இளையோருக்கான “புதிய வெளிச்சம் ” ( மார்ச் 31.2017) அனுமதி இலவசம் : 15 வயது முதல் 32 வயதிற்கு

 நீண்ட பெருந்துயரை ஏற்படுத்திய மூன்று தசாப்தகால போரையும் அது பிரசிவித்திருக்கும் மக்கள் சமூகத்தையும் பிரதிநிதித்துவம் செய்யும் ஊடகம் என்ற வகையில் தகவல் தொடர்பு சாதனம் என்ற எல்லைகளை கடந்து மக்கள் ஊடகமாக தன்னை மாற்றியமைக்கும் செலய்பாடுகளை நாம் ஆரம்பித்தோம்  .

கடந்த வருடம் தாயக மக்களின் உளவியல் பிரச்சினைகளுக்கான தீர்வினை தேடும் ஒரு நெடும் பயணத்தை ‘புதிய வெளிச்சம்’ என்ற பெயரோடு ஆரம்பித்தோம்இப்பயணத்தில் முக்கிய விடயமான உளவியல் ஆற்றுப்படுத்துகை மற்றும் நெறிப்படுத்துகையினை செவ்வனே செய்யக்கூடியவரான பேராசிரியர் ஜெயந்தி ஸ்ரீ பாகிருஸ்ணன் அவர்கள் தன்னுடைய நேரத்தையும் உழைப்பையும் தரமுன்வந்தார்.

புதிய வெளிச்சம் வடக்கு கிழக்கில் 20 நாட்கள் நடத்திய 18 உளவள ஆற்றுப்படுத்துகை செயலமர்வில் சுமார் 10,000 பேர் வரையில் கலந்து கொண்டனர். தமது மன அழுத்தங்களை குறைப்பதற்கு இது போன்ற தொடர் செயல்பாடுகளின் அவசியத்தை அவர்கள் எமக்கு தங்கள் கண்ணீர் மூலம் எமக்கு வெளிப்படுத்தியிருந்தனர்.

எமது மக்களுக்காக நாம் ஆற்ற வேண்டிய பெரும் பணி காத்திருக்கின்றது என்ற உண்மையினையும் அதனை நிறைவேற்ற புலம்பெயர் சமூகத்தை ஒருங்கிணைக்கும் தேவை எழுந்துள்ளது என்ற உண்மையினையும் நாம் அந்த கண்ணீரின் வழியே தரிசித்தோம்.

புதிய வெளிச்சம் ஒன்றை நோக்கி எமது மக்கள் காத்திருக்கின்றார்கள் அவர்கள் மனங்களில் யுத்தம் ஏற்படுத்தியிருக்கும் அக இருளை அகற்றி நம்பிக்கை விதைகளை தூவ இது போன்ற செயல்பாடுகள் அவசியம் என்பதையும் இது நாம் மட்டுமே செய்து முடிக்கக் கூடிய  விடயமல்ல என்பதையும் நாம் அறிந்தோம்

ஒரு கை ஓசை தராது என்பதை நன்குணர்ந்த நாம் இந்த பெரும் பணியை தூக்கிச் சுமக்கும் நல்ல தோள்களை தேடும் வகையில் எமது வருடாந்த இகுருவி நிகழ்வினை இம்முறை வித்தியாசமாக நடத்த திட்டமிட்டுள்ளோம். வழமையான இகுருவி விருதுகள் மற்றும் சிறப்புரைகள் ஆகியவற்றோடு மட்டும் நின்று விடாது புதிய வெளிச்சத்தின் அடுத்த பரிமாணங்களை தேடும் முயற்சிகளையும் வெவவேறு நிகழ்வுகளின்  ஊடாக மேற்கொள்ள நாம் திட்டமிட்டுள்ளோம்.

இளையோருக்கான “புதிய வெளிச்சம் ” பட்டரை ( மார்ச் 31.2017) அனுமதி இலவசம்

இங்கு புலம்பெயர் மண்ணில் வாழும் எமது இளம் தலைமுறையினர் மத்தியில் அண்மை நாட்களாக அதிகரித்து வரும் வேறுபட்ட பல சவால்களை எதிர்கொள்வது குறித்து இளையோருக்கான விசேட செயலமர்வினையும் இகுருவி இம்முறை ஒழுங்கு செய்துள்ளது.கனடாவில் வாழும் 15 வயது முதல் 32 வயதிற்கு இடைப்பட்டவர்களுக்காக பேராசிரியர் ஜெயந்தி ஸ்ரீ பாகிருஸ்ணன் அவர்கள் தலைமையில் நடைபெறும் இந்த அமர்வு ஆங்கிலத்தில் நடத்தப்படவுள்ளது.

இங்கு வாழும் எமது இளம் தலைமுறையின் சந்திக்கும் பல்வேறு விதமான சவால்களுக்கான தீர்வுகளை தேடும் ஒரு முயற்சியாக இந்த அமர்வு ஏற்பாடு செய்யபட்டுள்ளது.

கனடாவில் உள்ள பல்வேறு இளையோர் அமைப்புகள் மற்றும் சமூக அமைப்புகள் இந்த நடவடிக்கையில் எம்முடன் இணைந்து செயல்பட முன்வந்துள்ளன.

தமிழ் இளையோர் மத்தியில் அதிகரித்து வரும் மண முறிவுகள்( விவாகரத்து ), போதைப்பொருள் பாவனை, குழு வன்முறைகள், கல்வி செயல்பாடுகளின் புறக்கணிப்பு என நாங்கள் வெளிப்படையா பேச தயங்கும் அல்லது பேச மறுக்கும் விடயங்கள் பேசப்படாமலே போனால் என்னவாகும் என்ற கேள்விக்கான விடையினை தேடும் ஒரு முயற்சியாக இந்த செயலமர்வு எதிர்வரும் மார்ச் மாதம் 31ம் திகதி நடைபெறவுள்ளது.

புதிய வெளிச்ச செயல் அமர்வு : ( ஏப்ரல் 06 , 2017) முன் கூட்டிய பதிவு உள்ளவர்கள் மாத்திரம் call 416 272 8543

ஏப்பிரல் மாதம் 5ம் திகதி மாலை ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த விசேட செயலமர்வின் மூலமாக நீங்கள் இதுவரை அறிந்து கொள்ளாத  எமது மக்களின் பாடுகளை தெரிந்த கொள்ள முடியும். இந்த செயலமர்வில் பேராசிரியர் ஜெயந்தி ஸ்ரீ பாகிருஸ்ணன் அவர்களோடு தாயகத்தில் உளவள ஆற்றுப்படுத்தல் செயல்பாடுகளையும் மனித வலுவூட்டல் செயல்திட்டங்களையும் முன்னெடுத்து வரும் சில முக்கிய செயல்பாட்டாளர்களையும் நீங்கள் சந்திக்க முடியும்.

கனடாவில் உள்ள சமூக அமைப்புகள், ஊர்ச் சங்கங்கள், பாடசாலை பழைய மாணவர் சங்கங்கள் மற்றும் தன்னார்வ அமைப்புகள் என அனைவரும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டு தமது ஆதரவை வழங்க வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பாகும். இது எம் எல்லோருக்கும் பொதுவான ஒரு முயற்சி என்பதால் உங்கள் பங்களிப்பே எமது மக்களின் வாழ்வில் புது வெளிச்சத்தை கொண்டு வரும் என்று நாம் உறுதியாக நம்புகின்றோம்.

ஒரு ஊடகமாக எங்கள் வலுவையும் மீறி நாம் இதுபோன்ற சில நல்ல முயற்சிகளை மேற்கொள்ள உங்கள் அசைக்கமுடியாத பேராதரவே காரணம். இடைவிடாது எம்மை அரவணைத்து நிற்கும் உங்கள் புரிதல்களுக்கு எங்கள் நெஞ்சார்ந்த நன்றிகள்.

இனி ஒரு புது விதி செய்வோம் அது எம் எல்லோர் வாழ்விற்கும் ‘புதிய வெளிச்சம்’ கொண்டு வரும்.

அன்புடன்

நவஜீவன் அனந்தராஜ்