புதிய வெளிச்சம்

நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம். புதிய வெளிச்சம் தன்னுடைய முதலாவது செயல்திட்டத்தை முடித்துக்கொண்டதன் பின்னர் பலரும் என்னிடம் தனித்தனியாக கேட்ட கேள்விகளுக்கு விடையளிக்கும் முகமாகவும் புதிய வெளிச்சம் தொடர்பான ஒரு தெளிவை ஏற்படுத்தும் முகமாகவும் சில விடயங்களை உங்களோடு பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.

2009 பேரழிவிற்குப் பின்னர் எமது சமூகம் அடைந்திருக்கும் துயர நிலை ஒருவகை மன அழுத்தத்தைத் தந்துகொண்டிருந்தது. இருந்தாலும் இதை ஒரு சவாலாக நாம் ஒவ்வொருவரும் எடுத்து விரைவில் இந்த நிலையை மாற்றி முன்னகரவேண்டும் என்ற எண்ணம் எனக்குள் எப்போதும் ஓடிக்கொண்டிருக்கும். இது விடயமாக நான் 2010, 2011, 2012 , 2013,  2015 ஆகிய ஆண்டுகளில் தொடர்ச்சியாக இலங்கை சென்று வந்திருந்தேன் . பாடசாலை கற்றல் அபிவிருத்தி , சிறு கைத்தொழில்களை ஊக்குவித்தல் , உள்ளூர் உற்பத்திகளை சர்வதேச மயப்படுத்தல் போன்ற கருத்தரங்குகளை மேற்கொண்டேன்

முதலில் அதன் அடிப்படையில் போரினால் பாதிக்கப்பட்ட எமது மக்களை குறிப்பாக விதவைகளை நேரில் சந்தித்து அவர்களுக்கு நம்பிக்கையும் தைரியமும் அதிகரிக்கக்கூடியவாறான கலந்துரையாடல்களையும் செயல்திட்டங்களையும் மேற்கொண்டு உதவலாம் என தீர்மானித்திருந்தேன்.

இதன் முதல் கட்டமாக தமிழகத்தைச் சேர்ந்த உளவியல் ஆற்றுப்படுத்துகை மற்றும் நெறிப்படுத்துகையினை செவ்வனே செய்யக்கூடியவரான பேராசிரியர் Dr ஜெயந்தசிறீ பாலகிருஸ்ணன் அவர்களும் ,பேராசிரியர் Dr பாலகிருஸ்ணன்  அவர்களும் தங்களுடைய  நேரத்தையும் உழைப்பையும் இலவசமாக தரமுன்வந்தார்கள் .

இவர் பேராசிரியர் , முனைவர் கடந்த 35 வருடங்களாக இளநிலை , முதுநிலை மற்றும் ஆராட்சி பேராசிரியராக கோயம்புத்தூர் பல்கலைக்கழகத்தில் பணிபுரிந்து வருகின்றார் .தமிழ்,ஆங்கிலம் ஆகிய இரண்டு மொழித்துறையில் Doctor  பட்டங்களை பெற்றவர் .இந்தியாவில் பல்கலைக்கழகங்களில் பாடத்திட்டத்தை வரையும் குழுவிலும் , சிறந்த பேச்சாளராகவும் , மொழிபெயர்ப்பாளராகவும் , எழுத்தாளராகவும் மட்டுமல்லாது பெண்கள் மன நல , சமூக நல திட்டங்களில் பங்கு கொண்டு  முன்னெடுத்துள்ளார் . இவரை கடந்த வருடம் இகுருவி நிகழ்வுக்கு டொரோண்டோ அழைத்ததன் மூலம் ஈழத்துக்கு வருமாறு அன்புடன் கேட்டுக்கொண்டேன் .
அடுத்து அப்பயணத்தை ஒழுங்குபடுத்த மனிதவளமும் பொருள்வளமும் தேவைப்பட்டது. என்னுடைய ஒன்லைன் மார்க்கெட்டிங் மற்றும் பத்திரிகைப்பணி   நடுவிலும் நானே செல்லவேண்டி ஏற்பட்டது. இது ஒரு இலாபநோக்கமற்ற விடயம் என்பதால் என் விளம்பரதாரர்களிடம் இருந்து பொருள்வளத்தையும் பெறவிரும்பவில்லை. அத்துடன் என் நண்பர்கள் சிலர் உதவ முன்வந்ததையும் ஏற்றுக்கொள்ள எனக்கு கொஞ்சம் சங்கடமாக இருந்தது.  ஆகையால் இம் முதல் முயற்சிக்கு என் மனித வளத்தையும் பொருள்வளத்தையும் இயன்ற அளவு பயன்படுத்துவது எனத் தீர்மானித்திருந்தேன்.மற்றவர்களுக்கு புத்துணர்ச்சியையும் , ஆற்றுப்படுத்துகையும் , நம்பிக்கையும் தைரியமும் நன்மையும் , மன வளர்ச்சியையும் தரக்கூடிய இந்த செயல்திட்டத்திற்கு ‘ புதிய வெளிச்சம்’ என்று பெயர்வைத்தோம். மூன்று விதமாக எம்மக்களை பிரித்தோம்  போரின் எல்லா வகையான காயங்களையும் சுமந்து துண்பப்பட்டுக்கொண்டிருக்கும் மக்களை குறிப்பாக பெண் தலைமைத்துவங்களை கொண்ட மக்களை , போராளிகளான  “நிகழ்கால ” மக்களையும் , போரினால் தொடர்ந்து துன்பத்தை அனுபவித்து கடந்து சென்ற ‘ கடந்தகால” மக்களையும் , போரினால் பாதிக்கப்படட என் தேசத்தில் பிறந்த எதிர்கால முத்து மணிகள் போன்ற எமது “எதிர் கால ” குழந்தைகளையும் அவர்களது ஆசிரியர்களையும் சந்திப்பதற்காக அக இருள் விலகணும் அகவெளி திறக்கணும் புதிய வழி பிறக்கணும் தமிழ் இனம் சிறக்கணும் என்ற தாரக மந்திரத்தோடு தாயகத்திற்குச் சென்றோம்.கடந்த செப்ரெம்பர் மாதம் 26 ஆம் திகதி தொடக்கம் அக்டோபர் தொடக்கம் 6 ஆம் திகதி வரையான சுமார் இரண்டுவார காலப்பகுதியில் யாழ்ப்பாணம், திருகோணமலை மட்டக்களப்பு முல்வைத்தீவு கிளிநொச்சி மன்னார் மலையகம் ஆகிய பிரதேசங்களில் உள்ள பல்வேறு பாடசாலைகளிலும் பொது மண்டபங்களிலும் நடைபெற்ற உளவியல் ஆற்றுப்படுத்துகைக் கருத்தரங்கில் அண்ணளவாக பத்தாயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பங்குகொண்டு பயன்பெற்றார்கள்.

இக்கருத்தரங்கிலும் கலந்துரையாடல்களிலும் பெற்ற அனுபவங்களையும் அங்குள்ள மக்களின் நிலையையும் தெரியப்படுத்தும் முகமாகவும் அடுத்து என்ன செய்யவேண்டும் என்பது தொடர்பாகவும் கனடாவில் உள்ள நண்பர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களுடன் கடந்த வாரம் ஒரு கலந்துரையாடலை ஒழுங்கு செய்திருந்தேன்.

அதில் கலந்துகொண்டு கருத்துக்களையும் எண்ணங்களையும் வாழ்த்துக்களையும் பகிர்ந்துகொண்ட அனைவருக்கும் நன்றி. செயல்த்திட்டங்களோடு மட்டும் நின்றுவிடாது செயல்ப்பாட்டு இயக்கமாக தொடர்ந்து செயலாற்றவேண்டும் என்ற உங்கள் அனைவரதும் வேண்டுகோளின்படியும் விருப்பின்படியும் புதிய வெளிச்சம் தொடர்ந்தும் எம் சமூகத்திற்கான வெளிச்சம் தேடி விருப்பும் அர்ப்பணிப்பும் கொண்ட உங்கள் ஒவ்வொருவரையும் இணைத்துக்கொண்டு பயணிக்கும்.

மகாத்மா காந்தி , விவேகானந்தர் , அப்துல் கலாம் ஆகியவர்களுக்கு பின்னர் எம் தேசத்துக்கு வந்த Dr ஜெயந்தசிறீ பாலகிருஸ்ணன் அவர்களுக்கு எனது அன்பான நன்றிகளை தெரிவித்து , புதிய வெளிச்சத்தின் அடுத்த செயல்திட்டம் தொடர்பாக தொடர் கலந்துரையாடல்கள் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. அன்பும் ஆதரவும் நல்கும் அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

அக இருள் விலகணும்! அகவெளி திறக்கணும்! புதிய வழி பிறக்கணும்! தமிழ் இனம் சிறக்கணும்

அன்புடன்
நவஜீவன் அனந்தராஜ் BSc

புதிய வெளிச்சம்

Tel : 416 272 8543