விவசாயத்துறையில் தமிழர் பங்களிப்பு – புதிய வெளிச்சம் 2018 – குரு அரவிந்தன்

கனடா தமிழர்கள் இந்த மண்ணில் அனேகமான தொழில் வாய்ப்பைப் பெற்றாலும், விவசாயத்துறையில் பெரிதாக ஈடுபடவில்லை, ஆனால் சில தமிழர்கள் நகரத்திற்கு வெளியே நிலங்களை வாங்கிப் பண்ணைகளை ஏற்படுத்தி இருகின்ற்றார்கள். சிலர் விவசாய பட்டபடிப்புகளை மேற்கொண்டு , துறை சார் வல்லுனர்களாக திகழ்கின்றார்கள் . ஆனாலும் அவர்களுக்குள் ஒரு இணைப்பு இருப்பதாக தெரியவில்லை . ஒன்டாரியோ மாநிலத்தில் பல்கலைக்கழகம் முடித்த ஐந்து இளைஞர்கள் “eelam natural foods” எனும் பெயரில் பெருமளவில் விவசாயம் செய்திருந்தார்கள் . அவர்களை போன்று தற்போது பெருமளவானோர் பெரு நிலங்களில் விவசாயம் செய்வதற்கு முன்வந்துள்ளார்கள்
  கனடாவிற்குப் புலம் பெயர்ந்த அனேகமான தமிழர்கள் தாய் நாட்டில் விவசாயத்தை முக்கிய தொழிலாகக் கொண்டிருக்கவில்லை. கல்வியறிவு பெற்ற துறைகளிலேயே முடிந்தளவு தங்கள் தொழில்களையும் தேடிக் கொண்டிருக்கின்றனர். இந்தியாவில் இருந்து புலம் பெயர்ந்த  சீக்கிய இனத்தவர்கள் பெருமளவில் வான்கூவரிலும் அதைச் சூழஉள்ள இடங்களிலும் விவசாயத்தில் ஈடுபட்டிருக்கின்றார்கள். அப்பகுதியைக் கடந்து செல்லும் போது அவர்களின் கடின உழைப்பை அவதானிக்க முடிந்தது. அவர்கள் தாய் மண்ணிலும் இத்துறையிலேயே அனேகமாக ஈடுபாடு கொண்டவர்களாக இருந்தார்கள். நவீன இயந்திரங்களைப் பாவித்து காலநிலைக்கு ஏற்ப குறுகிய காலப் பயிர்களை நட்டுப் பலன் பெறுகின்றார்கள். குளிர் காலத்தைத் தவிர்த்து ஏனைய மாதங்களில் என்னென்ன பயிர்களை நட்டுப் பலன் பெறலாமோ அதை எல்லாம் நடைமுறைப் படுத்துகின்றார்கள். இவர்களின் விவசாயமுறையையும், இங்கே உள்ள விவசாய உபகரணங்களையும் பார்த்தபோது தாய் மண்ணில் உள்ள விவசாயிகளுக்கும் இங்குள்ள வளத்தைப் பாவித்து ஏதாவது வகையில் உதவவேண்டும் என்ற எண்ணம் கனடிய மண்ணில் உள்ள சிலருக்கு உருவானது. அந்த சிறப்பான எண்ணத்தை நடைமுறைப்படுத்த தற்போது ஈகுருவி குழுவினர் பெருமனதுடன் முன்வந்திருப்பது பாராட்டுக்குரியது.
ஈழத்தமிழ் மக்களுக்குப் பலவகையிலும் இங்கே உள்ள மக்கள் வெவ்வேறு துறைகளில் உதவிக் கொண்டிருக்கிறார்கள். நிதி உதவி செய்வதைவிட தங்களுக்குத் தொழில் வாய்ப்பைப் பெற்றுத் தரும்படி அங்குள்ளவர்கள் எதிர்பார்க்கின்றார்கள். நிதி உதவி என்பது குறுகிய காலத்திட்டத்திற்கு அவசியமானதான், ஆனாலும் நீண்டகால திட்டத்தின் அடிப்படையில் அங்குள்ள பாதிக்கப்பட்ட மக்களுக்குக் தொழில் வாய்ப்புக் கிடைப்பது அவர்களின் எதிர் காலம் சிறப்பாக அமைவதற்கு வழிவகுக்கும். இப்படியான நீண்டகால திட்டத்தின் அடிப்படையில் எப்படியான திட்டங்களை நடைமுறைப்படுத்தலாம் என்பதை முதலில் கவனிப்போம்.
ஈழத்தமிழ் மக்களில் விவசாயத்துறையில் ஈடுபட்டவர்களில் வடக்குக் கிழக்குப் பகுதி உள்ள மக்களே யுத்த சூழ்நிலை காரணமாக அதிகமாகப் பாதிக்கப்பட்டிருந்தனர். பெரிய நிலங்களில் விவசாயம் செய்தவர்கள் ஒருபுறம் இருக்க சிறு தோட்டங்கள் மூலம் தங்கள் அன்றாட வாழ்க்கையை கொண்டு சென்றவர்கள்தான் அதிகம். இடம் பெயர்ந்த காரணத்தால் அவர்களின் விவசாயத் தோட்டங்களும் கைவிடப்பட்டிருந்தன. மீள் குடியேற்றங்கள் நடந்த இடங்களில் அவர்கள் மீண்டும் தங்கள் விவசாய நிலத்தைப் பண்படுத்திப் பயன்பெறவேண்டும். அதற்கான நிதி உதவிகள் முக்கியமானது. யார்யார் எங்கெல்லாம் கண்ணிவெடிகளைப் புதைத்து வைத்தார்களோ அதை எல்லாம் கண்டுபிடித்து அகற்ற வேண்டும். சில பகுதிகளில் கண்ணிவெடிகள் அகற்றப்பட்டு விட்டதாகச் சொன்னாலும், ஒருவரின் உயிரோடு சம்பந்தப் பட்டது என்பதால், எந்த அளவுக்கு நம்பகமானது என்று தெரியவில்லை. கிணறுகள் எல்லாம் தூர்ந்து போயிருக்கலாம், அல்லது சில காரணங்களால் முற்றாக மூடப்பட்டிருக்கலாம், அவற்றை எல்லாம் பழையபடி தோண்டி  நல்ல நிலைக்குக் கொண்டு வரவேண்டும். உள்ளுரில் கிடைக்கும் இயற்கை வழி உரங்களைப் பயன்படுத்துவது சிறந்தது. குப்பைகள், ஆடுகள், கோழிகளின் கழிவு, மாட்டின் சாணம், கடல் உணவின் கழிவுகள் போன்றவற்றால் உருவான எரு, போன்றவற்றை உரமாகப் பாவிக்கலாம். இதைவிட விவசாயக் கழிவுகளான உமி, கிளை, இலைதழை, புல், கொட்டை, பழம் ஆகியவற்றிலிருந்தும், சமையலறைக் கழிவுகளான வீடு, உணவகம் மற்றும் சந்தையிலிருந்து கிடைப்பவற்றிலிருந்தும், தோல், விதை, தண்டு, பழம், காய்கறி, சக்கை போன்றவற்றிலிருந்தும் இயற்கை உரம் தயாரிக்கப்படுகிறது. அடிப்படைத் தேவையான தண்ணீர், பயிரிடத் தேவையான விதைகள், உரம் போன்ற இதற்கான தேவைகள் கிடைக்கும் பட்சத்தில் வீட்டுத் தோட்டங்கள் மூலம் அங்கே உள்ள ஒவ்வொரு குடும்பங்களின் தேவைகளையும் பூர்த்தி செய்ய முடியும்.
அடுத்ததாக நாங்கள் கவனம் செலுத்த வேண்டியது மழையை நம்பியிருக்கும் ஆறுகள், குளங்கள், கால்வாய்கள் போன்றவற்றால் பலன் பெறும் நிலங்களாகும். இந்த நிலங்கள் பரப்பளவில் பெரிய நிலங்களாகும். இத்தகைய நிலங்களில் இலகுவாக விவசாயம் செய்வதற்கு இயந்திரங்கள் பெரிதும் உதவியாக இருக்கும். குறிப்பாக உழவு இயந்திரம், அறுவடை இயந்திரம், நீர் பாய்ச்சும் இயந்திரம், உரமிடும் இயந்திரம், பயிரைப் பாதிக்கும் பூச்சிகளை அழிப்பதற்கு மருந்து தெளிக்கும் இயந்திரம் போன்றவை மிகவும் முக்கிமானதாகும். ஏற்கனவே இப்படியான உபகரணங்கள் அங்கே பாவனையில் முன்பு இருந்தாலும், தற்போது அங்குள்ள விவசாயிகளுக்கு அவற்றை வாங்குவதற்கான வசதிகள் இல்லை என்பதால், இதற்கான நிதி உதவிகள் அவர்களுக்குத் தேவைப்படலாம். நாற்று நடுவதற்கான இயந்திரத்தையும் அங்கு புதிதாக அறிமுகப் படுத்தலாம். நிதி உதவி கிடைக்காவிட்டால், கூட்டுறவு முறைத் திட்டத்தை ஆரம்பித்து நடைமுறைப் படுத்தலாம். உதவி செய்யும் நோக்கம் கொண்ட புலம் பெயர்ந்த மண்ணில் இருப்பவர்கள் இவற்றை வாங்கி அங்கே அனுப்புவதன் மூலம் அவர்களின் தேவைகளை நிவர்த்தி செய்யலாம்.
2018 ஆம் ஆண்டு ஜனவரி 08 ஆம் திகதியில் இலிருந்து ஜனவரி 14 ஆம் திகதி  வரை ‘இயற்கை  விவசாயம் காப்போம்’ என்ற திட்டத்தை நடைமுறைப் படுவதற்கான வாரமாகப் பிரகடனப் படுத்துவதற்குரிய ஏற்பாடுகள் செய்யப் பட்டிருக்கின்றன. முக்கியமாக பரப்புரைகள் மூலமும், சமூக வலைத்தளங்கள் மூலமும் இத்திட்டத்தை சாத்தியமாக்குவதன் மூலம் தாயகத்தையும், புலம்பெயர் தமிழர்களையும் விவசாயத் துறையில் ஒன்றாக இணைக்க முடியும். இத்திட்டத்தின் மூலம் காலப்போக்கில் விவசாயத்துறையில் சந்தைப்படுத்தல் பற்றியும், நவீன முறையில் விவசாய உபகரணங்களைப் பாவிப்பதற்கும், (Agricultural Tools) அவற்றை விவசாயிகளுக்கு அறிமுகப்படுத்துவதற்கும் இத்திட்டம் சாதகமாக அமையும்.
welcome-to-kilinochchi
கடந்த வருடங்களில் புதிய வெளிச்சத்தினால் ஒழுங்கு செய்யப்பட ஆற்றுப்படுத்துகை மூலம் மாணவர்களையும், பாதிக்கப்பட்ட மக்களையும் சென்றடைந்து அதனால் அவர்கள் சிறந்த பலனடைய முடிந்தது. ஆனாலும் அங்குள்ள மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளைக் கவனமாக ஆராய்ந்து பார்க்கும் போது, குறிப்பாக உள்ளக வன்முறைகள், போதைப் பொருள் பாவனை, முறையற்ற பாலியல் தொடர்புகள், சிறுவர் துஸ்பிரயோகம், மதமாற்றம், ஆசிரியர் தராதர வீழ்ச்சி, தற்கொலை, கல்வியில் ஆர்வமின்மை, வெளிநாட்டு மோகம், நிவாரணங்களுக்காக அலைதல், ஒழுங்குபடுத்தப்படாத உதவிகள், திட்டமிடப்படாத உதவி முறைகள், மந்தமான புதிய தொழில் முற்சிகள் போன்ற பல பிரச்சனைகளை இனம் காண நேர்ந்தது. இதில் முக்கியமான விடயம் என்னவென்றால் அங்கு கற்பிக்கும் ஆசிரியர்களும் போர் சூழலினால் பாதிக்கப்பட்டிருப்பதால் அவர்களையும் ஆற்றுப்படுத்தி அவர்களுக்கான பயிற்சிப்பட்டறைகள் வைக்க வேண்டிய சூழ்நிலையும் ஏற்பட்டிருந்தது.
இதற்கு  உளவியல் ஆற்றுப்படுத்துகை மற்றும் நெறிப்படுத்துகையினை செவ்வனே செய்யக்கூடியவரான பேராசிரியர் ஜெயந்த ஸ்ரீ பாலகிருஸ்ணன் அவர்கள் தன்னுடைய நேரத்தையும் உழைப்பையும் கடந்த வருடம் புதிய வெளிச்ச அமைப்புக்கு வழங்கியதுடன், இதற்கான வழிகாட்டியாகவும் அமைந்திருந்தார். அவரது வழிகாட்டலில் சிறந்த பலன் கிட்டியதால், இந்த நிலையில் இருந்து அடுத்த கட்டத்திற்கு நகரவேண்டிய சூழ்நிலை உருவாக்கப் பட்டது. மாணவர்களின் எதிர்காலம் சுபீட்சமாக இருக்க வேண்டுமானால் மாணவர்களுக்கு கல்வி எவ்வளவு அவசியம் என்பதையும், இயற்கை விவசாயத்தால் கிடைக்கும் நன்மைகள் பற்றியும் விழிப்புணர்வை ஏற்படுத்துவது, அதற்கான வழியைக்காட்டுவது, விவசாயம் பற்றிய செயல் முறை கருத்தரங்குகளை நடத்துவது போன்ற நிகழ்வுகளை இந்த வருடம் நடத்த ஈகுருவி குழுவினர் திட்டமிட்டிருக்கிறார்கள்.
கல்வியைப் பொறுத்த வரையில் கற்பிக்கும் ஆசிரியர்களின் செயற்பாட்டு திறனை கூட்டுமுகமாக, ஆசிரியர்களுக்கும், அதிபர்களுக்குமான பயிற்சி பட்டறைகளும், பாடசாலை கல்வியை பூர்த்தி செய்த மாணவர்களுக்குமான பயிற்சி பட்டறைகளும் soft Skills (Personal Development & entrepreneurship development  ) அங்கே நடைபெற இருக்கின்றன. ஆசிரியர்களுக்கான கற்பித்தல் வழிகாட்டல் போன்ற பயிற்சிப் பட்டறைகள் யாழ்ப்பாண மாவட்டம், கிளிநொச்சி மாவட்டம், முல்லைத்தீவு மாவட்டம் போன்ற இடங்களில் நடைபெற இருக்கின்றன. இதைவிட யாழ்ப்பாண மாவட்டம், கிளிநொச்சி மாவட்டம் போன்ற இடங்களில் அதிபர்களுக்கான பயிற்சிப் பட்டறைகளும் நடைபெற இருக்கின்றன. பாடசாலைக் கல்வியை பூர்த்திசெய்த இளைஞர் யுவதிகளுக்கான வழிகாட்டல் பயிற்சிப் பட்டறைகளும் யாழ்ப்பாண மாவட்டம், கிளிநொச்சி மாவட்டம், முல்லைத்தீவு மாவட்டம் போன்ற ஒவ்வொரு இடங்களிலும் ஐந்து நாட்கள் வரை நடைபெற இருக்கின்றன.
தமிழகம், கனடா, ஐக்கிய இராச்சியம் ஆகிய நாடுகளில் இருந்து அனுபவம் பெற்ற விவசாயிகள், மற்றும் துறை சார்ந்த வல்லுனர்கள் தாயகத்திற்குச் சென்று 10 மேற்பட்ட விவசாய கிராமங்களில் ‘இயற்கை விவசாய’ பயிட்சி பட்டறைகளை நடத்தவுள்ளார்கள். இதன் மூலம் இயற்கை விவசாயம் தொடர்பாக மிக பெரிய விழ்ப்புணர்ச்சியை கொண்டுவர முடியும் என்ற நம்பிக்கை உண்டு. இதைவிட விவசாயிகளுக்கான இயற்கை விவசாயம் பற்றி வழிகாட்டல் பயிற்சிப் பட்டறை,  யாழ்ப்பாண மாவட்டம், மட்டக்களப்பு, அம்பாறை, முல்லைத்தீவு மாவட்டம், கிளிநொச்சி மாவட்டம், மன்னார் மாவட்டம், வவுனியா மாவட்டம் ஆகிய இடங்களில் நடைபெற இருக்கின்றன. மண்ணை வளப்படுத்துவது போன்ற முறைகளையும், அமிர்தகரைசல், பஞ்சகவ்யா, தசகாவ்யா போன்று பலவகையான இயற்கை உரங்களைத் தயாரிக்கவும் மற்றும் பூச்சி விரட்டி தயாரிக்கும் முறைகளையும் அறிந்து கொள்ள இப்படியான விவசாயப் பயிற்சிப் பட்டறைகள் உதவியாக இருக்கின்றன.
இவற்றின் மூலம் வேலையில்லா பிரச்சனைக்கு ஓரளவு முடிவு கட்ட முடியும். மற்றும் தனிமனித பொருளாதாரம், விவசாய பொருட்களின் ஏற்றுமதி, புதிய பயிர்களின் உற்பத்தி, புதிய முறையிலான தொழில் துறைகளை கண்டுபிடித்தல், புலம்பெயர் மக்களின் உதவி கொண்டு துறைசார் தொழிநுட்ப வளங்களை பகிர்ந்து கொள்வது போன்றவற்றினுடாக வளர்ச்சியடைய முடியும் என்ற நம்பிக்கையுடன் 2018 ஜனவரி 01 ஆம் திகதி முதல் ஜனவரி 15 ஆம் திகதி வரை உள்ள நாட்களில் புதிய வெளிச்சம் தாயக மண்ணில் பயணிக்க இருக்கின்றது. இது போன்ற சந்தர்ப்பம் மீண்டும் கிடைக்குமா என்பது தெரியவில்லை, எனவே விவசாயத்தில் ஆர்வம் உள்ளவர்கள் இத்தகைய பயிற்சிப் பட்டறைகளில் பங்குபற்றி இது பற்றி அறிந்து கொள்வது சிறந்தது. இந்தப் பயிற்சிப் பட்டறைகளைத் தொடர்ந்து இறுதியாகப் பொங்கல் விழா கிளிநொச்சியில் சிறப்பாக நடைபெற இருக்கின்றது. கனடாவிலும் தை மாதத்தை மரபுத்திங்களாகக் பிரகடனப் படுத்தி இருப்பதால் நாங்களும் தமிழர் திருநாளாம் தைப்பொங்கலை மகிழ்வோடு  கொண்டாடுவோம்.
குரு அரவிந்தன்