவட்ட ரீதியாக பல்வேறு நிகழ்வுகள் ஒழுங்குசெய்யப்பட்டிருந்தது.

முதலாவது நிகழ்வு 8ஆம் திகதி, மன்னார் மாவட்டத்தில் தட்சணமருதமடுவில் எழுச்சிபூர்வமாகக் கொண்டாடப்பட்டது. பண்ணைப் பெண்கள் அமைப்பின் ஏற்பாட்டில் இயற்கைவழி ஆர்வலர். திரு. சிவதாஸ் அவர்களின் தலைமையில் நடந்த நிகழ்வில் சுமார் நூறு இயற்கைவழிச் செயற்பாட்டாளர்கள் வடக்கின் சகல மாவட்டங்களில் இருந்தும் தன்னார்வத்துடன் பங்கெடுத்திருந்தனர்.

நூறு இலுப்பை மரங்களின் நடுகையுடன் காலை பத்து மணிக்கு ஆரம்பமான இந்நிகழ்வில் இயற்கைவழி விவசாயத்துக்குத் தேவையான உள்ளீடுகள் தயாரிப்பது தொடர்பாகப் பயிற்சியும் வழங்கப்பட்டது.

நஞ்சற்ற உணவை உற்பத்தி செய்யக் கூட்டுப் பண்ணையங்கள் உருவாக்கப்படவேண்டியதன் அவசியம் பற்றி வலியுறுத்தப்பட்டது. சமுக, பொருளாதார, அரசியற் பின்னணியில் விவசாயமும் விவசாயிகளும் நலிவடைந்திருப்பது சுட்டிக்காட்டப்பட்டதோடு, குறித்த நிலமையில் எவ்வாறு மாற்றம் கொண்டுவரமுடியும் என்பது பற்றியும் ஆலோசிக்கப்பட்டது. நஞ்சற்ற மதிய உணவு கலந்துகொண்ட செயற்பாட்டாளர்கள் அனைவருக்கும் பரிமாறப்பட்டதோடு நிகழ்வு இனிதே மதியம் இரண்டு மணியளவில் நிறைவு பெற்றது.

இரண்டாவது நிகழ்வாக 9ஆம் திகதி கிளிநொச்சி, பரந்தனில் அமைந்துள்ள இலங்கை விவசாயக் கல்லூரியில் இயற்கை விவசாய வாரம் – 2019 இனை முன்னிட்டு மாணவர் ஒன்றிய ஒழுங்குபடுத்தலில் இரத்ததானமுகாம் நடைபெற்றது, மாணவர்கள், அலுவலர்கள், விரிவுரையாளர்கள், விவசாயிகள், விருந்தினர்கள் என பலரும் கலந்து கொண்டு இரத்ததானம் செய்திருந்தார்கள்.

மூன்றாம் நாள் 10ஆம் திகதி ஜனவரி கிளிநொச்சியில் நடைபெற்ற நிகழ்வில், விவசாயிகள், அரசஅதிகாரிகள், ஆசிரியர்கள், வைத்தியர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். இதன் போது கிளிநொச்சிக்கான இயற்கை வழி அங்காடியும் ஆரம்பித்து வைக்கப்பட்டது. A9 வீதியில் கிளிநொச்சி பொலீஸ் நிலையம் முன்பாக அமைந்துள்ள இந்த வாராந்த அங்காடியில் ஒவ்வொரு வியாழக்கிழமையும் 3-6 மணி வரை நஞ்சற்ற மரக்கறிகள், மூலிகைகள், இயற்கை உரங்களை பெற்றுக் கொள்ள முடிவதோடு இயற்கை வழி உற்பத்திப் பொருட்களை விற்பனைசெய்யவும் முடியும்.

அதே நேரம் இயற்கை விவசாய வாரத்தை முன்னிட்டு அல்லை விவசாயி கிரிசனின் யாழ்ப்பாணம் பெருமாள் கோவிலடியில் அமைந்துள்ள நஞ்சற்ற மரக்கறிகளை விற்பனை செய்யும் இயற்கை விவசாய விற்பனை நிலையத்தில் இயற்கை விவசாய வார நிகழ்வு இடம்பெற்றது.

இயற்கை விவசாயம் சார்ந்த கருத்துக்கள் பகிரப்பட்டதோடு, கலந்துகொண்டவர்கள் அனைவருக்கும் பனங்காய்பணியாரமும் பசும்பாலும் பரிமாறப்பட்டது. நிகழ்வின் இறுதியில் இயற்கை உரமும் விதைகளும் அனைவருக்கும் வழங்கப்பட்டது.

நான்காம் நாள் 11ஆம் திகதி வவுனியா இலங்கை விவசாய கல்லூரியில்  நடைபெற்ற நிகழ்வில்,

திரு.நேசன், தங்கப்பதக்கம் ஐயா (தாய்லாந்தில் 1995 இல் FAO ஆல் நடத்தப்பட்ட போட்டியில் இலங்கைக்கான இயற்கை முறை நெற்செய்கையின் தங்கப்பதக்கம் வென்றவர்) என செல்லமாக அழைக்கப்படும் நெடுங்கேணி திரு முத்துக்குமார், வவுனியா அரசி நாற்றங்கால் சேதன உற்பத்தியாளர் உரிமையாளர் தம்பி அண்ணன், திரு ரஜிதன்!

ஆகியோர் கலந்து கொண்டு தத்தமது அனுபவங்களை, எதிர்கால நோக்கங்களை பகிர்ந்து கொண்டனர்.

அனுபவப்பகிர்வுகளுக்கிடையே இலங்கை விவசாயக்கல்லூரி வவுனியா மாணவர்களின் பெருமுயற்சியில் அவர்கள் பயிர்செய்யும் இயற்கை பயிர்கள், மண்புழு உற்பத்திகள் என்பன வளவாளர்களுக்கும், வருகைதந்திருந்த விவசாயிகளுக்கும் பெருமையுடன் அவர்களால் பெருமையுடன் காண்பிக்கப்பட்டன.

இதே தினத்தில் முழங்காவில் ஜெயபுரத்தில் அமைந்துள்ள இளைஞர் சேவைகள் மன்றத்தின் பண்ணையில் இயற்கை விவசாய நிகழ்வுகள் விவசாயக் கல்லூரி விரிவுரையாளர் திருமதி சிந்துஜா மற்றும் இளைஞர் சேவைகள் மன்ற பொறுப்பாளர் திரு சிந்துஜன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் ஏறத்தாழ நாற்பது பேர் வரையில் கலந்துகொண்டிருந்தார்கள். கலந்துரையாடலை தொடர்ந்து பண்ணையை பார்வையிட்டதோடு குரக்கன் கஞ்சியும், மத்திய உணவாக புளிச்சாதமும் பரிமாறப்பட்டது.

அதே தினம் இயற்கை விவசாய வாரத்தை முன்னிட்டு சிறப்பு அங்காடி யாழ்ப்பாணம் வைத்தியசாலை வீதியில் நடைபெற்றது.

ஐந்தாம் நாள் நிகழ்வுகள் 12ஆம் திகதி மன்னார் அடம்பனில் மாலைநேர உழவர் சந்தையாகிய “அங்காடி” தொடக்கி வைக்கப்பட்டது. ஒவ்வொரு வியாழக்கிழமைகளிலும் மாலை 3 மணிமுதல் மாலை 6 மணிவரை நஞ்சற்ற காய்கறிகளை உற்பத்திசெய்யும் விவசாயிகள் தங்கள் உற்பத்திகளை அங்காடியூடாக மக்களிற்கு நேரடியாக விற்பனைசெய்ய முடியும்.

அடம்பனில் உள்ள இந்த அங்காடியானது இயற்கைவழி இயக்கத்தின் முயற்சியால் உருவான வடக்கின் முதலாவது ‘பண்ணைவாயில் அங்காடியாக’ (Farmgate Organic Marketplace) அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஆறாம் நாள் நிகழ்வு 13ஆம் திகதி யாழ் மாவட்டத்துக்கான பிரதான நிகழ்வு புன்னாலைக்கட்டுவனில் அமைந்துள்ள Margosa Green விடுதியில் நடைபெற்றது.

கடந்த ஆண்டு புதிய வெளிச்சம் மூலம் இணைந்த இயற்கை விவசாயிகள், இயற்கை விவசாயம் சார்ந்தவர்கள், இயற்கை விவசாயத்தில் ஈடுபாடுள்ளவர்கள் என பலரையும், இயற்கை வழி இயக்கம் ஒருங்கிணைத்து இன்றுவரை முன்னெடுத்து வரும் செயற்திட்டங்களை பற்றிய மீள்பார்வை உரை திரு குலசிங்கம் வசீகரன் மற்றும் திரு சுந்தரேஸ்வரன் ஆகியோரால் நடத்தப்பட்டது.

தொடர்ந்து கருத்துக் பரிமாறல்களும் இடம்பெற்றது. கடந்த வருடம் புதிய வெளிச்சத்தின் ஊடாக அவர்கள் ஒழுங்குசெய்த இயற்கை விவசாய பயிற்சிகளில் திரு பாமயன் தலைமையிலான தமிழ்நாட்டு விவசாயிகளோடு, எமது தேசத்தை சேர்ந்த, சுவீடன் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக கடமையாற்றியிருந்த, தற்போது பிரித்தானியாவில் வசித்து வரும், இயற்கை வழி இயக்கத்தின் தோற்றத்துக்கு முக்கிய காரணகர்த்தா பேராசிரியர் நடராஜா சிறிஸ்கந்தராஜாஅவர்கள், skype மூலம் இன்றைய நிகழ்வில் இணைந்து சிறப்பித்திருந்தார்கள்.

வாழையிலையில் வடையும், மோதகமும் பரிமாறப்பட்டது, தேநீருடன் கருத்துப்பரிமாறல் தொடர்ந்து, இறுதி நிகழ்வாக இயற்கை வழி இயக்கத்திற்கான இணையத்தளம் ( www.omne.bio) திரு சுந்தரேஸ்வரன் அவர்களால் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது. தற்போது ஆங்கிலத்தில் மட்டுமுள்ள இந்த இணையத்தளம், தமிழ் மொழியிலும் வெகு விரைவில் பார்வையிடக்கூடியவாறு இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

7ஆம் நாள் 14ஆம் திகதி இயற்கை விவசாய வார நிகழ்வுகளின் முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பு கைவேலியில் உள்ள செல்வபாக்கியம் பண்ணையில் சிறப்பாக இடம்பெற்றது. நிகழ்வில் விவசாய திணைக்கள அதிகாரிகள், விவசாய கல்லூரி மாணவர்கள், விவசாயிகள் என பலரும் கலந்துகொண்டதோடு, இயற்கை விவசாய உள்ளீடுகள், பூச்சிக்கொல்லிகள் என்பவை உற்பதிசெய்யும் முறைப்பற்றிய விளக்கமும் வழங்கப்பட்டது. மூலிகைகள் பற்றிய விளக்கமும் திரு விமலனால் வழங்கப்பட்டது.

இவ்வருட இயற்கை விவசாய வாரத்தின் சிறப்பு அம்சமாக இந்தியாவிலும் ஒரு நிகழ்வு நடைபெற்றதை குறிப்பிடலாம், இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட நஞ்சில்லா காய்கறிகள் பழங்கள் என்பவற்றை விவசாயிகள் நேரடி விற்பனை செய்யும் விற்பனை நிலைய தொடக்கவிழா மதுரை ரேஸ்கோர்ஸ் மைதான நுழைவாயில் துவங்கப்பட்டது. முதல் விற்பனையை இயற்கை வேளாண் அறிஞர் திரு பாமயன் அவர்கள் தொடங்கி வைத்தார்.

பல்வேறு பட்ட இயற்கை வழி விவசாயம் சார் நிகழ்வுகளோடு 2019ஆம் ஆண்டின் இயற்கை விவசாயம் வாரம் சிறப்பாக நடைபெற்று முடிந்தது, இந்த ஆண்டு இயற்கை வழி இயக்கத்தின் செயற்பாடுகள் இன்னும் விரிவடையும், இன்னும் பல அங்காடிகள் இந்த ஆண்டில் உருவாகும், மாணவர்களிடையே இயற்கை விவசாயம் தொடர்பில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நிகழ்வுகள் முன்னெடுக்கப்படும், களப்பயணங்கள், கலந்துரையாடல்கள் என்பனவும் தொடர்ந்தும் நடைபெறும் என்ற உறுதிமொழியோடு நாம் முன்னேறிச் செல்கிறோம்.

இந்த வருடம்  இயற்கை விவசாய வாரம் விழிப்புணர்வு  நிகழ்வாக  கடைபிடிக்க உதவிய , எமது செயற்பாட்டுக்கு உறுதுணையாக நின்ற அணைத்து விவசாயிகள் , நண்பர்கள் , ஊடகங்கள் தினக்குரல் , காலைக்கதிர், டான் டிவி , IBC thamil , eகுருவி மற்றும் Facebook இல் நமது கருத்துக்களை பகிர்ந்து பரப்புரைக்கு உதவிய அனைத்து உள்ளங்களுக்கும் நன்றிகளை தெரிவித்து கொள்கின்றோம்